வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
இராமன் வாலி உரையாடல்
பதிவு எண் 415
நேற்றைய தொடர்ச்சி...........
ஒரு வழக்கில் எதிரெதிர் தரப்பினர் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அங்கு வழக்கு என்பதே இல்லை. அதுபோல, பகவான் இராமர் தனது செயலின் நியாயத்தை வாலியிடம் தெளிவுபடுத்தினார், வாலியும் அதனை ஏற்றுக்கொண்டு இராமரிடம் சரணடைந்தான். வழக்கு முடிவுற்றது. இதன் பின்னரும் வாதம் செய்வதில் அர்த்தமில்லை. ஒருவேளை வழக்கு முடியவில்லை என்று வாலி நினைத்திருந்தால், சுக்ரீவனை மன்னராகும்படி கட்டளையிட்டிருக்க மாட்டான், சுக்ரீவனுக்கு தனது கழுத்திலிருந்த மணியை வழங்கியிருக்க மாட்டான், மேலும், வாலியின் மகனான அங்கதன் சுக்ரீவனுக்கு உறுதுணையாக செயல்பட்டிருக்க மாட்டான்.
எனவே, அறியாமையிலுள்ள மக்களே இராமரின் மீது குற்றம் சுமத்துவர் என்பதை இதிலிருந்து அறியலாம். வாலிக்கு கருணை வழங்கவும், கடக்கமுடியாத பிறப்பு, இறப்பு எனும் மாபெரும் சமுத்திரத்திலிருந்து அவனை விடுவிக்கவுமே இராமர் வாலியைக் கொன்றார். இதன் மூலமாக, பகவான் தனது லீலைகளின் பூரணமான தன்மையை வெளிப்படுத்துகிறார்–அவரது லீலைகள் அனைத்தும் நன்மைக்காகவே; அவர் ஒருவரை ஆசீர்வதித்து மற்றொருவரை வதம் செய்தாலும் இருவருமே உண்மையில் பலனடைகின்றனர். இதுவே இராம லீலைகளின் உன்னதத் தன்மை.
வாலியை ஸ்ரீ இராமர் கொன்றிருக்காவிடில், சுக்ரீவனுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் வந்திருக்கும்.
ஸ்ரீ இராமரின் தீர்ப்பை ஏற்று வாலி மரணத்தைச் சந்தித்தல்
லீலைகளை யாரால் புரிந்துகொள்ள முடியும்?
இறைவனின் முன்பாக உடலை நீத்தல் மாபெரும் பாக்கியம்; பகவான் கிருஷ்ணரின் முன்பாக உடலை நீத்த பீஷ்மதேவரின் மாபெரும் அதிர்ஷ்டத்தை ஸ்ரீமத் பாகவதம் புகழ்கிறது. அதுபோலவே, பகவான் இராமரால் வதம் செய்யப்பட்டு, அவரிடம் மன்னிப்பை வேண்டிய பின்னர், இராமரைப் பார்த்தபடியே மரணமடைந்த வாலி, தனது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலையடைந்தான். பகவானின் இராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்லுதல் என்பது மாபெரும் பாக்கியமன்றோ! பகவானிடமிருந்து தான் பெற்ற பாக்கியத்தை ஒரு வானரத்தால்கூட உணர முடிந்தது. ஆனால் நவீன கால மக்களோ பௌதிக நீதியையும் தர்க்கத்தையும் வைத்து இராமரைக் கேள்வி கேட்கின்றனர். என்னே விந்தை!'
தொடரும்
No comments:
Post a Comment