மனுஸ்ம்ருதி
சமீபத்தில் பத்திரிகைகளிலும் மீடியாக்களிலும் அதிகமாக அடிபடுவது 'மனுஸ்ம்ருதி' என்ற நூல் தான். இந்த நூல் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியாது. எத்தனைபேர் இந்த நூலைப் படித்துள்ளனர்? எந்த அரசும் இந்த நூலை எல்லோரும் படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆனாலும் இந்த நூலை (சட்டப் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு சுற்றியது போல) கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய பெண்கள் கூட்டத்தை முன்னிறுத்தி இந்த நூல் பெண்களை அடிமைப் படுத்துகிறது என்று ஒரு வாதத்தை ஒரு சிலர் பேசிக் கொண்டு திரிகின்றனர்.
அவர் கூட்டியுள்ள கூட்ட்டத்தில் எத்தனை மகளிற்கு இந்த நூலை பற்றிய விவரங்கள் தெரியும் என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட அறியாமைதான் அரசியல்வாதிகளின் மூல தனம். எந்த ஒரு நல்ல நூலும் அந்தக் காலகட்டத்து சமுதாய அமைப்பை, அரசியல் அமைப்பை அடிப்படையாக வைத்துதான் இயற்றப்படுகிறது. அந்த நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூலை இன்றைய சமுதாயத்தை உரைகல்லாக வைத்து உரசி ஒரு தீர்மானத்திற்கு வருவது வடிகட்டிய முட்டாள் தனம். மேலும் அந்த நூல்கள் எல்லாமே மூல நூல்களா என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம் நிறைய இடைச்செருகல்கள்.
ஆனாலும் பெண்களைப் பற்றி மனுஸ்ம்ருதி எவ்வாளவு உயர்வாகச் சொல்லி உள்ளது என்ற உண்மைகளை தங்கள் வசதிக்கேற்ப மறைத்து எதிர்மறையாக நினைக்கப்படும் கருத்துக்களையே பரப்பிவிடுகின்றனர்.
பெண்களை உயர்வாக சொல்லும் ஒரு சில ஸ்லோகங்களை இப்போது பார்ப்போம்.
पितृभिर्भ्रातृभिश्चैताः पतिभिर्देवरैस्तथा ।पूज्या भूषयितव्याश्च बहुकल्याणं ईप्सुभिः3.55
தந்தை, சகோதரர், கணவன், கணவனுடைய சகோதரர் ஆகியோர் பெண்களை மரியாதை செய்து, அலங்கரித்து, மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்; குடும்பத்தின் நலனை விரும்புவோர் இப்படிச் செய்ய வேண்டும்.
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः3.56
“எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கே தேவர்கள் மகிழ்கிறார்கள்; எங்கே பெண்கள் போற்றப்படவில்லையோ அங்கே செய்யப்படும் அனைத்து சடங்குகளும் பயனற்றவை.”
शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत्कुलम् ।न शोचन्ति तु यत्रैता वर्धते तद्धि सर्वदा 3.57
பெண்கள் துயரப்படுகின்ற குடும்பம் விரைவில் அழியும்; பெண்கள் துயரப்படாமல் இருக்கும் குடும்பம் எப்போதும் வளரும்.
जामयो यानि गेहानि शपन्त्यप्रतिपूजिताः ।तानि कृत्याहतानीव विनश्यन्ति समन्ततः 3.58
மரியாதையுடன் நடத்தப்படாத வீட்டுப் பெண்கள் இடும் சாபம் அந்தக் குடும்பத்தையே அழித்து விடும்
अध्यग्न्यध्यावाहनिकं दत्तं च प्रीतिकर्मणि ।
भ्रातृमातृपितृप्राप्तं षड्विधं स्त्रीधनं स्मृतम् ॥
திருமண அக்னியின் முன் வழங்கப்பட்டது, மணமகளை அழைத்துச் செல்லும்போது வழங்கப்பட்டது, அன்பினால் வழங்கப்பட்டது, மேலும் சகோதரன், தாய், தந்தை ஆகியோரிடமிருந்து பெற்றது ஆகியவை பெண்ணுடைய ஆறு வகையான “ஸ்த்ரீதனம்” என்று மனு வரையறுக்கிறார்.
இது ஒரு முக்கியமான சொத்துரிமைக் கருத்து.
மேலும், மனுஸ்மிருதி 3.52-ல் பெண்ணுடைய தனிப்பட்ட பொருட்களை உறவினர்கள் அபகரிப்பதைப் பாவமாகக் குறிப்பிடுகிறது.
जनन्यां संस्थितायां तु समं सर्वे सहोदराः ।
भजेरन्मातृकं रिक्थं भगिन्यश्च सनाभयः
தாய் இறந்த பின்னர், ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களும் சகோதரிகளும் தாயுடைய சொத்தைச் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மனுஸ்மிருதி 9.90:
त्रीणि वर्षाण्युदीक्षेत कुमार्यृतुमती सती ।
ऊर्ध्वं तु कालादेतस्माद्विन्देत सदृशं पतिम् ॥ ९.९० ॥
திருமண வயதை அடைந்த பெண் மூன்று ஆண்டுகள் காத்திருக்கலாம்; அதன் பின்னர் தனக்குச் சமமான கணவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறது.
அதற்குப் பிறகு 9.91:
अदीयमाना भर्तारमधिगच्छेद्यदि स्वयम् ।
नैनः किं चिदवाप्नोति न च यं साधिगच्छति ॥ ९.९१ ॥
அவளுக்கு திருமணம் செய்து வைக்கப்படாமல் இருந்தால், அவள் தானாகவே ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்தாலும் அவளுக்கு எந்தப் பாவமும் இல்லை; அவள் மணந்த ஆணுக்கும் பாவம் இல்லை.
மீண்டும் சொல்கிறேன். ஒரு நூல் அந்தக் kala கட்ட சமுதாயத்தை மையமாக வைத்து இயற்றப்படுவதால் அந்தக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து அந்த நூலைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. பெண்களைப் பற்றி மேலே சொன்ன கருத்துகளும் அதே மனுஸ்ம்ருதியில் தான் சொல்லப்பட்டுள்ளது.