Sunday, May 24, 2026

 


காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 116

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

இராமன் எப்படி வாலியைக் கொல்ல உடனே ஒத்துக் கொள்கிறான்? உரையாசிரியர்கள் சொல்வதாவது சுக்ரீவன் இராமனின் நண்பன். நண்பனின் துயரத்தைத் தனது துன்பமாக நினைக்கிறான் இராமன். ஆதலால் சுக்ரீவனுக்காக வாலியைக் கொல்லுவேன் என்றான். जो अपराधु भगत कर करई। राम रोष पावक सो जरई॥ எவன் ஒருவன் இராமனின் பக்தனுக்கு குற்றம் இழைக்கிறானோ அவன் இராமனின் கோபம் என்னும் நெருப்பில் வெந்து சம்பலாவான்.

 

जे मित्र दुख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

निज दुख गिरि सम रज करि जाना। मित्रक दुख रज मेरु समाना॥1

 

ஆத்யாத்ம இராமாயணம்

 

वसाम्यद्य भवत्पादसंस्पर्शात्सुखितोऽस्म्यहम् ।

मित्रदुःखेन सन्तप्तो रामो राजीवलोचनः ॥ ५८॥

 

हनिष्यामि तव द्वेष्यं शीघ्रं भार्यापहारिणम् ।

इति प्रतिज्ञामकरोत्सुग्रीवस्य पुरस्तदा ॥ ५९॥

 

நண்பனின் துன்பத்தைக் கண்டு வருத்தம் கொள்ளாதவர்களைப் பார்த்தாலே பாவம் வந்து சேரும்.. எவன் தனது மலை போன்ற துன்பத்தைத் தூசு போலவும், நண்பனுக்கு வந்த தூசு போன்ற துன்பத்தை மலைபோலவும் நினைக்கிறானோ  அவனே உண்மையான நண்பன்” .எவன் ஒருவன் நண்பனின் துன்பத்தைக் கண்டு தான் துயரப்படுவதில்லையோ அவன் மகாபதகன்.. அவனுடன் தொடர்பில் இருப்பவர்களும் மகாபாதகர்கள். இங்கு கையை விட்டுப் போன அயோத்தி, வனவாசம், சீதையின் இழப்பு இப்படி மலை போன்ற துன்பங்களை உடைய இராமன் அவைகளை மறந்து சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான்.  இதைத்தான் வினயபத்ரிகா என்ற நூலில் சொல்கிறார்.

 

 

तिय-बिरही सुग्रीव सखा लखि, प्रानप्रिया बिसराई।

 

இராமன் தனது துன்பங்களை மறந்து சுக்ரீவனின் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் என்கிறார் துளசிதாசர்.

 

 

सखा सोच त्यागहु बल मोरें।

सब बिधि घटब काज मैं तोरें॥

==============

தொடரும்


Saturday, May 23, 2026

 





நினைவுகள்


மரங்களுக்கு

நினைவு

இருக்குமா?

இலையுதிர்

காலத்தில்

உதிர்ந்த

இலைகளை


--

வானத்திற்கு

நினைவு

இருக்குமா?

உதிர்ந்த

நட்சத்திரங்களை


-----


வாடிய

மலர்களுக்கு

நினைவு

இருக்குமா?

பழைய

நறுமணம்


--------

பறவைகளுக்கு

நினைவு

இருக்குமா?

இளம்

பருவத்தில்

சின்னஞ்சிறு

கூடு கட்டி

வாழ்ந்த

மரங்களை


--------

ஒருவேளை

இருக்கலாம்

இல்லாமலும்

இருக்கலாம்


-------

ஆனால்

நாம்

நினைவுகளால்

உருவாக்கப்பட்டவர்கள்

எதையும்

மறக்க

முடியாதபடி

சபிக்கப்பட்டவர்கள்

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 115

 

நேற்றைய தொடர்ச்சி

 

நண்பனின் துன்பத்தைக் கண்டு எவன் ஒருவன் தான் துன்புறுவதில்லையோ அவன் மகாபதகம் செய்தவன் ஆகிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது

 

இங்கு ஒரு கேள்வி எழலாம். வாலிக்குச் சுக்ரீவன் தான் விரோதி. இராமன் விரோதி இல்லையே? இராமன் மீது வாலி இதுவரை எந்தவித நேரடி தாக்குதலும் நடத்தவில்லையே.? பிறகு ஏன் இராமன் வாலியை கொல்லுவேன் என்று சூளூரைக்கிறான்.? அதற்குச் சில காரணங்கள் உள்ளன. சுக்ரீவனுக்காக இராமன் கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது தனது பாதுகாப்பிற்கு வாலி அச்சுறுத்தலாக இருக்கலாம் என இராமன் நினைத்தான்.

 

ஒன்று இராமனுக்குத் தெரியும் வாலி இராவணனின் நண்பன் என்று. அவர்களுக்குள் நட்புரீதியான உடன்பாடு ஒன்று உண்டு. அதாவது கிஷ்கிந்தை வழியாக எவரேனும் இலங்கைக்குள் நுழைந்து இராவணனைத் தாக்கினால் இராவணனை வாலி பாதுகாப்பான் என்பதாகும். இரண்டாவது இராமன் சுக்ரீவனைச் சந்தித்து வாலியைக் கொல்வதாக சுக்ரீவனுக்கு வாக்களித்த விவரம் அரசன் என்ற முறையில் ஒற்றர்கள் மூலம் வாலிக்குத் தெரியும். அதனால் இராமனையும் வாலி எதிரியாகவே கருதுவான். இராவணன் வாலிக்கு நண்பன் இராமனின் எதிரி. சுக்ரீவன்  இராமனுக்கு நண்பன் ஆனால் வாலியின் எதிரி, சீதையைத் தேடவேண்டும் என்றால் கிஷ்கிந்தையைக் கடந்து செல்லவேண்டும். ஆனால்  கிஷ்கிந்தைக்குள் காலடி எடுத்து வைப்பது இராமனுக்கு ஒரு அபாயகரமான விஷயம். 

 

ஒரு வேளை இராமன் வாலியிடம் நட்புக் கொண்டால், வாலி இராமனிடம் இலங்கைக்குச் செல்லும் காரணத்தைக் கேட்பான். இராவணின் நண்பன் என்ற முறையில் வாலி இராமனின் நோக்கத்தை ஒத்துக் கொள்ள மாட்டான். நண்பனுக்கு செய்துள்ள வாக்குறுதியை மீறி இராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டான்.

 

ஒரு வேளை  வாலி நடு நிலை வகிக்கிறான் என்று வைத்துக் கொண்டால் வாலி இராவணனுக்கு எதிராகப் போரிட மாட்டான். ஆனால் இராமனுக்கு இராவணனை எதிர்த்துப் போரிட ஒரு படை தேவை. ஆக வாலியைக் கொல்வதே  இதற்குத் தீர்வு என்று இராமன் கருதி சுக்ரீவனுக்கு வாக்களிக்கிறான்.

 

தொடரும்


Friday, May 22, 2026

 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 115

 

நேற்றைய தொடர்ச்சி

  

நண்பனின் துன்பத்தைக் கண்டு எவன் ஒருவன் தான் துன்புறுவதில்லையோ அவன் மகாபதகம் செய்தவன் ஆகிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது

 

ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः ।

महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥

(मनुस्मृति ११। ५४)

 ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः।

महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥ मनुः

 

பிராமணனைக் கொல்வது, , மது உண்பது ,  குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொளவது, தங்கத்தைத் திருடுவது பெரிய பாவங்களாகும்.  இத்தகைய பாவங்களைப் செய்தவர்களைப் பார்க்கவே கூடாது. நண்பனின் துயரத்தைக் கண்டு தான் துயருண்டு அவனுக்கு உதவ முன் வராதவன் மேற்கண்டப் பாவங்களை செய்தவனுக்கு இணையான பாவத்தைச் செய்தவனாகிறான்.

 குமாரசம்பவத்திலும் இது சொல்லப்பட்டுள்ளது

 

स्वजनस्यापि दुःखमग्रतो विवृतद्वारमिवोपजायते।

 

தனது நெருக்கமானவரின் துயரத்தை நேரில் காணும் போது, அது திறந்த கதவாக நம்முள் நுழையும் போலவே, நம்மை ஆழமாக பாதிக்கிறது.

 

துயரமோ நமக்கில்லை! 

துயரமெனும் சுழலோட்டம் 

துணைவனுக்கே வந்தாலே 

துளியென நம்முள் நுழைகின்றது!

 

அன்பினால் நம்மைச் சுடும் 

அழகான தீயே அது! 

நெருப்பாய் நெஞ்சை நனைக்கும் 

நெகிழ்வின் நாதமிதுவே!

 

தொடரும்


Thursday, May 21, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 114

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் வாலியை, சுக்ரீவன் 'इहाँ साप बस आवत नाहीं। तदपि सभीत रहाँ मन माही அதாவது அவன் சாபத்தினால் இங்கு வர முடியாது. ஆனாலும் எனக்கு அவனிடம் பயம் உள்ளது என்று சொன்னவுடன் வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதினான். கோபத்தின் வேகத்தில் சுக்ரீவனைத் தவறாக நினைத்து அடித்துத் துரத்தி இருக்கலாம். அதற்குப் பிறகு தனது அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து தாரையிடம் முழுவிவரங்கள் கேட்டுத்தெரிந்து கொண்டு சுக்ரீவனை மீண்டும் கிஷ்கிந்தைக்குள் அழைத்து இருக்கலாம். ஆனால் நிறைய காலம் கடந்த பின்னரும் வாலி அதைச் செய்யவில்லை. அதற்குப் பதில் தனது மகளாக நினைக்க வேண்டிய சுக்ரீவனின் மனைவி ரூமையை தன்னுடையவளாக வைத்துக் கொண்டதைக் கேட்டதும் இராமன் கோபமுற்று வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதி அவன் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவு செய்தான்.

 

மேலும் சுக்ரீவன் வாலிக்குப்  பயந்து எல்லா லோகங்களுக்கும் சென்றும் யாரும் அவனுக்கு சரண் அளிக்கவில்லை. அதனால் இராமன் வாலியை ஒரே பாணத்தால் கொல்லுவேன்  என்று சொல்லுகிறான். இந்திரனின் மகன் ஜெயந்தன் போல எந்த உலகத்திற்குச் சென்றாலும் பிரம்மா சிவனைச் சரணடைந்தாலும் அவன் தப்பமுடியாது என்று சொல்கிறான். தனது உறுதி மொழிக்கான காரணத்தையும் சொல்லுகிறான் இராமன்.

 

जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

 

எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கண்டு தானும் துக்கமடைவதில்லையோ, அவனைப் பார்ப்பதும் பாவம் என்கிறார் துளசிதாசர்.

 

துன்பம் தருவான் துணை நிற்கா தோழன் 

அன்பின் இலக்கணம் அல்ல  

நண்பன் துயரத்தில் நின்றிடா நெஞ்சினை 

பாவம் பெரிதெனப் பார்.

 

தொடரும்


Wednesday, May 20, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 113

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவன் இராமனிடம் வாலியால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் கூறினான்.

 

இராமனின் வாக்குறுதி

 

இவ்வாறு சுக்ரீவன் தனது உடலுக்கு ஏற்பட்ட துன்பத்தை रिपु सम मोहि मारेसि अति भारी என்பதன் மூலமும்  மனதிற்கு ஏற்பட்ட துன்பத்தை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் செல்வத்துக்கு ஏற்பட்ட இழப்பை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் இராமனிடம் முறையிட்டான்.

 

सुन सेवक दुःख दीनदयाला फरकि उठीं द्वै भुजा बिसाला॥7

 

சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன.. எல்லாவிதமான சேவைகளையும் செய்யத் सब प्रकार कारिहोँ सेवकार्ड தயாராக இருக்கிறேன் என்று சுக்ரீவன் சொன்னதால் அவனுடைய மனக் குமுறலைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன என்று சொல்கிறார் துளசிதாசர்.

 

இரண்டு புஜங்களும் துடித்தன என்பதற்கு உரையாசிரியர்கள் சில விஷயங்கள் சொல்கின்றனர். அதாவது இரு புஜங்களும் துடிப்பது போருக்கான அறிகுறி.. வெறும் வாளை வீசி சண்டை என்றால் வலது புஜம் மட்டும் துடிக்குமாம். வாலி வதம் பாணத்தால் நிகழ்த்தப் பட வேண்டும். அதனால் இரு புஜங்களும் துடித்தன என்கிறார்கள்.

 

सुनु सुग्रीव मारिहउँ बालिहि एकहिं बान।

ब्रह्म रुद्र सरनागत गएँ उबरिहिं प्रान॥6

 

தனது இரு கைகளையும் உயரே தூக்கி இராமன் சுக்ரீவனிடம் “சுக்ரீவா! கேள். நான் ஒரே பாணத்தினால் வாலியைக் கொன்று விடுவேன். பிரம்மா, சிவன் என்று எவரைச் சென்று அவன் சரணடைந்தாலும்  அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது.

 

இதே கூற்றை அங்கதன் இராவணனிடம் கூறுகிறான்.

 

 

सुनु रावन परिहरि चतुराई। भजसि कृपासिंधु रघुराई॥

जौं खल भएसि राम कर द्रोही। ब्रह्म रुद्र सक राखि तोही॥

  

அங்கதன் இராவணனிடம் நீ உனது கபட நடவடிக்கைகளை விட்டுவிட்டு இராமனிடம் சரண் அடைந்துவிடு. இராமனைப் பகைத்துக் கொண்டால் உன்னை பிரம்மா,  சிவன் இவர்கள் எவராலும் காப்பாற்ற முடியாது” என்று சொல்கிறான்.

 

தொடரும்