Monday, January 26, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

====================

 


ஐந்தாம் நாள் பதிவு எண் நான்கு  

 நாகபூஷணி அம்மன்

 

அடுத்து நாங்கள் சென்றது கடலில் அமைந்துள்ள நைனா தீவில் உள்ள நாக பூஷணி அம்மன் கோவில். படகில் சென்றது மறக்க முடியாத அனுபவம்.. இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம் என்ற சிறப்பை கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்

 

ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது.

 

 சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.

 

மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது. ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள்வீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

 

64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது.இராமர், புத்தர் ஆகியோர் இங்கு வந்து வழிபட்டதாக சில வரலாறுகள் தெரிவிக்கின்றன தொலைவிலிருந்தே மிகப் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்தக் கோவிலைக் கண்டிப்பாக எல்லோரும் கண்டு களிக்க வேண்டும்

 

பயணம் தொடரும்






No comments: