Monday, January 26, 2026






துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் நான்கு

 

நேற்றைய தொடர்ச்சி..........................

  

சுக்ரீவன் தனது படை வீரர்களை எல்லாம் வரவழைத்து சீதையைத் தேடும் முயற்சியில் நான்கு திசைகளுக்கும் அனுப்பினான். அங்கதன் தலைமையில் ஹனுமன் உட்பட பலர்  தென்திசை சென்றபோது இராமன் தனது கணையாழியைச் சீதையிடம் கொடுக்கும்படி ஹனுமன் கையில் கொடுத்தான். ஜடாயுவின் சகோதரன் சம்பாதி மூலம் சீதை இலங்கை அசோக வனத்தில் இருப்பதாக அவர்கள் தெரிந்து கொண்டனர். இலங்கையை அடைய பெருங் கடலைக் கடக்க வேண்டும். பல வீரர்களாலும் இயலாத நிலையில் ஜாம்பவான் ஹனுமன் ஒருவனால் தான் இதைச் செய்ய முடியும் என்று நினைத்து ஹனுமனை ஊக்கப்படுத்தி இலங்கைக்குச் செல்லச் சொல்கிறான்.

ஹனுமனும் அவ்வாறே சீதையைக் காண மகேந்திர மலையின் உச்சியிலிருந்து புறப்படுகிறான்.

 

ஹனுமான் முதன்முதலில் ஸ்ரீஇராமனை தரிசித்த கதையுடன் கிஷ்கிந்தாக் காண்டத்தை ஆரம்பிக்கிறார் துளசிதாசர்.

  

கிஷ்கிந்தாவும் அதன் மக்களும்

  

சீதையை இராவணன் அபஹரித்துச் சென்று விடுகிறான்.  அவளைத் தேடி வரும் வழியில் இராவணனுடன் சீதையைக் காப்பாற்ற போரிட்டு குற்றுயிருடன் கிடக்கும் ஜடாயுவைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்டு ஜடாயுவுக்கு மோட்சம் அளித்துவிட்டு வரும் வழியில் கபந்தனையும் அழித்து அவன் மூலம் சுக்ரீவனைச் சந்திக்க வருகின்றனர். வழியில் சபரிக்கு மோட்சம் அளித்து விட்டு  ரிஷ்யமுக மலைக்கு அருகில் வருகின்றனர். இந்த மலைக்கு ரிஷ்யமுக என்ற பெயர் ஏன் வந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

 

1. இந்த மலை ஏழு கொம்புகள் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.

 

2.மதங்க முனிவர் இங்கு அமைதியாகத் தவம் புரிந்ததால் இந்தப் பெயர் வந்தது

 

.3. இந்த மலையில் உள்ள மான்களில் மூன்று வகை உண்டு. கோகர்ண, கேன், ரிஷ்ய .இந்த மூன்று வகைகளில் ரிஷ்ய என்ற மான் மட்டும் மிக அமையதியாக இருக்கும். ஆகவே இந்தப் பெயர் வந்தது..

 

4. பொய் சொல்பவர்கள், அதர்மிகள் இந்த மலைக்கு வந்தால் இறந்து விடுவர். மதங்க முனிவர் அமைதியாக இருந்து வேதங்களை உச்சரித்ததால் இந்தப் பெயர் வந்தது.

  

இந்தப் பகுதி  முதலில் இந்த உலகத்தைப் படைத்த பிரம்மாவால் உருவாக்கப்பட்டது. அது ஒரு தடிமனான உறையைக் கொண்டிருந்தது. பசுமையான மரங்கள், செங்குத்தானதாகவும், கொடிகள் மற்றும் அடிமரங்களால் அடர்த்தியாகவும் மூடப்பட்டிருந்தன. ஏறுவது மிகக்கடினம். இதனால்   அது மேலும் அணுக முடியாததாக மாறியது. அதன் மீது எங்கும் கொடிய விஷமுள்ள பாம்புகள் அதிகம் இருந்ததால் அந்த இடத்திற்கு யாரும் வருவதில்லை. மக்கள் யாரும் வசிக்காததால் அந்த இடத்திற்கு வருவதைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. மேலும் கிஷ்கிந்தையின் அரசனான வாலி, துந்துபி என்ற அரக்கனைக் கொன்று தூக்கி வீசியபோது அவனது இரத்தம் தோய்ந்த உடல் ரிஷ்யமுக மலையில் உள்ள மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்து அதனின் புனிதத் தன்மையை அழித்தது. இதைக் கண்ட மதங்க முனிவர் சினமுற்று வாலியோ அவரைச் சார்ந்தவர்களோ இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் அவர்கள் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சபிக்கிறார்.

  

கிஷ்கிந்தாவில் வசிப்பவர்கள் நாம் நினைப்பது போல உண்மையான குரங்குகளோ கரடிகளோ அல்ல.  இராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தா மக்களை நவீன கால "குரங்குகள்" அல்லது "கரடிகள்" என்று எளிதாக வகைப்படுத்த முடியாது. அவர்கள் ஒரு தனித்துவமான, புராணப்பூர்வமான இனக் குழுவினர்.

  

தொடரும்...............


No comments: