வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 396
நேற்றைய தொடர்ச்சி
கடலைத் தாண்டுவதற்குத் தான் தயாராக இருப்பதாகச் அங்கதன் சொல்ல ஜாம்பவான் அரசனாக இருப்பவர்கள் மற்றவர்களுக்குக் கட்டளை இடலாமே தவிர தானே அந்த வேலையைச் செய்யக்கூடாது என்று சொல்கிறான்.
அதற்கு அங்கதன் “என்னைப் போகவேண்டாம் என்று தடுக்கின்றீர்கள். மற்றவர்களுக்கோ சக்தியில்லை.. இப்பொழுது என்ன செய்வது? அரசரின் உத்திரவை நிறைவேற்றாமல் திரும்பிப் போகவும் கூடாது. அப்படிப் போனால் தண்டனை கிடைக்கும். அதைவிடப் பட்டினி கிடந்தது உயிரை விடுவதே மேல். அப்படி இந்தச் செயலை செய்து முடிப்பவர் நம்மிடையே யார் உள்ளார்?” என்று சொல்லிக் கவலைப்பட்டான். இதைக் கேட்டதும் வானர வீரர்கள் மனத் துயரடைந்தனர்.
ஜாம்பவான் நிதானிக்கிறான். மற்றெவரும் இல்லையா? தாண்டிச் சென்று வெற்றி பெற்றுத் திரும்பாது மனந்தளர்ந்து பட்டினி கிடந்தது அங்கேயே உயிர் விடுவதா?
=====================
ततः प्रतीतम् प्लवताम् वरिष्ठम्
एकांतम् आश्रित्य सुखोपविष्टम् |
संचोदयामास हरि प्रवीरो
हरिप्रवीरम् हनुमंतम् एव || ४-६५-३५
=====================
இத்தகைய அங்கதனின் கவலைக் கேள்விகள் காதில் ஒலிக்கும்போதே “வீரச் செல்வனே! கவலை வேண்டாம். நாம் எடுத்த கருமம் வெற்றி காணுவதில் ஐயமென்ன? இதை எவன் இனிது முடித்துத் தருவானோ, அவனையடைந்து இதோ வேண்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, அமைதியாக அமர்ந்திருந்த அனுமனை அணுகினான்.
(“இங்கே ஹனுமன், வெறித்தனமான குரங்களின் கூட்டத்திலிருந்து விலகி, சுகமாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது, ஹனுமன் எப்படி வசதியாக அமர முடியும். இது சந்தேகம்? “அவன், வசதியாக அமர்ந்திருந்தாலும், அவனது இதயத்தில் கடலைக் கடப்பது குறித்த எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன” என்று பதிலுக்குச் சொல்லப்படுகிறது. ஒருபுறம், இராமன் தன் தங்க மோதிரத்தை ஹனுமனிடம், இதே குரங்குகளின் முன்னிலையில்தான் கொடுத்தான். மறுபுறம் அங்கதனோ, கடலைக் கடக்கப்போவது யார் என பிற குரங்குகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
பிறகு குரங்குகளால், இந்த சந்தர்ப்பத்தில், நூறு யோஜனை தூரத்தைத் தாண்ட முடியாததாலல்ல; இராவணனிடம் கொண்ட பயத்தாலேயே ஏதோவொரு வகையில் தப்ப முயல்கின்றன என்பதை முழுமையாக அறிகிறான். ஹனுமன், இராவணனுக்கோ, அவனது கைக்கூலி அரக்கர்களுக்கோ அஞ்சவில்லை; ஆனால், அவன் தனது கடமையைக் குறித்துக் கவலைப்படுகிறான். எவரும் தாண்டுவதற்கு முன்வரவில்லையென்றாலும், துணையில்லாமலேயே அவன் இலங்கைக்கு நிச்சயம் செல்ல வேண்டியிருக்கும். இதில் எதுவாக இருந்தாலும், ஹனுமனே போகவேண்டும். இதனால்தான் அந்த “வசதியும்”, “தீர்மானமான முடிவும்”. எனவேதான் அவன் தன் கடமையிலேயே குறியாக இருக்கிறான்.
தொடரும்
No comments:
Post a Comment