Thursday, January 15, 2026

 




 

வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 

இராமன் வாலி உரையாடல்

 பதிவு எண் 410

 

நேற்றைய தொடர்ச்சி...........

 

ஒரு வருடம் கழிந்த பின்னரும் வாலியைப் பற்றிய எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. குகையிலிருந்து இரத்தம் வெளிவருவதையும் பல்வேறு அசுரர்களின் குரலையும் கேட்ட சுக்ரீவன், வாலியின் குரலைக் கேட்க முடியாததால், வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று தீர்மானித்து, குகையின் வாயிலை ஒரு பெரும் பாறையினால் மூடினான். சகோதரனுக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்துவிட்டு, சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குத் திரும்பியபோது, அமைச்சர்கள் அவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்தனர். சுக்ரீவனும் நீதி நெறிப்படி அரசாளத் தொடங்கினான்.

 

சில மாதங்கள் கழித்து, எல்லாரும் வியக்கும் வகையில், வாலி அசுரனைக் கொன்றுவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பினான். சுக்ரீவனை அரியணையில் கண்ட வாலி கடுங்கோபம் கொண்டு அமைச்சர்களைக் கைது செய்தான். சுக்ரீவனோ தனது சகோதரனுடன் சண்டையிடாமல் அவன் மீதுள்ள மரியாதையால் பணிவுடன் ராஜ கிரீடத்தை வாலியின் காலடியில் வைத்து வணங்கினான். தான் ஒருபோதும் பலவந்தமாக இராஜ்ஜியத்தைப் பறிக்க எண்ணியதில்லை என்றும், தனது உள்நோக்கமற்ற குற்றத்தினை மன்னித்துவிடுங்கள் என்றும் வேண்டினான். ஆனால் வாலியின் கோபம் சற்றும் தணியவில்லை, குகை வாயிலை மூடிவிட்டு இராஜ்ஜியத்தை கைப்பற்றியதாக சுக்ரீவன்மீது குற்றம் சாட்டினான். சுக்ரீவனுடைய மனைவி, சொத்துக்கள் உட்பட அனைத்தையும் பறித்துவிட்டு, உடுத்தியிருந்த ஒரே உடையுடன் அவனை இராஜ்ஜியத்தை விட்டே வெளியேற்றினான்.

 

குற்றமற்ற சுக்ரீவனுக்கு வாலி இழைத்த அநீதியானது சுக்ரீவனை இராமரிடம் சரணடையச் செய்தது. வாலியைக் கொன்று சுக்ரீவனின் மனைவியை மீட்டுத் தருவதாக ஸ்ரீ இராமர் சுக்ரீவனிடம் உறுதியளித்தார், அதற்கு பிரதிபலனாக சீதையைத் தேடுவதில் தானும் வானர சேனைகளும் தங்களுக்கு உதவுவோம் என்று சுக்ரீவன் ஸ்ரீ இராமரிடம் உறுதியளித்தான். அதன் விளைவாக வாலியுடன் சுக்ரீவன் சண்டையிட்டபோது, பகவான் இராமர் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து நின்று வாலியை வதம் செய்து நீதியை நிலைநாட்டினார்.

 



தொடரும்

 

No comments: