Friday, January 16, 2026

 




வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 

இராமன் வாலி உரையாடல்

 

பதிவு எண் 411

 

நேற்றைய தொடர்ச்சி...........

  

வாலியின் வாதங்கள்

 

வாலியை இராமர் கொன்றது தவறு என்று கருத்துரைப்போர், வாலியே இதுகுறித்து இராமரிடம் கேட்டுள்ளான் என்பதை இராமாயணத்தைப் படித்தால் அறிந்துகொள்ள முடியும். இராமரின் அம்பினால் பாதிக்கப்பட்ட வாலி கடுங்கோபம் கொண்டு பல்வேறு கேள்விகளை ஸ்ரீ இராமரிடம் முன்வைத்தான். அவையனைத்திற்கும் ஒன்றன்பின் ஒன்றாக இராமர் பதிலளித்தார். வாலியின் வாதங்கள் மற்றும் ஸ்ரீ இராமரின் பதில்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காணலாம்.

 

நான் என்ன தவறு செய்தேன்?

 

மன்னர் என்பவர் வாய்மை, மன்னிக்கும் தன்மை, மனவுறுதி ஆகிய தன்மைகளுடன் தீயோர்களை தண்டிப்பவராக இருக்க வேண்டும். மன்னரின் நற்குணங்களை நீங்கள் (இராமர்) சீராகப் பெற்றுள்ளீர் என்று நினைத்தேன், குற்றமற்ற என்னை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்தேன்,” என வாலி முறையிட்டான்.

 

நான் குற்றம் செய்தவன் அல்ல,” என்ற வாலியின் வாதத்தினை ஸ்ரீ இராமர் பின்வருமாறு முறியடித்தார்: காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக, உனது இளைய சகோதரனின் (சுக்ரீவனின்) மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும், உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள், மருமகள், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லையெனில் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும்.

 

உமக்கு என்ன அதிகாரம் உண்டு?

 

நான் தனிப்பட்ட முறையில் உமக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. உம்முடைய நாட்டிலோ நகரத்திலோ எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் என்னைக் கொல்ல உமக்கு என்ன அதிகாரம் உண்டு?” என்ற வாலியின் கேள்விக்கு ஸ்ரீ இராமர் பின்வரும் பதிலை வழங்கினார்: மலைகள், காடுகள், நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு.

 

தொடரும்


No comments: