Wednesday, July 29, 2026




அரக்கர்களை அழிப்பதில் ராமனின் நிலைப்பாடு ஒரு அலசல் .

.

..பதிவு ஒன்று



 

ராமனின் வனவாசத்தின்போது,  முனிவர்கள் ராகவனிடம், ராட்சதர்கள் தங்களுக்கு மிகுந்த இடையூறு செய்து, கொன்று குவிப்பதாகவும் அவர்களிடமிருந்து தங்களை ரட்சிக்க வேண்டும் என்று வேண்டினர்.  ராமனும் அவர்களை பாதுகாத்து அரக்கர்களை அழிப்பதாக  வாக்களித்தான்.

 

ஆனால் சீதை ராமனின் இந்த பதிலை விரும்பவில்லை. ராமனிடம் “முனிவர்களை காக்க அரக்கர்களை கொல்லவேண்டியது அரசர்களின் கடமை. ஒருவர் எந்த இடத்தில் உள்ளாரோ, அந்த இடத்து  தர்மத்தை அனுசரிக்கவேண்டும். தாங்கள் இப்போது இருப்பது காடு. இங்கு அஸ்திரங்களுக்கும் க்ஷத்ரிய தர்மத்திற்கும் வேலை இல்லை. தவ வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்”  என்று  சீதை சொல்லுவதை முந்தைய பதிவில் பார்த்தோம். ராமன் சீதைக்கு என்ன பதிலுரைத்தான் என்பதை கடைசியில் பார்க்கலாம்.

 

ராமன் முனிவர்களிடம் அரக்கர்களை அழிப்பேன் என்று எந்த அடிப்படையில் அப்படி ஒரு உறுதிமொழி கொடுக்கிறார் என்று யோசித்தேன். அதுவும் வனத்தில். காரணம் ராமன் யாருக்கும் தீங்கு நினைக்காதவன். பிறகு அவனால் எப்படி இந்த வாக்குறுதி கொடுக்கமுடிந்தது. ஆனால் இப்படித்தான் செய்யவேண்டும் என்று அறிவுரை சொன்னவர் விஸ்வாமித்திரர் தான்.

 

இங்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ராமனிடம் கோரிக்கை வைத்தவர்கள் எல்லோருமே முனிவர்கள். முனிவர்கள் எல்லோருமே தவ வலிமை மிக்கவர்கள். அவர்கள் நினைத்தால் தங்களுக்கு இன்னல் விளைவிக்கும் அரக்கர்களைப் பார்வையாலேயே பொசுக்கிவிடமுடியும். பிறகு  அவர்கள் ஏன் ராமனிடம் அப்படி ஒரு கோரிக்கை வைக்கவேண்டும்?

 

ஆனால் அவர்கள் செய்வதுதான் சரி என்று எனக்கு தோன்றியது. காரணம் சீதை என்ன சொல்கிறாள்? ஒருவர் எந்த இடத்தில் உள்ளாரோ அந்த இடத்து தர்மத்தைத்தான் அனுசரிக்கவேண்டும் என்று. முனிவர்கள் தவம் செய்ய வனம் வந்தவர்கள். அவர்கள் அதைவிட்டு மற்ற கிரியைகளில் எப்படி ஈடுபடமுடியும். மேலும் ஒருவரை அழிப்பது என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் தவ வலிமை குறையும். அதனால் தான் அவர்கள் ராமனை நாடினர்.

 

உங்களை இப்போது பால காண்டத்திற்கு அழைத்துச் செல்கிறேன். தனது வேள்விக்குச் சுபாகு, மாரீசன் என்ற அரக்கர்கள் இன்னல் விளைவிப்பதாகவும் அவர்களை அழித்து வேள்வியைக் காக்க ராமனைத் தன்னுடன் அனுப்பும்படி விஸ்வாமித்திரர், மன்னன் தசரதனை வேண்டிக்கொள்ள, முதலில் தசரதன் மறுத்து, வேண்டுமானால் நானே படையுடன் அங்கு வந்து அரக்கர்களை அழிக்கிறேன் என்று கூறுகிறான்.

 

 

முனிவர்களுக்கு கேடு விளைவிக்கும் அரக்கர்களை அழிக்கவேண்டியது அரசரின்  கடமை என்று  சீதை சொன்னதை இங்கு நினைவு கூறுகிறேன். தசரதனும் அதையேதான்  சொல்லி ராமரை அனுப்ப மறுத்தார்.  பிறகு குல குரு வசிஷ்டரின் தலையீட்டால் ராம லக்ஷ்மணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்புகிறான்.

 

 

பிறகு என்ன நடந்தது?

 

நாளை பார்ப்போம். 

No comments: