Tuesday, January 6, 2026

 




 


வால்மீகியின்
 

கிஷ்கிந்தா காண்டம்
 


ஹனுமனின் எழுச்சி                
 


பதிவு எண் 401
 



நேற்றைய தொடர்ச்சி
 


 ஜாம்பவான் ஹனுமனின் பிறப்பைப் பற்றிச் சொல்லுகிறான் ..........



நீ குழந்தையாய் இருக்கும் பொழுதே அற்புதமான காரியம் ஒன்றைச் செய்தாய். சூரியன் உதயமானப்போது அதனைச் சிவந்த பழம் என்று எண்ணினாய். உடனே ஆகாயத்தில் தாவினாய்  சூரியனுடைய ஒளியானது அப்பொழுது உன்னைத் துன்பப்படுத்தியது. அதை நீ லட்சியம் செய்யவவில்லை. சிறுதும் அஞ்சவும் இல்லை நீ தொடர்ந்து தாவிச் சென்று கொண்டே இருந்தாய்.
 


இதைக் கண்டு இந்திரன் கோபம் கொண்டான். உடனே வஜ்ராயுதத்தை  உன்மேல் எறிந்தான். அது தாக்கியதால் அங்கிருந்து விழுந்தாய். அப்படியே ஒரு மலைச் சிகரத்தில் வந்து உன் கன்னம் மோதியது. கன்னத்தில் இருந்த எலும்புகள் முறிந்தன. அதனால் உனக்கு ஹனுமன் என்ற பெயர் உண்டாயிற்று. இதைக் கண்டு உனது தந்தையான வாயு பகவான் கோபம் கொண்டார். அவ்வளவுதான். காற்று வீசுவது முழோதுமாக நின்றது.. அதனால் மூன்று உலகில்  இருந்த அனைத்து உயிர்களும் மூச்சு விட முடியாமல் துன்பப்பட்டன..
 


உடனே தேவர்கள் பயங்கொண்டனர். வாயு பகவானிடம் சென்று உலகத்தைக் காப்பாற்றும்படி வேண்டினர். அதனால் அவர் கோபம் தணிந்தது. காற்று முன்புபோல் வீசத் தொடங்கியது. உயிரினங்கள் பிழைத்தன.
 


அப்பொழுது பிரமதேவர் ‘எப்பொழுதும் உனக்கு ஆயுதங்களால் மரணமில்லை” என்று வரம் தந்தார். இந்திரனோ வஜ்ராயுதத்தால் அடிபட்டும் அனுமன்  இறக்காமல் இருப்பதைக் கண்டு ‘என்றும் நீ சிரஞ்சீவியாய் இருப்பாய்” என்று வரம் அருளினான். இதுவே உனது வரலாறு. என்று ஜாம்பவான் சொல்லி முடித்தான்.
 

(ஹனுமனின்  இந்த வரலாறு உத்தர காண்டத்தில் சில மாற்றங்களுடன் காணப்படுகிறது.) ஹனுமனின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த  வானர வீரர்கள் ஆரவாரம் செய்தனர். மீண்டும் ஜாம்பவான் பேசினான். “வீரனே! இளம் வயதிலேயே இத்தகைய பராக்கிரமங்களைச் செய்தவன் நீ. இப்பொழுது உடல் வளர்ச்சி பெற்று  பெரும்  ஆற்றலையும் பெற்றுள்ளாய்.



============== 
वयम् अद्य गत प्राणा भवान् अस्मासु सांप्रतम् |
दाक्ष्य विक्रम संपन्नः कपि राज इव अपरः || ४-६६-३१
===============

 

எனவே கடலைத் தாண்டிச் செல்லும் ஆற்றலும் பராக்கிரமும்  வாய்ந்தவன் நீ ஒருவன் தான். உன் தந்தை வாயு பகவானைப் போல் வேகமாக இந்தக் கடலைத் தாண்டிச் சென்று சீதையைத் தேடிக் கண்டுபிடித்து வா” என்று சொன்னான்.
 



தொடரும்


No comments: