Monday, January 19, 2026

 



 


வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்


 இராமன் வாலி உரையாடல் 

பதிவு எண் 414

 

நேற்றைய தொடர்ச்சி...........

  

வாலியின் வாதங்களில் மற்றொன்று: சுக்ரீவனிடமிருந்து உதவி பெற என்னைக் கொல்ல முனைந்துள்ளீர்கள். என்னை முதலில் அணுகியிருந்தால், உமது மனைவியைக் கடத்திச் சென்ற அந்த இராவணனை நான் ஒரே நாளில் இங்கு கொண்டு வந்திருப்பேன். அதுவும் அவனைக் கொல்லாமல், கயிற்றால் கட்டி தங்களிடம் கொண்டு வந்திருப்பேன். சீதையை தங்களுக்கு அர்ப்பணித்திருப்பேன்.

 

இதற்கு ஸ்ரீ இராமர் அளித்த பதில்: தர்ம சாஸ்திரங்களின்படி, ஒரு மன்னன் தனது எதிரியை வெற்றிகொள்ள நட்புடைய மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி, உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு உறுதியளித்தேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால், அந்த வாக்கை தற்போது நிறைவேற்றியுள்ளேன். நீ தர்மத்தின் விதிகளை மீறியவன். மேலும், நீ எனது நண்பனான சுக்ரீவனின் எதிரி என்பதால், எனக்கும் நீ எதிரியே.

 

ஸ்ரீ இராமர் முதலில் சந்தித்தது சுக்ரீவனைத்தான், அப்போதே வாலியைக் கொல்வதாக உறுதிகொடுத்தார். எனவே, வாலியுடன் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை. வாலி மன்னிக்கப்பட்டால், சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் சிக்கல் வந்திருக்கும். மேலும், வாலியே இராவணனை அடக்கி சீதையை அழைத்து வந்திருந்தால், இராவணனைக் கொல்வதற்காகத் தோன்றிய இராமரின் லீலைகள் பூரணமானதாக அமைந்திருக்காது. இராவணனைச் சார்ந்த மற்ற அசுரர்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, ருமாவின் நிலை என்ன? எனவே, எப்படிப் பார்த்தாலும், வாலியின் பக்கம் எந்தவொரு நியாயமும் இல்லை, இராமரின் செயலில் எந்தவொரு அநியாயமும் இல்லை.

 

வாலியின் வருத்தமும் உன்னத இலக்கும்

 

முதலில் ஸ்ரீ இராமரை எதிர்த்து கூக்குரலிட்ட வாலி, இராமரின் அறிவு நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னர், தனது மோசமான செயல்களை எண்ணி வெட்கப்பட்டான். மனிதரில் மாணிக்கமே, தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, இதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் தவறிழைத்தவன், அறியாமையால் கடினமாகப் பேசிய என்னை மன்னித்து கருணையைப் பொழிய வேண்டுகிறேன்,” என்று கூப்பிய கரங்களுடன் வாலி இராமரிடம் வேண்டினான்.

 

பிறகு, பகவான் இராமர், “நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவித்துவிட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டாய்,” என்று வாலிக்கு உறுதியளித்தார். ஸ்ரீ இராமரின் வார்த்தைகளாலும் அம்பினாலும் புனிதமடைந்த வாலி மோக்ஷத்தையும் உன்னத இலக்கையும் அடைந்தான். இவையெல்லாம் வாலிமீது பகவான் இராமர் கொண்ட கருணையே.

 

தொடரும்

No comments: