Friday, July 3, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 146

  

சர்கம் 5

 

 

कह बाली सुनु भीरु प्रिय समदरसी रघुनाथ।

जौं कदाचि मोहि मारहिं तौ पुनि होउँ सनाथ॥7

  

மீண்டும் துளசிதசரிடம் வருவோம்/ தன்னைத் தடுத்து நிறுத்தும் தாரையிடம்   வாலி கூறினான் “என் ஆசை மனைவியே! கேள்! உன்னிடம் பெண்மைக்குரிய பயம் இருக்கிறது. எனக்கு எந்தப் பயமும் இல்லை. அந்த இரகுநாதன் சமநோக்கு உடையவர். அவர் ஒரு போதும் என்னை மாய்க்க மாட்டார். அப்படி மாய்த்தாலும் எனக்கு முக்திபேறு கிடைத்துவிடும். இராமன் சாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.  அவர் பூமியின் சுமையை குறைக்க இராமனாக அவதாரம் எடுத்துள்ளார். இது எனக்குத் தெரியும். அவர் பரமாத்மா. அவர் பேதம் பார்ப்பதில்லை. நீ கவலைப்படாமல் தைரியமாக இரு”இவ்வாறு கூறிவிட்டு வாலி போருக்குப் புறப்பட்டான்.

 

கம்ப ராமாயணத்திலும் தாரை, “தலைவனே! அந்தச்‌ சுக்கிரீவனுக்கு இனிய உயிர்போன்ற நண்பனாக அமைந்து, இராமன்‌ என்பவன்‌, அவனுடன்‌ சேர்ந்து கொண்டு, உன்‌ உயிரை மாய்ப்பதற்கு வந்திருக்கிறான்‌என்று. நம்மிடம்‌ நெருங்கிய அன்புடையவர்கள்‌ கூறினார்கள்‌என்றாள்‌ அதற்கு

இவ்வாறு பதில் கூறுகிறான் வாலி “

 

 

உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்

இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?

பிழைத்தனை; பாவி! உன் பெண்மையால்' என்றான்.

 ===== 

இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது

பெருமையோ? இங்கு இதில் பெறுவது என்கொலோ?

அருமையின் நின்று, உயிர் அளிக்கும் ஆறுடைத்

தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ?

 

  

'பிறப்பு அநாதியாய்‌ வருதலாற்‌ பலபிறப்புகளில்‌ தாம்‌ செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும்‌ உபாயத்தைக்‌ காணாமல்‌ வருந்திக்‌ கதறுகின்ற உலகத்தவர்கள்‌ உய்யுமாறு அவதரித்துத்‌ தரும மார்க்கங்களையெல்லாம்‌ தான்‌ காட்டும்‌ ஆண்டகையான அந்த இராமபிரான்‌ திறத்தில்‌, “அவன்‌ சுக்கிரீவனுக்குத்‌ துணையாய்‌ இடையே புகுந்து உன்னைக்‌ கொல்ல வந்திருக்கின்றான்‌' என்று சிறிதும்‌ தகுதியில்லாத வார்த்தையைச்‌ சொல்லிப்‌ பெருங்குற்றம்‌ புரிந்தாய்‌:

 

இவ்வுலக மக்களின்‌ இம்மைப்‌ பயனாகிய புகழையும்‌, மறுமைப்‌ பயனாகிய புண்ணியத்தையும்‌ தன்‌ மனத்தால்‌ உணர்ந்து அறிந்து செயல்படும்‌ இயல்புடைய இராமபிரானுக்கு, நீ கூறிய, சுக்கிரீவனோடூ உடன்‌ சேர்ந்து என்னை மாய்ப்பதற்கு வருகிறான்‌ என்பது, பெருமையளிக்கக்‌ கூடிய செயலாகுமோ?

 

ஒரு படி மேலே சென்று

 

ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி, ஈன்றவள்

மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு

ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்

போற்றலை; இன்னன புகறல்பாலையோ?'

 

ஈன்றவளான கோசலையின்‌ மாற்றாளான கைகேயி கட்டளையிட, அவளுடைய புதல்வனான பரதனுக்குச்‌ சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன்‌ அவ்வரசச்‌ செல்வத்தை நல்கிய பெரியோனைப்‌ போற்றிப்‌ பாராட்டாதது அல்லாமல்‌, மாறாக அவனை இத்தகைய வார்த்தைகளால்‌ பழிக்கவும்‌ செய்கிறாயே?” என்று வாலி, தாரையைக்‌ கண்டிக்கிறான்‌.

 

தொடரும்..............


No comments: