இலங்கையில்
ஏழு நாட்கள்
=================
மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்
இலங்கையில் முருகனின் அறுபடை வீடுகளில் இது மூன்றாவது வீடாகும்
ஈழத் திருநாட்டில் தொன்மையும் மகிமையும் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. வடக்கே கீரிமலை–நகுலேசர் ஆலயம், கிழக்கே கன்னியா–கோணேசர் ஆலயம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம், மேற்கே பாலாவி–திருக்கேதீச்சரநாதர் கோவில் போன்ற ஐம்பெரும் தலங்கள் ஈழத்தை இயற்கையான அரணாக பாதுகாக்கின்றன.
இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது.
குமரிக்கண்டத்தின் ஒரு கூறே ஈழமாக இருந்ததாகப் பல அறிஞர்கள் கூறுவர். கடலால் விழுங்கப்படாமல் சிறுதீவாக இப்பகுதியின் தலங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டுமென இறைவன் அருள்புரிந்ததாகவும் கருதப்படுகிறது. அவ்வாறு சிறப்பு பெற்ற தீர்த்தங்களில் ஒன்றின் அருகே எழுந்த திருத்தலமே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்.
மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ்பாணத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கென சிறப்புகள் உண்டு, இந்தக் கோவில் சிவாகமச் சிற்ப நூல் முறையில் அமைந்தது. இந்த ஆலயத்தின் வரலாற்றில் மாருதபுரவீகவல்லி என்னும் இளவரசியின் குதிரை முகம் நீக்கப்பட்டது முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்கின்றது.. சூரசங்காரத்திற்குப் பிறகு முருகப்பெருமான் இத்தலத்தில் தங்கியதாகவும் ஒரு ஐதீகம் உண்டு. “மா” என்பது சூரன் மாமர வடிவம், “விட்ட” – அது களைந்தது, “புரம்” – இடம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. தலவிருட்சமாய் மாமரம் இருப்பதும் இதற்கு சான்று.
இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரையை ஆட்சி புரிந்த உக்கிரப்பெருவழுதி எனும் சோழ மன்னனின் மகள் மாருதபுரவீகவல்லி குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீர வில்லை. சாந்தலிங்க முனிவருடைய வழிக் காட்டலின் கீழ் இவ்விளவரசி தென்னிந்தியாவில் இருந்து கீரிமலை வந்து நீராடி கந்தசாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருடைய நோய் நீங்கியதுடன் குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள். இக்காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா (குதிரை) + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகின்றது.
சோழநாட்டு இளவரசி தன் குதிரைமுகம் நீங்கியதன் கைமாறாக மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார். இந்த ஆலயம் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். இதன் முதற் கும்பாபிஷேகம் கி.பி 789 இல் நிகழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
போர்த்துகேயர் இலங்கை மீது படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றிய வேளையில், மத மாற்றும் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலும் பகுதியாகச் சேதப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள். ஆனால் மாருதபுரவீகவல்லியால் நிருமாணிக்கப்பட்ட மூலஸ்தானமும் மூலவர் கந்தசுவாமியும் இற்றைவரை அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1782 ந்தக் கோவில் புனரமைக்கப்பட்டது
மாருதபுரவீகவல்லி வழிபட்ட வேல் இன்றும் கூட மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுவதைக் கண்ணுறலாம். முருகப்பெருமான் வள்ளி–தெய்வயானையுடன், விநாயகர், நடேசர், சந்திரசேகரர், ஆறுமுகர், முத்துக்குமாரசுவாமி, சுப்பிரமணியர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, வைரவர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள், சண்டேசுரர். ஆகியவை கோவிலின் முக்கிய மூர்த்திகள்.
பயணம் தொடரும்
No comments:
Post a Comment