Saturday, January 31, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

================

 இணுவில் கந்தசாமி கோவில்

  

இலங்கையின் அறுபடை வீடுகளில் நாலாவது வீடாகும்

  

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது.

 

இதன் வராலாறு

 

யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.

 

"ஒரு நாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிளம்பு தெரியும் இடம் முதலியார் வீடு இருந்த திசையே என்பதை உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாற்புறத்தில் இருந்தும் அவரது வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களும் இன்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். அதற்கு முதலியார் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்து விட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தன் குடிமக்களுக்கும் நல்லருள்பாலிக்கும் பொருட்டுக் காட்சி கொடுத்துள்ளாரென மனம் நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். திருவருள் சித்தத்திற்கிணங்க முருகப் பெருமானையும், வைரவப் பெருமானையும் தன் இல்லத்தில் குடிலமைத்து அமைத்து வழிபட்டு வந்தாரென ........" [1]

 

தற்போது இக்கோயிலுக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு கோயில், மேற்சொன்ன கனகராச முதலியின் நினைவாக மக்கள் நடுகல் நாட்டி வழிபட்ட இடம் எனக் கருதப்படுகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போத்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்ததுடன், இந்துசமய வழிபாட்டுக்கும் தடை விதித்தனர். இதனால் கனகராச முதலியால் அமைக்கப்பட்ட கோயிலும் அழிந்து போனது. 1661 ஆம் ஆண்டில் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. இது தொடர்பிலும் ஒரு கதை உண்டு.

 

"அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படியும், தான் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் கூறி "உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள நொச்சிமரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்". அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கு இணங்கப் புதிதாக ஒரு நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச் சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். அவ்விடத்திற் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்."

 

அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் இன்று கருவறைக்கு அருகில் இருப்பது மேற்சொன்ன நொச்சி மரமே என்றும் கருதப்படுகிறது.

  

1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது.[5] 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967 ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின.. அங்கிருந்து ஐந்தாவது படை வீட்டைக் காண கிளம்பினோம்

 



பயணம் தொடரும்.

 

 



 

No comments: