Monday, January 12, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

================

இரண்டாம் நாள் பதிவு எண் ஐந்து

அடுத்து நாம் சென்ற இடம் ரம்போட நீர் வீழ்ச்சி.


இலங்கையின் மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ரம்போடா நீர்வீழ்ச்சி (Ramboda Falls) இலங்கையின் 11ஆவது உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இது சுமார் 109 மீட்டர் (358 அடி) உயரம் கொண்டது; பன்னா ஓயா (Panna Oya) ஆற்றின் நீரால் உருவானது இலங்கையின் மத்திய மலைப்பகுதியின் அழகிய இயற்கைச் சின்னமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் உள்ளது. நீர் வீழ்ச்சியின் அடியில் இயற்கையான குளம் ஒன்று உள்ளது. நுவரலியாவே சுற்றுப்பயணிகளின் சுவர்க்கம். இதனுடன் ஒப்பிடும்போது ஊட்டி, கொடைக்கானல் இவைகள் ஒன்றுமே இல்லை என்றே சொல்லலாம். அதுவும் தேனிலவு கொண்டாட உலகத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு தம்பதிகள் வந்து குவிகின்றனர். . இங்கு உள்ள கட்டிடங்கள் எல்லாமே வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பதாம். இப்போது கட்டப்படும் கட்டிடங்கள் இன்றும் அந்த வெள்ளையர்கள் பாணியிலேயே கட்டப்படுவதாகச் சொல்கின்றனர்.

அங்கிருந்து நாங்கள் ஒரு தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு சுவையான சூடான தேநீர் வழங்கப்பட்டது. அந்த தேநீரைத் தயார் செய்த பணிப்பெண்களில் ஒருவர் எங்களிடம் “உங்களிடம் எக்ஸ்ட்ரா புடவைகள் இருந்தால் எங்களுக்கு கொடுங்களேன்” என்றாள். நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எங்களுடைய பயண அமைபபாளர் எங்களிடம் இவர்கள் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிபவர்கள். இவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தில் இவர்களால் வாழ்க்கை நடத்துவது சிரமமாக உள்ளது. காரணம் இங்கு விலைவாசி அதிகம்” என்றார். அவர் சொன்னது சரிதான். மறுநாளே நாங்கள் ‘லங்கா சில்க்ஸ்” என்ற கடைக்குச் சென்றோம். அங்குள்ள சாதாரணப் புடவைகள் இலங்கைப் பணத்தில் 15000. 20000, 25000, 28000 ரூபாயாக இருந்தன. (ஒரு இந்திய ரூபாய். 3.20 இலங்கை ரூபாய்க்குச் சமம்) இந்த விலை விற்றால் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் அந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எப்படி பொருட்களை வாங்க முடியும்? அந்தக் கடையில் ஒரு ஜீன்ஸ் பாண்ட் விலை இலங்கை ரூபாயில் 18000. அதே பாண்ட் இங்கு ஜெச்சந்திரன், சரவணா ஸ்டோர்களில் ஐநூறு அறுநூறு ரூபாய்க்கு வாங்கி விட முடியும். நாங்கள் எதுவும் வாங்காமலே திரும்பி விட்டோம். அப்போது தான் எனக்கு அந்தத் தேயிலைத் தோட்ட பெண்களின் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்று தெரிந்தது. என்ன செய்வது? முன்பே தெரிந்திருந்தால் இங்கிருந்தே நிறைய புடவைகள் எடுத்துச் சென்று இருக்கலாம். அங்கு ஒரு பெரிய அரங்கில் வகை வகையான டீ தூள்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். அதைப் பார்த்துத் திகைத்து விட்டோம். அத்த்தனை வகைகளை இதுவரைக் கண்டதில்லை. விலை அதிகம் தான். ஆனால் எல்லாமே தரம் நிறைந்தவை. ஏற்றுமதி தரம் நிறைந்தவை என்று பயண அமைப்பாளர் தெரிவித்ததார். அவர்கள் இந்தியப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அங்கிருந்து விடை பெற்றுத் தாங்கும் விடுதிக்கு வந்தோம். நாளை மூன்றாம் நாள். எங்கு சென்றோம்?

No comments: