Sunday, January 18, 2026

 


 

வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 இராமன் வாலி உரையாடல்

 பதிவு எண் 413

 

நேற்றைய தொடர்ச்சி...........

  

வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர் (பார்க்க, பகவத் கீதை உண்மையுருவில், 1.36). இவர்களை உடனே கொல்லலாம், அதனால் பாவம் ஏதுமில்லை. வாலி சுக்ரீவனிடத்தில் செய்த அக்கிரமத்திற்காக அவனை தண்டிக்க வந்த காவல் அதிகாரியைப் போன்றவர் ஸ்ரீ இராமர். “நான் வருகிறேன், உன்னை தயார்படுத்திக்கொள்” என்று அவர் அறிவிக்க வேண்டுமா என்ன? நிச்சயமாக அவசியம் இல்லை. எனவே, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வாலியை வதம் செய்ததில் என்ன தவறு?

 

“வாலியை இன்று நான் நிச்சயம் வதம் செய்வேன்,” என்று இராமர் உறுதி பூண்டிருந்தார். ஒருவேளை இராமர் எதிர்தரப்பில் நேருக்கு நேராக நின்றிருந்தால், வாலி என்ன செய்திருப்பான்? (1) பயத்தினால் ஓடி ஒளிந்திருக்கலாம், (2) இராவணனிடம் கூட்டு சேர்ந்திருக்கலாம், (3) சுக்ரீவனைப் போன்று இராமரிடமே தஞ்சமடைந்திருக்கலாம், அல்லது (4) மொத்த வானரப் படைகளையும் கொண்டு இராமருடன் போர் புரிந்திருக்கலாம். இதில் எது நடந்திருந்தாலும் இராமரின் வாக்குறுதி தாமதமாகியிருக்க வாய்ப்பு உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.

 

ஒருவேளை சுக்ரீவனைப் போன்று இராமரிடம் வாலி தஞ்சமடைந்திருந்தால், சரணடைந்தவனைக் கொல்வது மரபல்ல என்பதால் வாலி கொல்லப்பட்டிருக்க மாட்டான். அப்போதுகூட முழுமுதற் கடவுளான இராமரால் சுக்ரீவனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை ஏதாவதொரு விதத்தில் நிறைவேற்றியிருக்க முடியும் என்றபோதிலும், அதில் சில சிக்கல் வந்திருக்கும். ஒருவேளை மொத்த வானர சேனைகளையும் கொண்டு இராமருடன் வாலி போரிட்டிருந்தால், வானரங்கள் அனைவரும் மடிந்திருப்பர். வானரங்கள் இராமருக்கு உதவுவதற்காகத் தோன்றிய தேவர்கள், அவர்கள் கொல்லப்படுவதை இராமர் விரும்பவில்லை; அகந்தையால் மதிமயங்கிய வாலியை மட்டும் கொல்வதற்கு அவர் முனைந்தார்.

 

மேலும், யாரேனும் தனக்கு நேராக நின்று போரிட்டால், அவர்களின் சக்தியில் பாதி தனக்கு வந்துவிட வேண்டும் என்று வாலி ஒரு வரம் பெற்றிருந்தான். (இத்தகவல் வால்மீகி இராமாயணத்தில் இல்லை என்றபோதிலும் மற்ற இடங்களில் கூறப்படுவதுண்டு) இருப்பினும், பகவான் ஸ்ரீ இராமர் அனைத்து சக்திகளையும் கொண்டவர், வரம் தரும் தேவர்களுக்கும் அவரே சக்தியளிக்கிறார் என்பதால், வரத்தை மீறி அவரால் சுலபமாக வாலியை வதம் செய்திருக்க முடியும். ஆயினும், தேவர்கள் வாலிக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும் அவர்களின் மதிப்பை குறைத்துவிட வேண்டாம் என்பதற்காகவும், பகவான் இராமர் வாலியை மறைந்திருந்து வதம் செய்தார்.

 

இச்சமயத்தில், பிரம்மதேவரிடமிருந்து பல வரங்களை பெற்ற ஹிரண்யகசிபுவை நாம் நினைவு கொள்ளலாம். அவன் பெற்றிருந்த வரங்கள் அவனைப் பல்வேறு சூழ்நிலைகளில் காப்பாற்றியபோதிலும், பகவானோ பிரம்மதேவரின் வரம் பொய்க்காமல் இருக்கும்படி பாதி மனிதனும் பாதி சிங்கமுமான நரசிம்மராகத் தோன்றி ஹிரண்யகசிபுவைக் கொன்றார். அதுபோல, வாலி பெற்ற வரத்தையும் பொய்க்கச் செய்ய இராமர் விரும்பவில்லை.

 



 தொடரும்

No comments: