துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 153
நேற்றைய தொடர்ச்சி
யுத்தத்தில்
வாலியிடம் அடிபட்டு இராமனிடம் ஓடி வந்த சுக்ரீவன் “இராமா! சகோதரனாகிய எதிரியால் நான் கொல்லப்படவேண்டும் என்று
விரும்புகிறாயா? அதற்கு நீயே என்னைக் கொன்றுவிடு” இராமா நீ சரணாகத வத்சலன். எனக்கு
நம்பிக்கை கொடுத்து நீ என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்.” என்றான். உடனே இராமன் சுக்ரீவனிடம் “நீங்கள் இருவரும் ஒரேமாதிரியான
உருவம் கொண்டவர்கள். இந்த மயக்கத்தினால் அவனை நான் கொல்லவில்லை” என்று கூறிவிட்டு
சுக்ரீவன் உடலைத் தடவிக் கொடுத்தான்.
ஆத்யாத்ம
இராமாயணத்திலும் இதுவே சொல்லப்பட்டுள்ளது.
'आलिंग्य मा सम भेषीस्त्वं दृष्टवा वामेकरूपिणौ
॥ मित्रधातित्वमाशंक्य
मुक्तवान् सायकं न हि।
इदानीमेव ते चिह्न॑ं करिष्ये भ्रमशान्तये
॥'
சுக்ரீவனை அணைத்துக் கொண்டு இராமன் சொன்னான் “உங்கள் இவருடைய உருவ
ஒற்றுமையினால் நான் உன் மீது தவறுதலாக பாணம் எய்துவிடக்கூடாது என்று இருந்தேன்.
பயப்படாதே. இந்த முறை வித்தியாசப் படுத்துவதற்க்காக உனக்கு ஒரு குறியீட்டை அணிவித்து
அனுப்புகிறேன்”.
கம்பரும் இதே கருத்தைத்தான் சொல்கிறார்.
மலைந்தபோது இனைந்து, இரவி சேய், ஐயன்மாடு அணுகி,
உலைந்த சிந்தையோடு உணங்கினன், வணங்கிட, 'உள்ளம்
குலைந்திடேல்; உமை வேற்றுமை தெரிந்திலம்; கொடிப் பூ
மிலைந்து செல்க' என விடுத்தனன்; எதிர்த்தனன் மீட்டும்.
இராமன்
சுக்கிரீவனை நோக்கி, “உள்ளம் நிலைகுலைந்து வருந்தாதே! உங்கள் இருவருள்ளும் யார் வாலி, யார் சுக்கிரீவன் என்பது தெரியாது
போயிற்று. எனவே நான் அடையாளம் கண்டுகொள்ளும் படியாக இப்பொழுது ஒரு கொடிப்பூ -
அடையாள மாலையை அணிந்து செல்வாயாக!” என்று கூறி அனுப்பினான்;
இங்கு துளசி தாசர் ஒரு விஷயத்தை நமது கண் முன் காட்டுகிறார். அதாவது
சுக்ரீவனிடம் நீங்கள் இருவரும் ஒன்றுபோல இருந்ததால் குழப்பமடைந்தேன் என்று. அதாவது
உங்களது வெளிப்புற உருவத்தைப் பார்த்துக்
குழப்பமடைந்தேன். உனது உள்ளத்தை நான் அறிந்து கொள்ளவில்லை. ஒரு சமயம் வாலி உனக்கு
நன்மை செய்கிறான் என்று சொன்னாய். மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாய்.. உங்கள்
இருவரையும் விவேகமுள்ளவர்கள் என்று நினைத்தேன். ராஜ்ஜியத்துக்காக நீங்கள் சண்டை
போட மாட்டீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அவ்வாறில்லாமல் பகைவர்கள் போல
சண்டையிடத் தொடங்கிவிட்டீர்கள். இந்த நிலையில் உங்கள் உள்ளத்தை எவ்வாறு அறிந்து
கொள்ள முடியும் என்று இராமன் நினைத்தான்.
தொடரும்..............
No comments:
Post a Comment