Sunday, January 11, 2026

 


 

வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 

ஹனுமனின் எழுச்சி                

பதிவு எண் 406

  

நேற்றைய தொடர்ச்சி

 

ஜாம்பவான் மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் ஹனுமனைப் பார்த்து “வாயுவின் மகனே! இலங்கை சென்று நீ திரும்புவரை  உன் நன்மையை எண்ணி நாங்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு இருப்போம். மகரிஷிகளின் அருளாலும், பெரியோர்களின் நாலாசியாலும்  தெய்வத்தின் அனுக்ரஹத்தாலும் நீ கடலைக் கடந்து சென்று சீதையைக் கண்டுபிடித்துக் கொண்டுவா. நீ திரும்பி வரும் வரையிலும் எங்கள் சிந்தனை முழுவதும் உன்னிடத்திலேயே இருக்கும். அதுவரை நாங்கள் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் புரிந்து கொண்டு இருப்போம்” என்று கூறினான்.

 

ஜாம்பவான் சொன்னதைக் கேட்டு வானர வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 

அப்பொழுது ஹனுமன் “நான் இங்கிருந்து  தாவத் தொடங்கினால், என் கால் உந்துதலை இந்தப் பூமி தாங்காது. இங்குள்ள மகேந்திர மலையீன் சிகரம் உறுதியானதாகவும் பெரியதாகவும் இருக்கிறது. அதன்மேல் ஏறி நின்று நூறு யோசனை தூரம் தாண்டுவதற்கு  வேண்டிய வேகத்தை உண்டாக்கிகொள்கிறேன்.” என்று கூறினான்.

 

எல்லரும் மகேந்திர மலையை அடைந்தனர். அந்த மலை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. அதனுடைய ஒரு பக்கத்தில் கடல் அலையானது மோதிக் கொண்டிருந்தது.

 

அனுமன் வானர வீரர்களின் வாழ்த்தொலியுடன்  அம்மலையில் ஏறினான். அதன் உச்சியில் நின்று புறப்பட ஆயுத்தமானான்/ அவனுடைய கால் அழுத்தத்தால் , சிம்மத்தால் அடிபட்ட மதயானையைப் போல் அம்மலையானது நடுங்கியது . அந்த மலையில் வாழ்ந்த நாக, கந்தர்வ, வித்யாதரர்கள் பயந்து அங்கிருந்து கிளம்பி ஆகாயத்திற்குச் சென்றனர். பறவைகள் அலறி அடித்துக் கொண்டு பறந்தன. புற்றுகளில் இருந்து பாம்புகள் சீறிக்கொண்டு வெளிவந்தன.

 

ஹனுமன் மலை உச்சியில் நின்றபடி தாவத் தயாரானான். அப்பொழுது  அவன் வெளி உலகச் சிந்தனையிலிருந்து விடுபட்டு,மனத்தை அடக்கி இலங்கை சென்றவுடன் செய்து முடிக்க வேண்டிய காரணங்கள் என்னென்ன என்று சிந்திக்கத்  தொடங்கினான். தன் வேகத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு, மகா வேகவானான  வானர வீரன், எதிரிகளில் சிறந்த போர் வீரனையும் எதிர்த்து ஜயிக்க கூடிய வீரன், மனதை ஒருமைப் படுத்தி, மஹானுபாவன், தன் மனதால் இலங்கையை அடைந்தான். மனஸ்வியான ஹனுமான் மனோ பலம் மிகுந்தவன்.


======== 

स वेगवान् वेग समाहित आत्मा

हरि प्रवीरः पर वीर हन्ता |

मनः समाधाय महाअनुभावो

जगाम लंकाम् मनसा मनस्वी || ४-६७-४९

==============

 

இத்துடன் வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம் நிறைவு பெற்றது.

No comments: