Thursday, January 22, 2026

 



வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 

இராமன் வாலி உரையாடல் 

பதிவு எண் 417

 


நேற்றைய தொடர்ச்சி...........

 

பகவான் இராமரை வழிபட மாபெரும் கோவில்களை எழுப்பிய சேரர், சோழர், பாண்டியர், மற்றும் இதர மன்னர்களெல்லாம் அறிவற்றவர்களா? பகவான் இராமரைப் புகழ்ந்து அவரை வழிபட்டவர்களான சங்கராசாரியர், இராமானுஜாசாரியர், மத்வாசாரியர் போன்ற ஆச்சாரியர்கள் குற்றம் செய்தவர்களா? பிரம்மதேவரும் சிவபெருமானும்கூட தவறானவர்களோ! அவர்களும் இராமரை வழிபட்டு அவரது திருநாமத்தை உச்சரிக்கின்றனரே. நவீன நாகரிகத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் மூடர்களை மட்டுமே இன்றைய மக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.

 

சற்று யோசித்துப் பாருங்கள்!

 

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தையும் அறிவையும் மறுக்கலாமோ! உங்களின் எண்ணங்கள் தவறாகவும் முன்னோர்களின் எண்ணங்கள் சரியாகவும் இருக்கலாமே! சற்று நேர்மையாக இருந்து நடுநிலையுடன் உண்மையை ஏன் எதிர்கொள்ளக் கூடாது?

 

நாம் ஏன் சாஸ்திரங்களை ஆராய்ந்து தீர்வு காணக் கூடாது? பகவானின் தெய்வீக வார்த்தைகளான வேதங்களிடம் ஏன் தஞ்சமடையக் கூடாது? ஏன் (அனைத்து இஸ்கான் கோவில்களிலும் கிடைக்கும்) வால்மீகி இராமாயணத்தைப் படிக்கக் கூடாது? ஏன் பகவான் இராமரிடத்தில் சரணடைந்து அவரின் அருளை வேண்டக் கூடாது? கிருஷ்ணர் மற்றும் இராமரின் திருநாமங்களை உச்சரித்து உன்னதமான ஆனந்தத்தை ஏன் அனுபவிக்கக் கூடாது? தூய்மையான, அமைதியான, மற்றும் அர்த்தமான வாழ்க்கையை ஏன் வாழக் கூடாது?

 

பாரதத்தின் பண்பாடும் பாரம்பரியமும் மோசமானதாக இருப்பின், வெளிநாட்டைச் சேர்ந்த எத்தனையோ பேர் (இஸ்கானில் காண்பதுபோல) இதனை ஏன் பின்பற்ற வேண்டும்? மாயையில் மயங்கி இராமரிடம் சவால் விட்ட இராவணனைப் போல நாமும் மயங்கிவிடலாமா? இராவணனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இராமாயணத்தைப் படித்தோர் அறிவர், படிக்காதோர் முதல் வாய்ப்பிலேயே படிக்க வேண்டும்.


========== 

शराभितप्तेन विचेतसा मया

प्रदूषितः त्वम् यद् अजानता विभो |

इदम् महेन्द्रोपम भीम विक्रम

प्रसादितः त्वम् क्षम मे नरेश्वर || ४-१८-६६

============

 

“எம்பெருமானே, மிகச்சிறந்த தைரியம் கொண்டவரே, மக்களின் இறைவனான இராமரே, அம்பினால் துளைக்கப்பட்டபோது முறையாக சிந்திக்க இயலாமல், அறியாமல், தங்களைப் பற்றி பெரிதும் அவதூறாகப் பேசிவிட்டேன். என்னை தயவுசெய்து மன்னித்தருளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்,” என்ற வாலியின் வார்த்தைகளை இராமர் குற்றவாளி” என்று நினைத்த மற்றவர்களும் உரைப்பார்கள் என்று நம்புகிறோம்.

 

இத்துடன் வால்மிகியின் கிஷ்கிந்தா காண்டம் முடிந்தது. நாளை முதல் துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம் ஓர் ஆய்வு. நன்றி வணக்கம்

No comments: