Saturday, January 31, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

================

 இணுவில் கந்தசாமி கோவில்

  

இலங்கையின் அறுபடை வீடுகளில் நாலாவது வீடாகும்

  

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது.

 

இதன் வராலாறு

 

யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.

 

"ஒரு நாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிளம்பு தெரியும் இடம் முதலியார் வீடு இருந்த திசையே என்பதை உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாற்புறத்தில் இருந்தும் அவரது வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களும் இன்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். அதற்கு முதலியார் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்து விட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தன் குடிமக்களுக்கும் நல்லருள்பாலிக்கும் பொருட்டுக் காட்சி கொடுத்துள்ளாரென மனம் நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். திருவருள் சித்தத்திற்கிணங்க முருகப் பெருமானையும், வைரவப் பெருமானையும் தன் இல்லத்தில் குடிலமைத்து அமைத்து வழிபட்டு வந்தாரென ........" [1]

 

தற்போது இக்கோயிலுக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு கோயில், மேற்சொன்ன கனகராச முதலியின் நினைவாக மக்கள் நடுகல் நாட்டி வழிபட்ட இடம் எனக் கருதப்படுகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போத்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்ததுடன், இந்துசமய வழிபாட்டுக்கும் தடை விதித்தனர். இதனால் கனகராச முதலியால் அமைக்கப்பட்ட கோயிலும் அழிந்து போனது. 1661 ஆம் ஆண்டில் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. இது தொடர்பிலும் ஒரு கதை உண்டு.

 

"அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படியும், தான் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் கூறி "உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள நொச்சிமரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்". அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கு இணங்கப் புதிதாக ஒரு நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச் சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். அவ்விடத்திற் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்."

 

அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் இன்று கருவறைக்கு அருகில் இருப்பது மேற்சொன்ன நொச்சி மரமே என்றும் கருதப்படுகிறது.

  

1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது.[5] 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967 ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின.. அங்கிருந்து ஐந்தாவது படை வீட்டைக் காண கிளம்பினோம்

 



பயணம் தொடரும்.

 

 



 

 



 துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் ஒன்பது

 

நேற்றைய தொடர்ச்சி..........................

 

முதலில் இராம இலக்ஷ்மனர்களை வணங்கி கிஷ்கிந்தா காண்டத்தைத் தொடங்குவதை சென்ற பதிவில் பார்த்தோம். அடுத்து.

 

இராம நாமம்

 

அடுத்து இராம நாம மகிமையின் புகழ் பாடுகிறார் துளசிதாசர்

 

ब्रह्माम्भोधिसमुद्भवं कलिमलप्रध्वंसनं चाव्ययं

श्रीमच्छम्भुमुखेन्दुसुन्दरवरे संशोभितं सर्वदा।

संसारामयभेषजं सुखकरं श्रीजानकीजीवनं

धन्यास्ते कृतिनः पिबन्ति सततं श्रीरामनामामृतम्‌॥2॥

 

இராம நாமம் வேதங்கள் என்னும் கடலில் உண்டானது. கலியின் மாசுக்களை அகற்றுவது. குறைவுராதது. எப்போதும் பகவான் சங்கரரின் திருமுகச் சந்திரனிலே ஒளியுடன் விளங்குவது. பிறப்பு இறப்பு என்றா சம்சார நோய்க்கு மருந்து. அனைவருக்கும் சுகமளிப்பது. சீதாதேவியின் உயிர். அந்த ஸ்ரீராம நாமம் என்ற அமுதத்தை புண்ணியம் செய்து கொடுத்து வைத்தவர்களே பருகுவர்.

  

ஆம், “ராம” என்ற திருநாமம் வேதாந்தத்தின் ஆழமான தத்துவங்களிலிருந்து தோன்றியதாகவே பாரம்பரியத்தில் கருதப்படுகிறது. இது சூரியன், அக்‌னி, சந்திரன் ஆகிய தெய்வீக சக்திகளை உள்ளடக்கிய பீஜ மந்திரங்களின் சங்கமமாகவும், விஷ்ணு-சிவ சக்திகளின் ஒற்றுமையாகவும் விளக்கப்படுகிறது.

 

ராம” என்ற திருநாமத்தின் வேதாந்த அடிப்படை:

 

1.பீஜ மந்திரங்களின் சங்கமம்:

 

- “ரா” = ரவி (சூரியன்) → ஞான ஒளி

- “அ” = அக்‌னி → சுத்திகரிக்கும் சக்தி

- “ம” = சந்திரன் → சாந்தம், கருணை

 

இந்த மூன்று எழுத்துகளும் வேத மந்திர பீஜங்கள்.

 

“ராம” என்ற பெயர், தெய்வீக சக்திகளின் ஒளி, ஆழம், அமைதி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு.

 

ராமசரித்மானஸ் போன்ற பக்தி இலக்கியங்களில், “ராம” என்ற நாமம் வேதங்களின் சாரம் எனக் கூறப்படுகிறது. நமது வேதங்களில் உள்ள மற்ற எல்லா மந்திரங்களுக்கும் அவற்றின் சொந்த பெயர்கள் உள்ளன. 'தாரக மந்திரம்' என்று அழைக்கப்படும் ஒரே மந்திரம் ராம நாமம். 'தாரக' என்ற வார்த்தையின் அர்த்தம் நம்மை கடக்க உதவும் ஒன்று. இது 'சம்சாரம்' என்ற பெருங்கடலைக் கடக்க உதவுகிறது. பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிகளைக் கடக்க உதவுகிறது.


அதை 'ராம' என்று உச்சரித்தால், அது ஒரு நாமம்.

 

'ராம்' என்று உச்சரித்தால், அது ஒரு மந்திரம்.

 

சகுண உபாசனத்தில் (முழுமையான உண்மையை ஒரு உருவத்துடன் வணங்குதல்) ராம நாமம் அதே முக்கியத்துவத்தைப் பெறுகிறது, அதே போல் நிர்குண உபாசனத்தில் (முழுமையான உண்மையை உருவமற்றதாக வணங்குதல்) பிரணவ ('ஓம்') மந்திரமும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

ராம நாமம் எல்லா மந்திரங்களுடனும் தொடர்புடையது என்பதை ரிஷி மனு காட்டுகிறார்.

 

தொடரும்..........


.

Friday, January 30, 2026

 




இலங்கையில்

ஏழு நாட்கள்

=================

 

 

மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்

 

இலங்கையில் முருகனின் அறுபடை வீடுகளில் இது மூன்றாவது வீடாகும்


ஈழத் திருநாட்டில் தொன்மையும் மகிமையும் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. வடக்கே கீரிமலை–நகுலேசர் ஆலயம், கிழக்கே கன்னியா–கோணேசர் ஆலயம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம், மேற்கே பாலாவி–திருக்கேதீச்சரநாதர் கோவில் போன்ற ஐம்பெரும் தலங்கள் ஈழத்தை இயற்கையான அரணாக பாதுகாக்கின்றன.


இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது.

 

குமரிக்கண்டத்தின் ஒரு கூறே ஈழமாக இருந்ததாகப் பல அறிஞர்கள் கூறுவர். கடலால் விழுங்கப்படாமல் சிறுதீவாக இப்பகுதியின் தலங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டுமென இறைவன் அருள்புரிந்ததாகவும் கருதப்படுகிறது. அவ்வாறு சிறப்பு பெற்ற தீர்த்தங்களில் ஒன்றின் அருகே எழுந்த திருத்தலமே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்.

 

மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ்பாணத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் இந்த ஆலயம் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்திற்கென சிறப்புகள் உண்டு,  இந்தக் கோவில் சிவாகமச் சிற்ப நூல் முறையில் அமைந்தது.  இந்த ஆலயத்தின் வரலாற்றில் மாருதபுரவீகவல்லி  என்னும் இளவரசியின் குதிரை முகம் நீக்கப்பட்டது முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்கின்றது.. சூரசங்காரத்திற்குப் பிறகு முருகப்பெருமான் இத்தலத்தில் தங்கியதாகவும் ஒரு ஐதீகம் உண்டு. “மா”  என்பது சூரன் மாமர வடிவம், “விட்ட” – அது களைந்தது, “புரம்” – இடம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. தலவிருட்சமாய் மாமரம் இருப்பதும் இதற்கு சான்று.

 

இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரையை ஆட்சி புரிந்த  உக்கிரப்பெருவழுதி எனும் சோழ மன்னனின் மகள் மாருதபுரவீகவல்லி  குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீர வில்லை.  சாந்தலிங்க முனிவருடைய வழிக் காட்டலின் கீழ் இவ்விளவரசி தென்னிந்தியாவில் இருந்து கீரிமலை வந்து நீராடி கந்தசாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருடைய நோய் நீங்கியதுடன் குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள்.  இக்காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா (குதிரை) + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகின்றது.

 

சோழநாட்டு இளவரசி தன் குதிரைமுகம் நீங்கியதன் கைமாறாக மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார்.  இந்த ஆலயம் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.  இதன் முதற் கும்பாபிஷேகம் கி.பி 789 இல் நிகழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

 

போர்த்துகேயர் இலங்கை மீது படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றிய வேளையில், மத மாற்றும் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலும் பகுதியாகச் சேதப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள். ஆனால் மாருதபுரவீகவல்லியால் நிருமாணிக்கப்பட்ட மூலஸ்தானமும் மூலவர் கந்தசுவாமியும்   இற்றைவரை அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1782 ந்தக் கோவில் புனரமைக்கப்பட்டது

 

மாருதபுரவீகவல்லி வழிபட்ட  வேல் இன்றும் கூட மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுவதைக் கண்ணுறலாம். முருகப்பெருமான் வள்ளி–தெய்வயானையுடன், விநாயகர், நடேசர், சந்திரசேகரர், ஆறுமுகர், முத்துக்குமாரசுவாமி, சுப்பிரமணியர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, வைரவர், தண்டாயுதபாணி, நவக்கிரகங்கள், சண்டேசுரர். ஆகியவை கோவிலின் முக்கிய மூர்த்திகள்.

 

பயணம் தொடரும்

 



 

 

 

 

 


 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு


பதிவு எண் எட்டு

 

நேற்றைய தொடர்ச்சி..........................

 

 

கிஷ்கிந்தாக் காண்டத் தொடக்கம்

சர்கம் 1 

 

कुन्देन्दीवरसुन्दरावतिबलौ विज्ञानधामावुभौ

शोभाढ्यौ वरधन्विनौ श्रुतिनुतौ गोविप्रवृन्दप्रियौ।

मायामानुषरूपिणौ रघुवरौ सद्धर्मवर्मौ हितौ

सीतान्वेषणतत्परौ पथिगतौ भक्तिप्रदौ तौ हि नः ॥1

 

இங்கு இராம இலக்ஷ்மணர்களை துளசிதாசர்  வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே நமக்கு வேலை கொடுத்துவிட்டார் துளசிதாசர். ஸ்லோகத்தின் பொருள் என்ன?

 

இறைவன் இராமன் மல்லிகைப் பூ போலவும் தாமரை மலரைப்  பூ போலவும் அழகானவர் வசீகரமானவர் விதிவிலக்காக வலிமையானவனவர்   சக்திவாய்ந்தவர். உயர்ந்த ஞானம் . மற்றும் புலமையின் களஞ்சியம். மகத்துவம்  மற்றும் கருணை ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர். சிறந்த வில்லாளி. வேதங்களால் பாராட்டுப் பெற்றவர். பிராம்மணர்களால் (சமுகத்தின் முதியவர்கள் மற்றும் கற்றவர்களால்) நேசிக்கப்படுபவர் தனது உண்மை அடையாளத்தை மறைக்க மானுட வடிவம் எடுத்தவர, ரகு வம்சத்தின் மன்னர்களில் சிறந்தவர்,  உயர்ந்தவர், தர்மத்திற்கு ஒரே கேடயம் போன்றவர், அனைவரின் நலவிரும்பி, வனத்தில் பயணித்து விடாமுயற்சியுடன் சீதையைத் தேடி வருபவர், அந்த இறைவன் நமக்கு பக்தியின் வரத்தை வழங்குவானாக   ................ஒரு சில உரையாசிரியர்கள் இவ்வாறு இந்த காண்டத்தை ஆரம்பிக்கின்றனர்.


ஒரு சிலர்  இவ்வாறு சொல்கின்றனர்.....முல்லை மலர் போலவும்,  நீல ஆம்பல் போலவும், மஞ்சள் நீல  நிறமுடையவர்கள், மிக்க வலிமையானவர்கள், விஞ்ஞானத்தின் உறைவிடங்கள், பொலிவு உள்ளவர்கள், சிறந்த வில்லாளிகள், வேதங்களால் கொண்டாடப்படுபவர்கள், பசுக்கள் அந்தணர்கள் கூட்டத்திற்கு பிரியமானவர்கள், மாயையாக மனித வடிவெடுத்தவர்கள், அனைவருக்கும் நன்மை புரிபவர்கள். சீதையைத் தேடுவதில் முனைந்து வழிநடப்பவர்கள், அத்தகைய ரகுகுலத்தின் சிறந்த சகோதரர்களான இருவர் நமக்கு பக்தியை அளிக்கட்டும்.

  

முதல் சுலோகம் இராமனை மட்டும் குறிக்கிறது.

 

இரண்டாவது சுலோகம் இராம இலக்ஷ்மணர்களைக் குறிக்கிறது.

  

அதாவது சீதையைத் தேடி இராமனும் இலக்ஷ்மணனும் காட்டில் சென்றதால் இந்த சுலோகம் இருவரையும் குறிக்கும் என்று ஒரு சில அறிஞர்கள் சொல்லுகின்றனர். ஒரு சில அறிஞர்கள் ரகு குலத்தின் புகழ் பெற்றவர,

 

மூத்தவர் என்று பொருள்படும் रघुवरौ  raghuvarau என்ற சொல் இருவரை அல்ல ஒரு தனி நபரைக் குறிக்கும் என்பதால் ஸ்லோகத்தை இராமன் மீதே மையப் படுத்த விரும்புகிறார் துளசிதாசர் என்று சொல்கின்றனர்.  இராம சரித மானஸில்  இந்த வார்த்தை அல்லது அதன் வெவ்வேறு மாறுபாடுகள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் இராமனை மட்டும் குறிக்கின்றன. வேறு யாரையும் அல்ல. இலக்ஷ்மணன் உட்பட அவரது சொந்த சகோதரர்களைக் கூட அல்ல என்று ஒரு சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

 


தானமுற்ற சீலர் தவத்தாற் பெருமை கொண்டோர்

ஞானமுற்ற மேலோர் நலம் பெறவாம் கானமுற்றும்

என்னலிரா வானவர்கட் கேற்ற பதமளிக்கும்

வள்ளலிரா மன்றாண் மலர்

(வித்வான் சுப்ரமணிய ஐயரின்

இராமாயண வெண்பா)



 

தொடரும்............

Thursday, January 29, 2026

 


இலங்கையில்

ஏழுநாட்கள்

=================

 கீரிமலை– நகுலேஸ்வரம்*

  

அடுத்த நாங்கள் சென்ற இடம் கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்.

 

ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும். .உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் என்னும் பெயர்களும் இத் திருத்தலத்துக்கு உண்டு. இராவணன், இலங்காபுரியை ஆட்சிசெய்த காலத்தில், இவ்வாலயம் மிகச் சிறப்பாக விளங்கியதாகக் கைலாசபுராணம் என்ற நூலிலே கூறப்பட்டுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது

 புராதனப் பெருமை வாய்ந்த இத் திருத்தலத்தின் ஆலயத்தோற்றம் மிகவும் அற்புதமானது. கர்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்தமண்டபம், பரிவார தேவர் கோயில்கள், கோபுரவாயில், கோயில்பிரகாரம் என்னும் அமைப்புக்களுடன் இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் சிவாகமவிதிகளுக்கும், சிற்பசாத்திர முறைகளுக்கும் அமையவே உருவாக்கப் பட்டிருந்தது.

 இக் கோயில், ஆதிகாலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்ந்துவந்த நகுலேசப் பாசுபதர்களினால் அமைக்கப்பட்டதென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். (ஆனால், ஆதிகாலத்துக் கோயில் 1621ம் ஆண்டு, போர்த்துக்கேய ஆட்சியாளர்களால் முற்றிலுமாக இடித்து அழிக்கப்பட்டது.

மேலும், அந்த ஆதிக் கோயிலில் இருந்த கருவறைத் திரு உருவச் சிலைகளும் மற்றும் வழிபாட்டுப் பொருட்களும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்து போயின. இக் காரணங்களால், கீரிமலைச் சிவன் கோயிலைப் பற்றிய முழுமையான உண்மை வரலாற்றை அறிய முடியவில்லை.

 எனினும், அந்த ஆதிகாலம் தொட்டு மக்களிடையே வழிவழியாகப் பரவிவந்த வரலாற்றுக் கதைகளிலிருந்தும், பிற கோயில்களின் வரலாற்று ஏடுகளில் இருந்தும், முந்திய ஆட்சியாளர்கள் எழுதிவைத்த பதிவேடுகளிளிருந்தும் இக் கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. இக் கோயிலின் அதிசய வரலாற்றைப்பற்றி, யாழ்ப்பாணம் மயில்வாகனப்புலவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார். முற்காலத்திலே, நகுல முனிஎன்னும் ஒரு முனிவர் இருந்தார். அவரது முகம் கீரியின் முகத்தைப்போன்று காட்சியளித்ததால், மக்கள் யாவரும் அவரைப் பழித்ததுடன், யாரும் அவருடன் பேசவும் அஞ்சினார்கள்.மக்களின் பழிப்புக்கு அஞ்சி, உலகையே வெறுத்த ஒரு துறவியாகி, ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவர் அப் பகுதியிலுள்ள மலைச் சாரலிலே சில காலம் தங்கியிருந்து, தீர்த்தமாடி வந்தபோது, இறைவன் அருளாலும், அந்தத் தீர்த்தத்தின் மகிமையாலும் அவரது கீரி முகம் நீங்கி, இயல்பான மனித முகம் அவருக்கு உண்டானது. அதனால், அந்தத் தலமும், அந்தக் கடற்கரைத் தீர்த்தமும் தெய்வீக அருள் பெற்றவை என்பதை உணர்ந்த அந்த முனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கித் தவம் புரியத் தீர்மானித்தார்.

 அவருக்கு, அந்தத் தலத்திலே கீரி முகம் மாறியதால், அந்தத் தலத்துக்குக் கீரிமலை என்று பெயர் உண்டாயிற்று. அந்த முனிவரின் தெய்வீகமான புகழ் ஊரெங்கும் பரவியது. அவரை வணங்கி, அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, திரளான பக்தர்கள் அங்கே வந்து, கீரிமலைத் தீர்த்த்தத்தில் நீராடி, அவரை வழிபட ஆரம்பித்தார்கள்.

 அதைக்கண்டு, அவ்வூர் அரசன் மக்கள் வழிபடுவதற்கு உகந்ததொரு அழகான சிவன் கோயிலை அங்கே கட்டுவித்தான். அந்தக் கோயிலின் ஈஸ்வரன் திருத்தம்பலேஸ்வரர் என்றும், அம்பாள் திருத்தம்பலேஸ்வரியம்பாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆயினும், கீரிமுகம் கொண்ட முனிவரின் பெயரால், அந்தத் தலத்தை மக்கள் நகுலேசர் கோயிலென்றும், அம்பாள் கோயிலை நகுலாம்பிகையம்மன் கோயிலென்றும் அழைத்தார்கள். (நகுலம் = கீரி).

நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்தின் மிகவும் புராதனமான தலங்களுள் ஒன்று என்பதை முன்னர் பார்த்தோம். அங்குள்ள சமுத்திர தீர்த்தமானது, அங்கு தீர்த்தமாடும் பக்தர்களுக்குப் பாவ விமோசனங்களையும், இராஜயோகம் முதலான இம்மைப் பலன்களையும் கொடுக்க வல்லது.

 கீரிமலைத் தலத்தின் மகிமையை மாருதப்புரவல்லி கதை மிகவும் சுவையாக விளக்குகின்றது. தென் இந்தியாவில், சோழ தேச அதிபதியாகிய திசையுக்கிர சோழன் என்பவனுக்கு, மாருதப்புர வல்லி என்னும் மகள் இருந்தாள். அவள் முகம் மனித முகமாக இல்லாமல், குதிரையின் முகத்தைப்போல இருந்தது.

மேலும், அவளுக்குக் குன்ம வியாதி பீடித்திருந்ததால், அவளது உடல் மெலிந்து, மிகப் பலவீனமாயிருந்தாள். சோழ தேசத்திலிருந்த பிரபல வைத்தியர்கள் எவராலும், அவளைக் குணப்படுத்த முடியவில்லை. அவள் வாலிப வயதடைந்து, மணப்பருவம் எய்தியும், யாருமே அவளைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.

 

மகளின் நோயையும், கவலையையும் கண்டு, தந்தை மிக்க கவலையுற்றான். அப்போது, சாந்தலிங்கன் என்னும் ஒரு சந்நியாசி அவளைச் சந்தித்து, “மகளே, நீ இனிமேல் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கோயில்களைத் தரிசித்து, அங்குள்ள புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடி வந்தால், இறைவன் அருளால் உன் நோயும், உன் தந்தையின் கவலையும் தீரும் ” என்று அறிவுரை கூறினார். அதன்படி, மாருதப்புரவல்லி தன் நெருங்கிய சில தோழிகளோடும், சில உண்மையான காவலர்களோடும் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்திலுள்ள கோயில்களை முறைப்படி தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியும் வந்தாள். அவ்வாறே, அவள் யாழ்ப்பாணம் வந்தடைந்து, கீரிமலை நகுலேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கே வந்து சேர்ந்தாள்.அங்கே தவம் செய்துகொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன் குறைகளையெல்லாம் கூறி அழுதாள். அவளைத் தேற்றி, ஆறுதல் கூறிய நகுல முனிவர், கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமைகளைக் கூறி, அவளை அங்கேயே தங்கித் தீர்த்தமாடி, இறைவனை வணங்கிவருமாறு கூறி ஆசீர்வதித்தார்.

 

நகுல முனிவரின் ஆசிர்வாதத்துடன், மாருதப்புரவல்லி அங்கேயே தன் தோழிகளோடும், காவலர்களோடும் கூடாரம் அமைத்துத் தங்கித் தினமும் கீரிமலைத் தீர்த்தத்தில் பயபக்தியுடன் நீராடி, நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் அன்புடன் வழிபட்டு வந்தாள். இறைவனின் அருளால், சில நாட்களிலேயே அவளது குதிரை முகம் மாறி, பேரெழில் மிக்க இளம் பெண்ணுக்குரிய முகம் அமைந்தது.அவளது உடல் நோய் நீங்கி, வலிமையும், வனப்பும் பெற்றது. இதைக் கண்டு, மாருதப்புரவல்லியும், அவளுடன் வந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அந்த நற்செய்தியை அவளின் தந்தைக்கும், ஏனையோர்க்கும் அறிவித்துவிட்டு, மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

 அச் சந்தர்ப்பத்தில், கதிரைமலையிலிருந்து, உக்கிரசிங்க மகாராஜன் தன் படை பரிவாரங்களுடன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க வந்தான். நகுலேசரின் சந்நிதியில், பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்த மாருதப்புரவல்லியைக் கண்டான். அவளது பேரழகையும், தெய்வ பக்தியையும் கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்து, நகுல முனிவரின் ஆசீர்வாதத்துடன் அங்கேயே அவளை வெகு சிறப்பாக மணம் செய்துகொண்டான். இருவரும் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்து, நகுலேஸ்வரரை வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தனர்.

 1983 ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் ஆக்ரமித்த சமயத்திலிருந்து பக்தர்களும் அர்ச்சகர்களும் சிறப்பு அனுமதியின்றி அனுமதிக்கப்படவில்லை.

அதியுயர் பாதுகாப்பு வளயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கேதாரகௌரி விரத்தின் போது கோயிலின் மேல், விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின. பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

 உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் ஆலயம் நித்திய பூசை வழிபாடுகள் இன்றி அழிவடைந்த நிலையில் காணப்பட்டது. ஆலய ஆதீனகர்த்தா நகுலேசுவரக் குருக்களினது அயராத முயற்சியின் பயனாக 2009ம் ஆண்டு முதல் ஆலயத்திற்குச் சென்றுவர அடியவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய அரசின் உதவியுடன் இக்கோவில் புனரமைக்கப்பட்ட்டது.

 பார்பதற்கே ஒரு கம்பீரத்துடன் காட்சியளிக்கும் கோயில் இதுவாகும்.


பயணம் தொடரும்






 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் ஏழு

 

நேற்றைய தொடர்ச்சி..........................

 

 

மேலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கிஷ்கிந்தா வாசிகள் அனைவரும் வானரங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தேவர்கள். இராவணன் தலைமயில் அனைத்து அரக்கர்களையும் ஒழிப்பதில் இராமனுக்கு உதவுவதற்காக பிறவி எடுத்துள்ள தேவர்கள். இதை பாலகாண்டத்தில் உள்ள  கீழ்கண்ட தோஹாக்கள் மூலம் துளசிதாசர் தெரிவிக்கிறார்.

 

= ==========================

. हरिहउँ सकल भूमि गरुआई। निर्भय होहु देव समुदाई॥

गगन ब्रह्मबानी सुनि काना। तुरत फिरे सुर हृदय जुड़ाना॥4

तब ब्रह्माँ धरनिहि समुझावा। अभय भई भरोस जियँ आवा॥5॥

निज लोकहि बिरंचि गे देवन्ह इहइ सिखाइ।

बानर तनु धरि धरि महि हरि पद सेवहु जाइ॥187॥

गए देव सब निज निज धामा। भूमि सहित मन कहुँ बिश्रामा॥

जो कछु आयसु ब्रह्माँ दीन्हा। हरषे देव बिलंब न कीन्हा॥1॥

बनचर देह धरी छिति माहीं। अतुलित बल प्रताप तिन्ह पाहीं॥

गिरि तरु नख आयुध सब बीरा। हरि मारग चितवहिं मतिधीरा॥2॥

* गिरि कानन जहँ तहँ भरि पूरी। रहे निज निज अनीक रचि रूरी॥

यह सब रुचिर चरित मैं भाषा। अब सो सुनहु जो बीचहिं राखा॥3॥

 ==============

 

இதையே ஆத்யாதம இராமாயணத்தில் இரண்டாவது சர்கத்தில் சொல்லப்பட்டுள்ளது

 

  ===============

ब्रह्म वाच

र्वष्णुमािनुषरूपेण भर्वष्यर्त रघ ः कु ले ॥ २९॥

यूयों सृजध्वों सवेऽर्प वानरेष्वोंशसम्भवान् ।

र्वष्ण ः स ायों कु रत यावर्त्स्न्थास्यर्त भूतले ॥ ३०॥

================

 

ஆக தேவர்களே வானர அவதாரம் எடுத்து வந்ததால் அவர்கள் மற்ற வானரங்களைவிட எல்லா வகையிலும் சிறந்து விளங்கினர்.

 

வானரர்கள் சாதாரண குரங்குகள் அல்ல; அவர்கள் தெய்வீக சக்திகள். இராவணனை அழிக்க, தர்மத்தை நிலைநாட்ட, வானர ரூபம் எடுத்து இராமனின் சேனையில் இணைந்தனர்.

 

வானரர் அல்ல, வானவரே! 

தெய்வ சக்திகள் தர்மம் காக்க 

ராமனின் சேனையில் சேர்ந்தனர், 

அரக்கன் இராவணன் வீழ்வதற்காக! 

 -------------

சிங்கம் போல சத்தம் எழுப்பி, 

சூரியன் போல ஒளி பரப்பி, 

அனைவரும் ஒன்றாய் கூடி, 

அருளின் வீரத்தை வெளிப்படுத்தினர்!

 

தொடரும்............

 

Wednesday, January 28, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

==================

ஆறாவது நாள்” பதிவு எண் ஒன்று

செல்வச்சந்நிதி முருகன் கோவில் – தொண்டைமானாறு

இலங்கைத் திருநாட்டின் வடகோடியில் உள்ள தொண்டமானாற்றங்கரையில் செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது.இலங்கையில் உள்ள அறுபடை வீடுகளில் இது இரண்டாவது வீடாகும். இது வடஇலங்கையின் கதிர்காமமாக போற்றப்படும் தலம், பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இவ் ஆலய அமைவிடமான வல்லியாற்றங்கரையில் உள்ள மரநிழலின் கீழ் வீரபாகுதேவர் வேல் ஒன்றினை வைத்து சந்திக்காலப் பூசை செய்தார் என்றும் அதனைத் தொடர்ந்து முனிவர்களும், சித்தர்களும், யோகிகளும் அவ்விடத்தில் தவம் செய்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அத்துடன் தேவலோகத்தில் வியாழபகவானின் சாபத்தால் யானையாகிக் கதிர்காமத்தில் சிகண்டி முனிவரால் சாபவிமோசனம் பெற்ற ஐராவதம் கதிர்காமக் கந்தனின் கட்டளைப்படி வல்லியாற்றங் கரையில் தவம் இருந்து சமாதியடைந்து இவ்விடத்தில் அமைக்கப்பட்ட இக் கோயிலே பலநூறு வருடங்களாகப் புகழ்பெற்ற வணக்கத்தலமாக இருந்து வந்திருக்கின்றது.

ஆயினும் 16ஆம் நூற்றாண்டளவில் போர்த்துக்கேயரால் இவ் ஆலயம் அழிக்கப்பட்டுவிட டச்சுக்காரரின் ஆட்சியின் பிற்பகுதியில் முருகப்பெருமானின் வேண்டுகோளிற்கு இணங்க மருதர் கதிர்காமர் என்ற முருகபக்தர் ஒருவரினால் அமைக்கப்பட்ட ஆலயமே இன்று “செல்வச்சந்நிதி” என்று எல்லோராலும் பக்திப்பரவசத்துடன் போற்றப்படுகின்றது. இம் முருகபக்தரான மருதர் கதிர்காமருக்கு தொண்டமானாற்றங்கரையில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து வீரபாகுதேவர் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து வணங்கிய இடத்தையும் சுட்டிக்காட்டி இவ்விடத்தில் ஆலயம் அமைத்து 65 ஆலம் இலைகளில் அமுது படைத்துத் தன்னை வழிபட்டு தன்னை வழிபடவரும் அடியவர்களுக்கு அவ் அமுதை வழங்குமாறும் பணித்தார். இதைக் கேட்டுப்பதைபதைத்து தனக்குப் பூசை முறைகளோ மந்திரங்களோ தெரியாது என வணங்கி நின்ற பொழுது கணப்பொழுதில் கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் மௌன பூசை முறைகளைக் காட்டினார். அத்துடன் அவர்வழிபட வேல் ஒன்றினையும் கொடுத்து மறைந்தருளினார். இவர் வழிவந்தவர்களே இன்றும் ஆலயத்தில் பூஜைகள் செய்து வருகிறார்கள்.

தேவ ரிஷி என்று புகழப்படும் சிகண்டி முனிவர், தமிழில் புலமை பெற விரும்பி முருகப் பெருமானை வேண்டி நின்றார். முருகனின் அறிவுரைப்படி, அகத்தியரிடம் தமிழைக் கற்றுணர்ந்தார். அதன்பின் கதிர்காமத்து முருகனை வழிபட விரும்பி, தன் சீடர்களுடன் இலங்கை சென்றார். ஆலயத்தை நெருங்கும் வேளையில், மதம் கொண்ட யானை ஒன்று, சிகண்டி முனிவரை வழிமறித்தது. சிகண்டி முனிவர் சற்றும் பயம் கொள்ளாது, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு இலையைப் பறித்து, முருகப்பெருமானை தியானித்து, யானையின் மீது வீசினார். அந்த வெற்றிலையானது, வேலாக மாறி யானையை இரண்டாகக் கிழித்தது. அதில் இருந்து தேவலாகத்தைச் சேர்ந்த ஒருவன் வெளிப்பட்டான். அவன் சிகண்டி முனிவரை வணங்கி, “அடியேன் பெயர் ஐராவசு. வியாழ பகவானின் சாபத்தினால் இந்த நிலையை அடைந்தேன். தாங்கள் வீசிய வெற்றிலையாலும், கதிர்காமத்தானின் அருளாலும் என் சாபம் நீங்கி, பழைய வடிவம் கிடைத்தது, நன்றி” என்று கூறி தேவலோகம் சென்றான்.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக வெற்றிலையை வைத்து ‘பத்திரசக்தி வழிபாடு’ இன்றளவும் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. வேலின் நடுவில் முக்கோண பொட்டுடன் வெற்றிலையை வைத்து வீதியுலா வருவார்கள்.

சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படும் இவ் ஆலயத்தில் மூலவராக வேல் உருவில் முருகன் வீற்றிருக்கின்றார். இதன் தலவிருட்சம் பூவரசு மரமாகும். . இம்முருகனுக்கு அன்னதானக் கந்தன் என்றும் பெயர் உண்டு. ஆற்றங்கரையான் என மனமுருக வழிபடும் சந்நிதியானுக்கு ஆவணிமாதப் பூரணையில் தீர்த்தம் நடைபெறும். அதற்கு முன்வரும் அமாவாசை அற்றுப்போகும் தினத்தில் வள்ளிக்கொடியை கோயில் கிணற்றடிக்கருகாமையில் நாட்டிக் கோயில் முகப்பில் சேவற் கொடியை பறக்கவிட்டு வருடாந்த மகோற்சவத்தினை ஆரம்பிப்பார்கள்.. ஆற்றங்கரையான்,இத்திமரத்தான், கல்லோடைக்கந்தன், சந்நிதியான் என்ற பெயர்களால் போற்றப்பட்ட இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்டமைந்த சிறப்புடையது. மகனை வணங்கிவிட்டு தந்தையை வணங்கச் சென்றோம்.

பயணம் தொடரும்



 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் ஆறு

 

நேற்றைய தொடர்ச்சி..........................

 வானரங்களின் தனித்துவம்:

 ஒவ்வொரு வானரனுக்கும் தனித்துவமான தோற்றம் இருந்தது. சிலர் மாபெரும் உருவம் கொண்டவர்களாகவும் (எ.கா.: வாலி, ஹனுமான்), சிலர் சாதாரண அளவிலும் இருந்தனர்.

 

சிறப்பான குணாதிசயங்கள் மற்றும் திறன்கள்:

 

இதுவே அவர்களை மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் முழுமையாக வேறுபடுத்துகிறது. அவர்கள் அதிமனித (superhuman) சக்திகள் கொண்டிருந்தனர்:

  

மாபெரும் பலம்:

 

வாலி ஒரு முழு இராட்சசனை ஒரே கையால் தூக்கி எறியும் அளவுக்கு பலம் வாய்ந்தவன். ஹனுமன் ஒரு மலையைத் தூக்கிச் செல்லும் சக்தி படைத்தவன்.

  

வடிவம் மாற்றும் திறன்

  

ஹனுமனால் தனது உருவத்தை மிகச் சிறியதாகவோ அல்லது மலை போல் பெரியதாகவோ மாற்றிக்கொள்ள முடிந்தது.

 

பறக்கும் திறன்:

 

அவர்கள் "வானரம்" என்ற பெயருக்கேற்ப, வானத்தில் பறந்து செல்லும் திறன் பெற்றிருந்தனர். இது நவீன குரங்குகளுக்கு இல்லாத ஒரு திறன்.

 

அறிவாற்றல் மற்றும் தந்திரோபாயம்:

 

ஜாம்பவான் போன்றவர்கள் முதுமைக் காலத்தின் ஞானத்தையும், போர் தந்திரங்களையும் அறிந்தவர்கள். ஹனுமன் ஒரு சிறந்த தூதர், பேச்சாளர் மற்றும் சூழ்ச்சித் திட்டமிடுபவன்.

 

ஆக, கிஷ்கிந்தா மக்கள் என்பவர்கள் குரங்கு மற்றும் கரடி இனங்களின் மிகுந்த வலிமை, துடிப்பான தன்மை, காட்டு வாழ்க்கை நடத்தை போன்ற சிறப்புக் குணங்களைக் கொண்டிருந்தனர் மனிதர்களைப் போல அரசியல், மொழி, கலை, அறிவு, நெறிமுறை ஆகியவற்றையும் கொண்ட ஒரு புராணப்பூர்வமான, அதிமனித இனம் ஆவர்.

  

அவர்களை "குரங்குகள்" என்று அழைப்பது, அவர்களின் உண்மையான தன்மையை மிகைப்படுத்திக் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் வெளித்தோற்றம் மற்றும் சில இயல்புகளின் அடிப்படையில் வைத்த ஒரு பெயராகும். இது ஒரு சிம்பல் (Symbol) அல்லது ஒரு புனைவு இனத்தை வரையறுக்கும் ஒரு வழி. இதனால்தான் ஹனுமன் போன்றவர்களை நாம் தெய்வீகமாக வணங்குகிறோம், ஒரு விலங்காக அல்ல.

 

தொடரும்............

Tuesday, January 27, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

ஐந்தாம் நாள் பதிவு எண் ஐந்து

யாழ்ப்பாணம் பொது நூலகம் Jaffna Public Library

=======================================

பொதுவாக எனக்கு நூலகங்கள் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம். அண்ணா நூல் நிலையம், கன்னிமாரா நூல் நிலையங்கள் எனது இல்லத்திலிருந்து தொலைவில் இருந்தாலும் நான் தவறாமல் சென்று புத்தங்கங்கள் எடுத்து வருகிறேன். இந்த முறை இலங்கை செல்லும்போது யாழ்ப்பாணம் நூல் நிலையம் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்ற ஆசை. நேரமின்மை காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை. ஆனால் வெளியில் இருந்து மிகவும் ரசித்தேன்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண நகரின் மையத்தில் உள்ள ஒரு பழமையான நூலகம். இது தமிழ் இலக்கியம், வரலாறு, கலாச்சாரத்தின் மிக முக்கியமான சாட்சியம் – ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்தது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் முதல் தேதி எரிக்கப்பட்டுச் சாம்பலானது.] இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.

இந்த நிறுவனத்துக்கான கரு யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கே. எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பி செல்லப்பா,( 24 பெப்ரவரி 1896 – 14 ஏப்ரல் 1958) என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. (சமீபத்தில் கார்நாடகாவைச் சேர்ந்த அங்கெ கௌடாவுக்கு கடுமையான உழைப்பின் மூலம் பெரிய நூல் நிலையம் உருவாக்கியதற்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கி தன்னைக் கௌரவப்ப் படுத்திக் கொண்டது,


பிறகு யாழ் நகர சபையிடம் 1935 ல் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் புதியதாகக் கட்டப்பட்டது.. கட்டிடத்தை வடிவமைத்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர். 97,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், அரிய தமிழ் கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள், வரலாற்று ஆவணங்கள் ஆகியவை இருந்தன.இது தமிழ் சமூகத்தின் அறிவு, கலாச்சாரம், கல்வி ஆகியவற்றின் மையமாக விளங்கியது. அந்தக் காலத்திலேயே இந்திய அரசு நூல் நிலையம் அமைய பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவியது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

1981-இல் நடந்த அரசியல் கலவரத்தில் சிங்களர்களால் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது எனக்கு இந்த நிகழ்வு நினைவில் உள்ளது. அப்போது இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.

ஆயிரக்கணக்கான அரிய தமிழ் கையெழுத்துப் பிரதிகள், நூல்கள், பழங்காலச் சுவடிகள் ஆவணங்கள் அழிந்தன.

இது உலகளாவிய அளவில் கலாச்சாரப் பேரழிவாக கருதப்பட்டது

200l ல் மீண்டும் நூலகம் புனரமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நூல் நிலையம், அழிவையும் மீட்பையும் சந்தித்த தமிழ் கலாச்சாரத்தின் உயிர்ப்புச் சின்னம். இதைப் புனரமைத்ததில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தக் கட்டிடத்தின் அருகே இலங்கையின் பண்பாட்டுக் கலாச்சார மையத்த்தின் கட்டிடத்தை நமது பிரதமர் சமீபத்தில் திறந்து வைத்தார். இது இந்திய அரசின் நன்கொடை.


யாழின் நூலகம், யுகம் தாங்கும் —

அறிவின் கோவில், கலாச்சாரச் சின்னம்;

எரிந்தாலும் எழுந்து நிற்கும் —

தமிழின் ஒளி, உலகின் பெருமை!



பயணம் தொடரும்




 


 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 


பதிவு எண் ஐந்து

 

நேற்றைய தொடர்ச்சி..........................

  

கிஷ்கிந்தா மக்கள்: ஒரு தனித்துவமான இனம்

  

கிஷ்கிந்தா மக்கள் மனிதர்களும் இல்லை; நமது உலகத்தில் உள்ள விலங்குகளும் அல்ல. அவர்கள் ஒரு "வானரம்" (வானத்தில் செல்பவர்) என்று வர்ணிக்கப்படும் புராண இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வார்த்தைக்கு "குரங்கு" என்பது நேரடியான மொழிபெயர்ப்புதான், ஆனால் அது முழுக் கருத்தையும் வெளிப்படுத்தாது.

 

வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்:

=====================================

 

அரசியல் அமைப்பு:

 =================

அவர்களுக்கு சுக்கிரீவன், வாலி போன்ற அரசர்கள் இருந்தனர். ஒரு நன்கு அமைக்கப்பட்ட இராஜ்யம் (கிஷ்கிந்தா), அரண்மனைகள், சேனை, மந்திரிகள் (ஹனுமன், மயிந்தன், ஜாம்பவான்) ஆகியவை இருந்தன.

  

மொழி மற்றும் அறிவு:

==================

  

அவர்கள் மனிதர்களுடன் பேசவும், உரையாடவும், திட்டமிடவும் முடிந்தது. சங்கீதம், நடனம் போன்ற கலைகளில் வல்லவர்கள். ஹனுமன் முதன் முதலில் இராம இலக்ஷ்மனர்களை சந்தித்தபோது சரளமாக சம்ஸ்க்ருதத்தில் உரையாடினான். ஹனுமனது மொழி வளத்தை  இராமன் இலக்ஷ்மணனிடம் புகழ்ந்து சொன்னதாக அனைத்து இராமாயணங்களும் தெரிவிக்கின்றன.

  

சமூக வாழ்க்கை:

==============

  

அவர்கள் கூட்டமாக வாழ்ந்தனர், சடங்குகள், விழாக்கள், மரபுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இது விலங்குகளின் இயல்பான கூட்டம் அல்ல, ஒரு நாகரிகம் கொண்ட சமூகம்.

  

வெளிப்புறத் தோற்றம் மற்றும் தனித்துவம்:

===================================

 கலப்புத் தோற்றம்:

==================

 அவர்களின் தோற்றம் மனித மற்றும் விலங்குக் கூறுகளைக் கலந்தது. சிலர் கிட்டத்தட்ட மனிதத் தோற்றத்தில் (எ.கா.: சுக்கிரீவன், வாலி), சிலர் குரங்கு அல்லது கரடியின் முகத்தோடு (எ.கா.: ஹனுமன், ஜாம்பவான்) இருந்தனர்.

  

தொடரும்.................