Friday, July 24, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 165

 

நேற்றைய தொடர்ச்சி.

 

 

வாலி இராமனிடம் தான் கேட்ட கேள்விகளுக்கு இராமனால் பதில் சொல்ல முடியாது என்றே நினைத்தான்.. क्षमम् चेत् भवता प्राप्तम् उत्तरम् साधु चिंत्यताम्  மறைந்திருந்து கொல்வது தங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் அதற்கானப் பதிலைச் சிந்தியுங்கள் என்கிறான் வாலி.  வாலிக்கு தனது பலத்தின் மீது அகங்காரம் இருந்தது  இப்பொழுது தனது புத்தியின் மீது அகங்காரம். चिंत्यताम् என்று சொன்னதன் மூலம் இராமனைப் பதில் சொல்லவிடாமல் செய்து விடலாம் என நினைக்கிறான். ஆனால் பின்னால் இராமன் இதற்கான பதிலை அளித்துவிட்டு வாலியின் அகங்காரத்தை அழித்துவிட்டான்.

 

मैं बैरी सुग्रीव पिआरा। अवगुन कवन नाथ मोहि मारा॥3

 

अवगुन कवन नाथ मोहि मारा  என்னைக் கொல்லும் அளவிற்கு அப்படி என்னிடம் என்ன மோசமான குணத்தைக் கண்டீர்கள்?” என்று வாலி வினவுகிறான். அப்படி சுக்ரீவன் உங்களுக்கு என்ன நல்லது செய்தான்? நான் செய்யவில்லை? நான் உங்களைச் சமநோக்கு உடையவர் என்று தானே சொல்லிவந்தேன். ஒரு வேளை நான் ஏமாறி விட்டேனோ? நான் நிரபராதி. நான் உங்கள் தேசத்திலோ நகரிலோ எதாவது தவறு செய்தேனா? உங்களுடன் எப்போதாவது போர் புரிந்தேனா?உங்களை எப்போதாவது மரியாதைக் குறைவாக நடத்தினேனா?

 

மொத்தத்தில் வாலி சொன்னது

 

1.. “தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக தாங்கள் அவதாரம் செய்தீர்கள் ஆனால் என்னை மறைந்து நின்று கொன்றீர்கள். இது அதர்மம்.

 

2, நீங்கள் சமநோக்கு உடையவர் என்று கருதிய நிலையில்  தாங்கள் என்னை விரோதியாகவும் சுக்ரீவனை நண்பனாகவும் பார்த்தீர்கள். இது அதர்மம்..

 

3. சகோதரர்களுக்குள் அன்பு, பாசம் விரோதம் இதெல்லாம் பரஸ்பரமான விஷயம். இதில் என்ன அநீதியைக் கண்டு ஆராய்ந்து பார்க்காமல் என்னைக் கொன்றீர்கள். இது அதர்மம்”

 

வால்மீகி இராமாயணத்தையும், கம்ப ராமாயணத்தையும் ராமசரிதமானசுடன் ஒப்பீடு செய்து பார்க்கும்கால், துளசி தாசரின் வாலி இராமனிடம் அதிகமான கேள்விகள் கேட்கவில்லை.  துளசிதாசரைவிட வால்மீகியும், கம்பனும் இராமனின் வாயிலாக வாலியின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளித்துள்ளனர்.

 

 தொடரும்

No comments: