Sunday, January 11, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்”

=================

இரண்டாம் நாள் பதிவு மூன்று

அன்னை சீதை தீக்குளித்த இடத்திலிருந்து நாங்கள் சீதை அம்மன் கோவிலுக்குச் சென்றோம். இது சீதா எலிய அம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் கோவில் இது. இது நுவரலியா மாகாணத்தில் உள்ளது. இததான் அசோக வனம் இராவணன் சீதையை காவலில் வைத்திருந்த இடம்.. சீதையைச் சிறை வைக்க இராவணன் இயற்கையாகவே அந்த தோட்டத்தை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ஹகோல என்று பெயர்.

அங்கு இராமன், சீதை இலக்ஷ்மணன் ஆகியோரின் பழைய சுயம்பு விக்கிரகங்கள் உள்ள இடமும் உள்ளது. விக்ரஹத்தைப் பாது காப்பதற்காக அந்த விக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில்லை. பதிலுக்கு அருகிலேயே புதிய விக்ரகங்கள் உள்ளன அதற்கு பூஜை செய்யப்படுகிறது, அருகில் சீதை விக்ரகம் தனியாக உள்ள சந்நிதானம் உள்ளது. அந்த இடத்தில் தான் அசோக மரத்தின் அடியில் சீதை அமர்ந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அருகில் சீதைக்கு ஹனுமான் கணையாழி கொடுத்த விவரத்தைக் காட்சிப் படுத்தியிருந்தனர். அந்தக் கோவிலின் பின் புறத்தில் சிறிய மலையாறு ஓடுகிறது. அது ஓரிடத்தில் பூமிக்குள்ளே சென்று சில அடிகளுக்கு அப்பால் கொப்புளித்து வெளி வருகிறது.

ஹனுமன் இலங்கைக்கு தீ வைத்தது எல்லோருக்கும் தெரியும். அப்போது சீதை சிறையிருந்த இந்த அசோக வனமும் கரிந்து போய் விட்டதாம். சீதையை வருத்திய இராவணன் மீது வனத்தில் இருந்த மரங்கள் கூடக் கோபம் கொண்டவை போல இவ்வசோக மரங்கள் செந்நிறப் பூக்களுடன் காட்சி அளிப்பதாக திரு கி. வா. ஜகந்நாதன் தனது சுற்றுப் பயண நூலில் தெரிவிக்கிறார். ஹனுமன் மூட்டிய தீயினால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்கச் சீதை அங்கும் இங்கும் பார்த்தாளாம். உடனே அவள் ஒரு குன்றிலே காலிள் ஊன்றினாளாம். அவ்வளவுதான் கற்பாறையிலிருந்து குளிர்ந்த நீர் பீரிட்டு வெளி வந்தது இது வற்றாத நீரூற்றாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என்று இதைப் பற்றிய செய்திகளை திரு குல சபாநாதன் தொகுத்து எழுதியுள்ளார்.

கோவில் அவ்வளவு சுத்தமாக உள்ளது. கோவிலைப் பிரிய மனமே இல்லை. பயண அமைப்பாளார் எங்களை அழைக்கவே அங்கிருந்து கிளம்பினோம்.

https://www.youtube.com/watch?v=X1Z9jLnS5WM&t=132s








No comments: