Thursday, October 22, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 244

 ஆர்.சேஷாத்ரிநாதன் 


இங்கு வாலியின் மனைவி தாரையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

  

வாலியின் மனைவி தாரை - அறிவும் ஆளுமையும் நிறைந்த பெண்

 

இராமாயணத்தில் இடம்பெறும் பெண் பாத்திரங்களில் தாரை தனித்துவமானவள். அவள் வானர அரசனான வாலியின் மனைவியாகவும், அங்கதனின் தாயாகவும் அறியப்படுகிறாள். ஆனால் அவளது சிறப்பு இந்த உறவுகளுடன் முடிந்துவிடுவதில்லை. அரசியல் நுண்ணறிவு, முன்னறிவு, துணிவு, குடும்பப் பொறுப்பு, நீதியுணர்வு, சொல்வன்மை ஆகிய பல உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாகத் தாரை விளங்குகிறாள். ஆண்களின் வீரமும் அதிகாரப் போட்டியும் முன்னிலை பெறும் கிஷ்கிந்தைக் காண்டத்தில், அறிவின் குரலாக ஒலிக்கும் பெண் தாரை.

 

தாரையின் பிறப்பும் குடும்பமும்

 

வால்மீகி இராமாயணத்தில் தாரை, வானர மருத்துவரான சுஷேணனின் மகள் என்று குறிப்பிடப்படுகிறாள். அவள் வானர அரசனான வாலியை மணந்து, கிஷ்கிந்தையின் அரசியாக வாழ்ந்தாள். வாலி மிகுந்த உடல் வலிமையும் போராற்றலும் கொண்டவன். அவனுக்கும் தாரைக்கும் பிறந்த மகன் அங்கதன். அங்கதன் பின்னாளில் இராமனின் அணியில் முக்கியமான வானர வீரனாகத் திகழ்கிறான்.

 

தாரையின் குடும்ப உறவுகளைப் பின்வருமாறு காணலாம்:

 

தந்தை :சுஷேணன், வானரர்களின் மருத்துவராக அறியப்படுபவர்

++கணவன்: வாலி, கிஷ்கிந்தையின் வலிமைமிக்க அரசன்

மகன்: அங்கதன்,  இராமனுக்கு உதவிய சிறந்த வானர வீரன்

கணவனின் தம்பி: சுக்ரீவன், பின்னர் கிஷ்கிந்தையின் அரசனானவன்

 

++ தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து களைத்தபோது வாலி தனி ஒருவனாகக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தான் என்று கம்ப ராமாயணம் கூறுகிறது. அப்படி கடையும் போது வெளிவந்த பொருட்களில் ஒருவள் தான் தாரை என்று ரங்கநாத ராமாயணம் கூறுகிறது. இதையே கம்ப ராமாயணம் யுத்த காண்டத்தில் மீட்சிப் படலத்தில், அதாவது வானர வீரர்களின் மனைவியர் சீதையைச் சந்திக்கச் செல்கின்றனர். அப்போது தாரை பாற்கடலில் தன்னுடன் உதித்த முத்துமாலையைச் சீதைக்கு பரிசளிக்கிறாள் என்று கம்பர் சொல்கிறார்.

 

நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்தபோது அங்கு

ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே

தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி

மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை

 

ஆனால் சில உரையாசிரியர்கள் இது கம்பரின் பாடல் அல்ல. இடைச் செருகல் என்று சொல்கின்றனர்.

 

 

தொடரும்.

 


Wednesday, October 21, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

வாலி வத சர்ச்சை 

பதிவு எண் 243

ஆர்.சேஷாத்ரிநாதன் 

 

இந்து தமிழ் திசை என்ற நாளிதழில் 9/1/2020 அன்று வெளியான சிந்து குமாரன் எழுதிய வாலி வதம் சொல்லும் ரகசியம் என்னும் கட்டுரையின் தொடர்ச்சி.............. தி இந்து தமிழ் இதழுக்கும் கட்டுரை ஆசிரியர் சிந்துகுமாரனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

பார்வைக்குப் புலப்படாதது

  

இந்த அமைப்புக்கு வெளியே விரிந்திருக்கும் ‘நான்’ என்னும் அறிவுணர்வில் கவனத்தை நிலைப்படுத்துவது ஒன்றுதான் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு. மனத்தால் உள்ளீடும் உருவமும் இல்லாத எதையும் பார்க்க முடியாது. உயிருணர்வு உள்ளீடற்றது; அதனால் உருவமும் இல்லாதது. அந்தக் காரணத்தால் மனத்தின் பார்வையிலிருந்து இது மறைந்தே இருக்கிறது.

 

புலன்களையும் மனத்தையும் பொறுத்தவரையில் உயிருணர்வு மறைந்திருக்கும் மறைபொருள். பார்வைக்குப் புலப்படாதது; மனத்தால் கிரகிக்க முடியாதது. மனமும் புலன்களும் இணைந்து உருவாக்கும் ‘உலகம்’ என்னும் அனுபவத்தைத்தான் ‘மாயை’ என்று சொல்கிறார்கள். மாயை உயிருணர்வை, சுத்தப்பிரக்ஞையை(Pure Consciousness) மறைக்கிறது; இந்த மறைபொருள் புரியும்போது மாயை மறைந்துபோகிறது.

 

மாயை மறைக்க மறையும் மறைபொருள்

மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்

மாயை மறைய மறைய வல்லார்க்குக்

காயமும் இல்லை கருத்தில்லைதானே

- என்கிறார் திருமூலர்.

 

சுத்தப்பிரக்ஞை வெளிப் படும்போது, உடலும் உடல் சார்ந்த புலன்களும், மனமும் மனம் சார்ந்த கருத்துகளும் அனுபவத்தின் பின்னணிக்குப் போய்விடுகின்றன, அறிவுணர்வின் கவனம்கொண்டு, அந்த வெளிச்சத்தில் படிவங்களைப் பார்க்கும்போது, படிவங்களில் பொதிந்திருக்கும் சக்தியை அறிவுணர்வு கிரகித்துகொண்டு விடுகிறது. மறைந்திருக்கும் அந்தத் தத்துவத்தின் துணைகொண்டுதான், நம் முயற்சியின் வலிமையைத் தான் கிரகித்துக்கொண்டுவிடும் ஆழ்மனப் படிவங்களின் பிடியிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடியும். இந்த உண்மையைத்தான் வாலியின் வதம் குறிக்கிறது.

 

வாலி ஆழ்மனப்படிவங்களின் அடையாளம். புலப்படாமல் மறைந்திருக்கும் ‘நான்’ என்னும் ஆன்ம சக்தியைத்தான் ராமன் என்னும் தத்துவம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

 

 

தொடரும்


Tuesday, October 20, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

வாலி வத சர்ச்சை 

பதிவு எண் 242

ஆர். சேஷாத்ரிநாதன் 

 

நேற்றைய தொடர்ச்சி...............

 

(இந்து தமிழ் திசை என்ற நாளிதழில் 9/1/2020 அன்று வெளியான சிந்து குமாரன் எழுதிய வாலி வதம் சொல்லும் ரகசியம் என்னும் கட்டுரையின் தொடர்ச்சி.............. தி இந்து தமிழ் இதழுக்கும் கட்டுரை ஆசிரியர் சிந்துகுமாரனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  

தன்னை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களுடைய வலிமையில் பாதி வாலிக்குப் போய்விடும் என்ற கருத்துக்குப் பின்னால் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

 

 

இதேபோல் மனித மனத்தில் என்ன நடக்கிறது? மனித மனம் பல தளங்கள் கொண்டது. மேல்தளங்கள் மட்டுமே தனிமனிதன் சார்ந்தது. தனியொரு மனிதனாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள், அவ்வாறு வாழ்வதற்குத் தேவையான தகவல்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றன.

  

மனிதகுலத்துக்குப் பொதுவான நினைவுகள்

 

ஆழ்தளங்கள் அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவானவை. பிரக்ஞையில் எல்லாமே படிவங்களாக (Patterns) இருந்து இயங்குகின்றன. நினைவுப் படிவங்கள் மேல்மனத்தளங்களில் இயக்கம் கொண்டிருக்கின்றன. ஆழ்தளங்களில் இருந்து இயங்கும் படிவங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தனிமனித மனத்தின் சக்தியைவிடப் பல மடங்கு வலிமையானவை அவை. சில சந்தர்ப்பங்களில் இந்தப் படிவங்கள் தனிமனத்தில் பெரும் வேதனையை எழுப்புகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத் தனிமனம் எவ்வளவோ முயல்கிறது; ஆனால் எப்போதுமே தோற்றுப் போகிறது.

 

இந்தப் படிவங்கள் அடிப்படையில் சுயப்பிரக்ஞை இல்லாதவை. இவை நனவிலி மனத்தின் இருளிலிருந்து இயங்குகின்றன. மேல்தளங்களும் ஆழ்தளங்களும் ஒரே அடிப்படைக் கட்டமைப்பில்தான் இயங்குகின்றன. அதனால், இந்தப் படிவங்களைக் கட்டுப்படுத்தத் தனிமனம் பயன்படுத்தும் சக்தியை இந்தப் படிவங்களே உறிஞ்சிக் கொண்டுவிடுகின்றன. தனிமனம் அதனிடம் தோற்றுப் போவது மட்டுமில்லாமல், இந்தப் படிவங்களின் சக்தியும் வலிமையும் மேலும் அதிகமாகிவிடுகின்றன. அடுத்தமுறை இவற்றைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகமான சக்தி தேவைப்படுகிறது. அதையும் இவை கிரகித்துக்கொண்டுவிடுகின்றன. அதனால் இதற்கு முடிவே இல்லாமல் போகிறது. அப்போது இதிலிருந்து விடுபடுவதற்கு என்னதான் வழி?

 

 

தொடரும்


Monday, October 19, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 241

ஆர். சேஷாத்ரிநாதன் 

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

அடுத்து இந்து தமிழ் திசை என்ற நாளிதழில் 9/1/2020 அன்று வெளியான சிந்து குமாரன் எழுதிய வாலி வதம் சொல்லும் ரகசியம் என்னும் கட்டுரையின் ஒரு பகுதியை கீழே கொடுத்துள்ளேன். தி இந்து தமிழ் இதழுக்கும் கட்டுரை ஆசிரியர் சிந்துகுமாரனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

புராணக் கதைகள் எல்லாமே பிரக்ஞையின் ஆழ்தள இயக்கம் பற்றிய உண்மைகளைப் பேசுகின்றன. அந்த உண்மைகளை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் சாதனமாகத்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன.

 

வாலியைக் கொன்று தன்னைக் காப்பாற்றினால் வானரக் கூட்டம் முழுவதும் சீதையைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் ராமனுக்கு உதவும் என்று சுக்ரீவன் வாக்களித்தான். ஆனால், வாலியைக் கொல்வதில் ஒரு பெரும் இடைஞ்சல் இருந்தது.

 

வாலிக்கு எதிராக யார் போய்ச் சண்டைக்கு நின்றாலும் அவர்களின் பலத்தில் பாதி வாலிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அப்படி ஒரு வரம் அவனுக்கிருந்தது. வாலி, தன்னளவிலேயே மிகப் பெரும் பலசாலி. இராவணன் வாலியிடம் மாட்டிக்கொண்டு பட்ட அவஸ்தை புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இராமன் மறைந்திருந்து வாலியைக் கொல்ல வேண்டியிருந்தது. கதைப்படி இராமனுக்கு ஒரு நியாயம் இருந்தால் வாலிக்கு அவனுடைய நியாயம் இருந்தது. உயிர் போவதற்கு முன் இதைப் பற்றி இராமனிடமே அவன் வாதாடுகிறான். இது சரியா இல்லையா என்பது பற்றிப் பல விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

 

இந்தக் கதைக்குப் பின்னால் வேறு ஆழமான பொருள் பொதிந்திருக்க முடியுமா என்ற கேள்வியைக் கேட்டுப் பார்ப்போம்..

 

தொடரும்

 


Sunday, October 18, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 240

ஆர்.சேஷாத்ரிநாதன் 


 

நேற்றைய தொடர்ச்சி.............

 

 

தனக்களித்த தண்டனையாக இராமன் விட்ட பாணம் தனக்குப் பரமபதம் தரும், வீடு பேற்றை அருளும் பரிசாக அமைவதாக மகிழ்ச்சியோடு கூறுகிறான் வாலி. அது மட்டும் அல்ல, தன்னைக் கொல்ல முயன்ற தம்பி சுக்ரீவன் கூட "வெற்று அரசு எய்தி, எம்பி, வீட்டு அரசு எனக்கு விட்டான்" என உளம் களிக்கிறான். இந்த மகிழ்ச்சியின் விளைவாகவே, தம்பி சுக்ரீவனை அழைத்துத் தழுவிக்கொண்டு அவனை இராமனிடம் ஆற்றுப்படுத்துகிறான் :

 

'மறைகளும், முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்

துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், திணி வில் தூக்கி,

அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது

இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்!"

 

இங்கே, பரம்பொருளை உணர்ந்துகொண்ட ஜீவாத்மா தான் பெற்ற பெருவளத்தைப் பெறாஆர்க்கு அறிவுறுத்துகிறது. தன் தம்பியை மட்டும் அல்லாது தன் சுற்றம் முழமையுமே இராமனுக்கு அடைக்கலம் ஆக்கிய பின் "உயர் கரம் உச்சி வைத்தான்" வாலி. முன்பு மானிட இராமனை வெறுந் தலையாலே வணங்கிய வாலி இப்போது பரமாத்மாவை உணர்ந்து கொண்ட உணர்வோடு பரமாத்மாவான இராமனைத் தலைக்கு மேலே கைகூப்பித் தொழுகிறான்

 

பாரதி கருத்துப்படி, வாலி வதையை இக் கண்ணோட்டத்தில் கண்டால் இப்படி வேதாந்தமாகப் பொருள் கொள்ளலாம் - வாலி வதை வழியாகக் கம்பன் உணர்த்த வரும் கருத்து இதுதான் : வாலி வேறு யாரும் இல்லை நாம்தான். விலங்கான வானர மனம் - குரங்கு மனம்- நம் மனம். இதன் ஆற்றல்கள் அளப்பரியன. அதன் விளைவாக, ஆணவம், சினம்... எனப் பல மலங்களில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்போது இறைவன் நம் முன் தோன்றாமல் மறைவாகவே நின்று சோதனை(கள்) என்ற பாணத்தை எறிந்து நம்மைத் தாக்குகிறான். ஆனால் அந்தச் சோதனைகளைத் தாங்கி ஈடு கோடுக்கும் போது விலங்கு மனம் மானிட மனமாக மாறுகிறது.  பின் அந்தப் பரம்பொருளை அறிந்துகொள்ளும் போது, இறைவனோடு ஒப்புரவு ஆகும் போது, மானிட மனமாக மாறிய விலங்கு மனம் பரமபதத்தை, வீடு பேற்றை அடைகிறது. ஆகவே இறைவன் மறைவாக இருந்து நமக்கு அனுப்பும் சோதனைகள் தண்டனைகள் அல்ல மாறாக, வீடு பேற்றை அருளும் பரிசுகள். இந்த இறையியல் தத்துவத்தைதான் கம்பன் தன் வாலி வதை வழியே உணர்த்திவிடுகிறான்.

 

தொடரும்

 


Saturday, October 17, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 239

 ஆர்.சேஷாத்ரிநாதன்.


நேற்றைய தொடர்ச்சி.............

  

 

வாலி வதம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு.அதுவும் எல்லா இராமாயணங்களிலும் வரும் நிகழ்வு.  அன்றைய சமுதாய சூழல், சமூகக் கட்டுப்பாடுகள், அரசியல் அமைப்பு, நிர்வாக முறைகள் இவைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல், அன்று நடந்த நிகழ்வை இன்றைய சமுதாயத்தை உரைகல்லாக வைத்து உரசிப் பார்த்து சரி/தவறு என்று முடிவுக்கு வருவது என்பது ஒரு நியாயமான செயலாக இருக்க முடியாது.  அதனால் அதை ஒரு நிகழ்வு என்று கடந்து செல்ல வேண்டுமேயன்றி விவாதிப்பதோ, ஒரு முடிவுக்கு வருவதோ தேவையற்றது என்பதே என் கருத்து.

 

இறுதியாக வாலி வதம் நமக்குச் சொல்லும் சேதி என்ன?

 

இறுதியாக பேராசிரியர் பெஞ்சமின் லெபோ - பாரீசு (பிரான்சு) என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. அவருக்கு உளங்கனிந்த நன்றிகள்.

 

 

“பாரதியின் 'குயிற் பாட்டில்' மனந்தோய்ந்து கிடந்தேன். இறுதி இரண்டு வரிகளில்

 

"வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க

யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?"

 

எனப் பாரதி கேட்க, மனம் ஏனோ சட்டென்று கம்பனின் 'வாலி வதைப் படலத்துக்குத் தாவியது.

 

பரம்பொருளை, தருமத்தின் தலை மகனைத் தான் கண்டுகொண்டதை, உணர்ந்துகொண்டதை,

 

'உண்டு எனும் தருமமே உருவமா உடைய நிற்

கண்டு கொண்டேன்......"

 

எனப் பெருமித்தோடு உரைக்கிறான் வாலி. பரமாத்மாவை உணர்ந்துகொண்ட ஜீவாத்துமாவுக்கு அடுத்துக் கிடைக்க வேண்டியது வீடு பேறுதானே! இதனை உணர்த்துவது போல,

 

"பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்

தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே"

 

என்று வாலி உரைக்கிறான்

 

 

தொடரும்

Friday, October 16, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 238

ஆர்.சேஷாத்ரிநாதன் 

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

 

இனி மூன்றாவது கேள்வி. வாலியின் மனமாற்றம் இயல்பானதா? வாலி வதம் என்பது எல்லா இராமாயணங்களிலும் இடம் பெற்றுள்ள அம்சமாகும். எல்லா இராமாயணங்களிலும் அம்பால் தாக்கப்பட்ட வாலி இராமனிடம் பல கேள்விகள் கேட்டாலும் இறுதியில் மனம் மாறி இராமனிடம் மன்னிப்புக் கேட்டு இராமனை ஏற்றுக் கொள்கிறான்.  அத்தகைய மனம் மாற்றம் இயல்பானதா என்ற கேள்வி எல்லோரும் மனத்திலும் எழ வாய்ப்புண்டு.  இதைப் பற்றி விரிவான பதிவு கம்ப இராமாயணத்தின் அடிப்படையில் கம்பரின் கிட்காந்தா காண்டம் எழுதும் சமயம் தருகிறேன். தற்பொழுது துளசி தாசரின் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறோம். துளசி தாசரின் இராம சரித மானஸ் ஒரு பக்தி இலக்கியம். அதில் இராமனைப் பற்றி உயர்வான கருத்துகளை மட்டுமே அவர் பதிவு செய்துள்ளார்.  போருக்குச் செல்ல விடாமல் தடுக்கும் தாரையிடம் வாலி இராமனைப் பற்றி மிக உயர்வாகச் சொல்கிறான். அம்பால் தாக்கப்பட்டு இராமனிடம் ஒரு சில  கேள்விகளே கேட்டாலும் இறுதியில் இராமனின் திருவடிகளைச் சரணடைகிறான். இங்கு பக்தி தான் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

வாலி வாதத்தில் சில கேள்விகள் மறைந்து நிற்கின்றன. வால்மீகியும்  கம்பரும் அவற்றை நமது கற்பனைக்கு விட்டுவிட்டனர். அதில் முக்கியமான கேள்வி. குகையிலிருந்து வெளியே வந்த வாலியுடன் அவனது கோபமும் ஆணவமும் சேர்ந்து வந்தது. அரசனாக சுக்ரீவன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனது கோபம் அதிகமாயிற்று. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சுக்ரீவன் குகையிலிருந்து தான் வெளிவரக்கூடாது என்பதற்காக குகையின் வாயிலை பாறை கொண்டு அடைத்துவிட்டான் என நினைத்தான். சுக்ரீவன் போதிய விளக்கங்கள் கொடுத்தும் அதை வாலி ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் அந்த விவரங்களை மற்ற அமைச்சர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. இறக்கும் தருவாயில் வாலி அனுமனைப் புகழ்ந்து இராமனிடம் சொல்கிறான். அப்படிப்பட்ட அனுமனிடம் வாலி ஏன் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?

 

அனுமன் மட்டுமல்ல ஜாம்பவான் போன்ற மூத்தோரிடம் அவன் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. சுக்ரீவன் வெளியேறியதும் அவனுடன் அனுமன், நலன், நீலன், ஜாம்பவான் போன்றோர் உடன் சென்றனரே. அப்போதாவது அவன் உணர்ந்து கொண்டிருக்கவேன்டாமா? காரணம் அவர்கள் எல்லோரும் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். அவர்கள் நம்மை விட்டு ஏன் பிரிந்து செல்கின்றனர்? என்றாவது யோசித்திருக்கலாமல்லவா? அவனது மனைவி தாரை, சிறந்த பெண்மணி, நன்கு கற்றவள் அவளிடமாவது நடந்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமல்லவா? அங்கு தான் வாலியின் ஆணவம் அவனது கண்ணை மறைத்தது.  இங்கு தான் வால்மீகி, கம்பர் நமது யூகத்திற்கு விட்டுவிட்டனர். 


காரணம் எல்லா விவரங்களையும் அறிந்து வாலி திருந்தி விட்டால் இராவண வதம் என்னாவது? அதே போல் சுக்ரீவனும் வாலியும் மோதும்  போது இராமனால் சுக்ரீவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அனுமன் அவர்களுடனே இருந்தவன். அவனாலுமா சுக்ரீவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை? இப்படி ஒரு சில கேள்விகளுக்கான பதிலை வால்மீகியும் கம்பரும் நமது கற்பனைக்கே விட்டு விட்டனர். 

 

 

 

தொடரும்