Wednesday, December 31, 2025

 

வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

  சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 395

 

நேற்றைய தொடர்ச்சி

 

மீண்டும் வால்மீகியிடம்  வருவோம்.

 

புதிய தெம்பும் நம்பிக்கையும் பெற்ற வானரங்கள்  கடற்கரையை அடைந்தன.  கடலின் மிகப் பெரிய பரப்பளவைக் கண்டதும் அதைக் கடந்து செல்வது நடக்காத காரியம் என்று மீண்டும் உற்சாகமிழந்தனர். இந்தப் பெரிய கடலைத் தாண்டிச் செல்வது எப்படி? அல்லது இதைத் தாண்டிச் சென்று சீதையைப் பார்த்து வரும் ஆற்றல் பெற்றவர் யார்? என்று ஆலோசனை செய்தபடி நடந்தனர்.

 

அங்கதன் அவர்களை உற்சாகப் படுத்தி “நூறு யோசனைத் தாண்டி சீதையை இராவணனின் பிடியிலிருந்து மீட்கும் பணியை ஏற்கும் வானரங்கள் தயவு செய்து முன் வரலாம். சுக்ரீவனின் மரண தண்டனையிலிருந்து விடுபடலாம்” என்று கூறினான்.

 

இதற்கு யாரும் மறுப்புக் கூறவில்லை. பிறகு அங்கதன் எத்தனை தூரம் தாவுவார்கள்  என்பதை ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டு வந்தான். ஆனால் அவர்கள் யாராலும் கடலைக் கடக்க முடியாது என்று தெரிந்து கொண்டான்.

 

கடைசியாக ஜாம்பவான் “முன்பு நான் வரம்புக்கு மீறி எத்தனை யோஜனையானாலும் தாவும் சக்தியைப் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது வயதாகி விட்ட படியால் 90 யோசனை தூரம் தான் என்னால் தாண்ட முடியும். வெகு காலத்திற்கு முன் வாமன அவதாரத்தில்  வாமனன் விஸ்வ ரூபமெடுத்து  உலகமனைத்தும் மறைத்து நின்றான்.. அவன் மூன்றடி அளக்கும் பொழுது நான் அவன் திருவடிகளை வலம் வந்து வணங்கினேன். இப்பொழுது எனது துரதிர்ஷ்டம் என்னால் இலங்கைக்கு தாவிச் சென்று  சீதையைக் காப்பாற்ற இயலாமல் உள்ளேன்” என்று வருத்தப்பட்டான்.

 

அப்பொழுது அங்கதன் ஜாம்பவானைப் பார்த்து “நான் நூறு யோசனைத் தூரத்தை சாதாரணமாகத் தாண்டுவேன். ஆனால் என்னால்  திரும்பி வர முடியுமோ முடியாதோ அதுதான் எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னான்.

 

உடனே ஜாம்பவான் அங்கதனைப் பார்த்து  “இளவரசே! நீங்கள் பெரும் பலம் பொருந்தியவர் என்பதை நான் அறிவேன். உங்களால் ஆயிரம் யோசனை தூரத்தையும் தாண்ட முடியும். நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் சென்று திரும்புவீர்கள். அதனை நான் அறிவேன். ஆனால், அரசனாய் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு கட்டளை இடலாமே தவிர, தாமே செய்யக் கூடாது. எங்களில் யாராவது ஒருவரை அனுப்புங்கள். தாங்கள் செல்ல வேண்டாம்/ அதுதான் சிறப்பாக இருக்கும்” என்று கூறினான்.

 

தொடரும்

No comments: