Friday, January 16, 2026

 




இலங்கையில்

ஏழு நாட்கள்

===============

நான்காம் நாள்: பதிவு எண் ஒன்று

முதல் நாள் இரவே மறுநாள் எங்கு செல்லப் போகிறோம் என்று நிகழ்ச்சி அட்டவணையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் சிகிரியா குன்றம் இராவணன் அரண்மணை (வெளியிலிருந்து) என்று போட்டிருந்தது. ஒரு ஆவல். ஏன் வெளியிலிருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு யோசனை. மறுநாள் அங்கு சென்றோம். பார்த்தோம். ஒரே பிரமிப்பு. ஒரு சிறு குழந்தையிடம் யானையைக் காட்டினால் வாயைத் திறந்து மூடாத கண்களுடன் எப்படிப் பார்க்குமோ அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தோம். வாழ் நாளில் பார்த்திராத ஒரு காட்சி. அரைமணி நேரம் நின்று ஆசை தீரப் போட்டோக்கள் எடுத்தோம். பிறகு இரவு வலையில் தேடியபோதுதான் அதன் பிரமாண்டம் புரிந்தது. கீழே ஒரு காணொளி இணைத்துள்ளேன். கண்டிப்பாகப் பாருங்கள். மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிகிரியா குன்றம் அல்லது சிங்க வாசல் என்பது மலைக்குச் செல்லும் வாயில். சிங்கம் போன்ற தோற்றம். மலையின் உச்சி தரையிலிருந்து 1145 அடிகள். மலையின் உச்சிக்குச் செல்ல 1200 செங்குத்தான படிகள் ஏற வேண்டும். எங்கள் குழுவில் எல்லோரும் அறுபது வயதிற்கு மேல். இப்போது தான் புரிந்தது ஏன் பயண அமைப்பாளர் எங்களை மேலே கூட்டிச் செல்லவில்லை என்று(இவங்க அதற்கு சரிப்பட்டு வரமாட்டாங்க) அதி அற்புதமான தோற்றம். உலக அதிசயங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.

இதன் வரலாற்றைச் சற்றுப் பார்ப்போம்

தாதுசேனன் என்பவன் கி. பி. 460 முதல்478 வரையில் அநுராத புரத்தில் ஆண்டான். அவனுக்கு அரசியினிடமாக மொக்கல்லானன் என்பவன் பிறந்தான்; வேறு ஒரு மனைவி மூலமாகக் காஷ்யபன் பிறந்தான். தாதுசேன மன்னனுக்கு ஒரு மகளும் பிறந்தாள். மன்னன் அவளைத் தன் தங்கையின் மகனுக்கு மணம் புரிவித்து அவனைப் படைத்தலைவனாக்கினான். படைத்தலைவனுடைய இல் வாழ்வில் சிறிது கலாம் மூண்டது. அரசனுடைய மகள் அவனை அவமதித்தாள். அவன் அவளை அடித்தான். இந்தக் கொடுமையை அவள் தன் தந்தையிடம் முறையிட்டுக் கொண்டாள். தாதுசேனனுக்குக் கோபம் மூண்டது. இதற்குக் காரணம் மாமியாரின் கொடுமையாக இருக்கலாம் என்று எண்ணினனோ என்னவோ, தன் மகளின் மாமியாராகிய தன் தங்கையை உயிரோடு .எரித்துவிட்டான். தாதுசேன மன்னன் செய்த இந்தக் கொடும்பாவத்தைத் தாங்க முடியாத. படைத்தலைவன் எப்படியாவது இந்தப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று உறுதி பூண்டான். தானே ஒன்றும் செய்ய இயலாதாகையால், மன்னனுடைய மக்களில் ஒருவனாகிய காஷ்யபனைத் தூண்டிவிட்டான். “நீ மன்னனுக்கு மகன் என்று பெயரளவிலே இருக்க வேண்டியவனே.உன் தாய் குலத்திலே பிறந்தவள் அல்ல என்று . மன்னனும் பிறரும் இழிவாக எண்ணுகிறார்கள். அரசியின் பிள்ளையாகிய மொக்கல்லானன் . தான் அரசனாவான். நீ பிறந்தும் பயனில்லாமல் வாழப் போகிறாய் ” என்றான். படைத்தலைவனின் துணையுடன் தனது தந்தையைச் சிறைப்படுத்தினான். இதைக் கண்டு பயந்த காஷ்யபனின் சகோதரன் மொக்கல்லானன் தப்பி தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டான்.



பிறகு நடந்தது என்ன அடுத்த பதிவில்



https://www.youtube.com/watch?v=Ab_fQhigA9U





No comments: