Saturday, January 24, 2026

 




இலங்கையில்

ஏழு நாட்கள்

=====================

ஐந்தாம் நாள் பதிவு எண் இரண்டு


நல்லூர் கந்தசுவாமி கோவில்

இலங்கை திருநாட்டின் வடபுலத்தில் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில், நல்லூர் கந்தசுவாமி கோவில் சிறப்பிடம் பெறுகின்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில்/ ஆறுமுகக் கடவுள் வேல் வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலம் இதுவாகும். வாழ்வில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறியது. இது இலங்கையில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாகக் கருதப்படுகிறது.

கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது.

யாழ்ப்பாண வைபவ மாலை', 'கைலாய மாலை' ஆகிய நூல்களில், யாழ்ப்பாணத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களுள் ஒருவரான புவனேகவாகு என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், `15-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த, 'கோட்டே' சிங்கள அரசரின் பிரதிநிதியாக இருந்து, பிற்காலத்தில் 'ஶ்ரீசங்கபோதி' என்னும் பட்டம் பெற்ற புவனேகவாகு என்னும் 'செண்பகப் பெருமாள்' என்பவரால் கட்டப்பட்டது’ என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாகக் கோயிலில் சொல்லப்படும் கட்டியத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். இன்னும் சிலர், `புவனேகவாகு தன்னுடைய காலத்தில் ஏற்கெனவே இருந்த கோயிலைப் புதுப்பித்துக் கட்டியிருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்களின் தளபதியாக இருந்த 'பிலிப்பே டி ஒலிவேரா' (Phillippe de Oliveira) யாழ்ப்பாணத்தைத் தலைநகரமாக மாற்றினார். நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும் செய்தார். அங்கே ஒரு தேவாலயமும் கட்டினார். பின்னர் வந்த டச்சுக்காரர்கள் அந்த தேவாலயத்தை தங்கள் மரபுக்கு உரிய முறையில் வழிபடக்கூடிய தேவாலயமாக மாற்றிக்கொண்டனர்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் மீண்டும் இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டபோது, நல்லூர் கந்தசுவாமி கோயிலும் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர், தமிழ் இலக்கியத்துக்கும் ஆன்மிகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் இந்தக் கோயிலின் பூஜைமுறைகளை நெறிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலில் வியப்புக்குரிய செய்தி ஒன்றும் உள்ளது. கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. ஆம்! கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக வழிபடப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும் வெற்றிவேலைத்தான், இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக எழுந்தருளச் செய்திருக்கிறார் முருகப் பெருமான். திருவிழாக்களின்போது இந்த 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து, வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதிவலம் வருகின்றனர்.

கோயிலின் நீண்ட அழகிய பிராகாரங்களில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப்பூச்சுகள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை, குழந்தை கிருஷ்ணன், சூரியன், சூலம் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. கோயிலும் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது.

மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, அமர்ந்தநிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது. மண்டபச் சுவர்களில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன.


உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள். இங்கு அர்ச்சனை டிக்கட் விலை இலங்கை ரூபாய் ஒன்று. இன்று கோவில் இராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அதனால் மாலை ஆறு மணிக்கு கோவில் மூடப்பட்டு விடுகிறது. அந்த முருகன் இலங்கை வாழ் தமிழர்களை காக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


பயணம் தொடரும்




No comments: