Monday, January 5, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

முதல் நாள்

கொழும்புவில் நாங்கள் பார்த்த இடங்களில் ஒன்று

வெலிகட சிறைச்சாலை.

நேற்றே சொல்லியிருந்தேன் உலக சரிதத்தின் அத்தியாயங்களை தனது கரும் பக்கங்களால் அலங்கரித்த இடம் அது.. அதுதான் வெலிகட சிறைச்சாலை. பொதுவாக சிறைச்சாலைகள் நகரின் வெளியே இருக்கும். ஆனால் இந்த சிறைச்சாலை கொழும்பு நகருக்குள்ளேயே உள்ளது. உயர் அடுக்கு பாதுகாப்பு நிறைந்த சிறை. 1841 பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது. இந்தச் சிறை 41 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. நாலாயிரம் கைதிகளை தன்னகத்தே வைத்துக் கொள்ளும் திறன் உள்ளதாக அறியப்படுகிறது.

1983 ல் தான் அந்த விரும்பத் தகாத நிகழ்வுகள் இங்கு நடந்தன. அவ்வருடம் ஜூலை மாதம் 25 மற்றும் 27 தேதிகளில் நீதி மன்றக் காவலில் இங்கு வைக்கைப்பட்டிருந்த 53 தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உலகையே உலுக்கிய இந்த நீகழ்வை உலகத் தலைவர்கள் எல்லோரும் கண்டித்தனர். இது இலங்கை உள்நாட்டுப் போரின் (1983-2009) தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று பல சர்வதேச அமைப்புகளும் (அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இன்டர்நேஷனல் கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட்ஸ்) கூறுகின்றன. இது இலங்கை வரலாற்றின் கருப்பு அத்தியாயம். இன்றைய தலைமுறையினருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) –

கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) இலங்கையின் மிகப் புகழ்பெற்ற மாநாட்டு மையமாகும். இது 1973 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது; சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டது.

-இலங்கையின் முன்னாள் பிரதமர் சாலமன் வெஸ்ட்ரிஜ் ரிச்சர்ட் பண்டாரநாயக்க அவர்களின் நினைவாக கட்டப்பட்டது.. - சீன அரசாங்கத்தின் பரிசாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.. - கட்டுமானம் 1970 இல் தொடங்கி, 1973 இல் திறக்கப்பட்டது. சீனக் கலை வடிவங்களும், இலங்கை கலாச்சாரச் சின்னங்களும் இணைந்த கட்டிடக்கலை.. சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒன்பது தனித்தனி கட்டிடங்கள், மாநாட்டு மண்டபங்கள், கண்காட்சி மையங்கள், விருந்தினர் மண்டபங்கள். 1,600 பேரை அமர்த்தும் திறன் கொண்டது . இலங்கையின் சர்வதேச மாநாடுகள், கலாச்சார நிகழ்வுகள், வணிகக் கூட்டங்கள் நடைபெறும் முக்கிய இடம்.. இலங்கை–சீனா நட்பின் சின்னமாகக் கருதப்படுகிறது. இலங்கையின் பெருமையாகக் கருதப்படுகிறது.

பயணம் தொடரும்




No comments: