Thursday, July 23, 2026

 


அன்று சொன்னது.......அர்த்தமுள்ளது

 

நாம் மிகுந்த பாக்கியசாலிகள். வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத பேறு நமக்குக் கிடைத்துள்ளது. நமது மனித சமுதாயத்தைப் பற்றி வேத காலங்களில்,, த்ரேதா, த்வாபர யுகங்களில் ரிஷிகள் முனிவர்கள் கவலைப்பட்டு, நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்காக வேதங்கள் புராணங்களை உருவாக்கினர் .. ஆனால் வெறும் வேதமும் புராணமுமாக  இருந்தால் இந்த சமுதாயம் எளிதில் புரிந்து கொள்ளுமா என்று கவலைப்பட்டனர். சொல்லவேண்டியதை ஒரு கதையாகச் சொன்னால் சொல்லவேண்டிய விஷயம் அவர்களை எளிதாகச் சென்றடையும என்பதற்காக இதிகாசங்களைப் படைத்தனர். அப்படி வால்மீகியும் வியாசரும் விட்டுச்சென்ற கொடைகள் தான் ராமாயணமும் மகாபாரதமும்.

  

வால்மீகியின் ராமாயணமும் வியாசரின் மகாபாரதமும் வடமொழியில் இருந்ததால், அவை  கடைக்கோடி மக்களையும் சென்றடையவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கம்பர், துளசிதாசர், வில்லிபுத்தூர் ஆழ்வார், சரளாதாஸ் போன்ற பல கவிஞர்கள் அவற்றை அந்தந்த பகுதி மொழியில் மொழிபெயர்த்து மக்களிடம் கொடுத்தனர். இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் இந்த இரண்டு இதிகாசங்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

 

இப்படி படைத்தவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். இந்த மனித சமுதாயம் மிகச்சிறந்த முறையில் வாழவேண்டும்.என்பதுதான், இதை மனதில் வைத்து அத்தனை படைப்பாளிகளும் மனித குலத்திற்கு வழங்கவேண்டிய அறிவுரைகளை தாங்கள் படைத்தக் கதாபாத்திரங்கள் மூலம் தெரிவித்துள்ளனர். இதைத்தான் முதலில் சொன்னேன் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது.

 

மொத்தத்தில் மனித குலம் எப்படி வாழவேண்டும் என்பதை ராமாயணமும் எப்படி வாழக்கூடாது என்பதை மகாபாரதமும் நமக்கு சொல்லித்தருகின்றன. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் இவற்றின் அடிப்படை இரண்டு விஷயங்களில்  அடங்கிவிடுகிறது.

 

விதித்தன செய்தல்

விலக்கியன ஒழித்தல்.

 

எதைச்செய்தால் மனித குலத்திற்கு நல்லது என்று நமது முன்னோர் விதித்துள்ளனரோ அவற்றை செய்யவேண்டும் எவற்றை செய்யக்கூடாது என்று விலக்கப் பட்டுள்ளதோ அவற்றை செய்யாமல் இருக்கவேண்டும்.

 

பொதுவாக அறிவுரை என்பது சொல்பவரின் மனநிலை, குண நலன், இருக்குமிடம், வகிக்கும் பதவி இவற்றைப் பொறுத்து வேறுபடும். இங்கு அதுபோல, ஒரே விஷயத்தை இரண்டு இதிகாசங்களிலுள்ள வேறு வேறு பாத்திரங்கள் சொல்லும்போது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை மட்டும் சொல்லப்போகிறேன்.

 

நாளை வாருங்கள்


No comments: