Tuesday, July 28, 2026

 

அன்று சொன்னது ......அர்த்தமுள்ளது.....


பதிவு ஆறு

 

சீதா பிராட்டி ராமனிடம் “ஐயனே இவ்வுலகில் மூன்று துர்க்குணங்கள் உள்ளன. அவை பொய் உரைத்தல், பிறர் மனைவி மீது ஆசை வைத்தல், பகையின்றி இம்சை செய்தல். நீங்கள் உணமையைக் கடைப்பிடிப்பவர், ஒரே மனைவி என்ற கொள்கை உடையவர் அதனால் முதன் இரண்டு விஷயங்களையும் நெஞ்சாலும் நினைக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் பகை இல்லாது பிறரை இம்சிக்கும் காரியத்தை செய்யப்போகிறீர்கள் என்று தெரிய வருகிறது. முனிவர்களை காக்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  அரக்கர்கள் எல்லோரையும் கொன்றுவிடுவதாக பிரதிக்ஞை செய்துள்ளீர்கள்.”

 

“இதற்காகவே தாங்களும் தங்களது தம்பியும் வில்லும் அம்பும் தரித்து இந்தத் தண்டகாரண்யத்திற்கு வந்தது போல உள்ளது மகாவீரரே! நீர் இதற்காக இவ்விடம் வந்தது பற்றி எனக்கு சிறிதும் இஷ்டமில்லை.”

 

“நீங்கள் தண்டகாரண்யத்திலுள்ள அரக்கர்களைப் பகையின்றி வில்லால் கொல்லும் புத்தியை கொள்ளலாகாது. காரணமின்றி வீணாக விலங்குகளை அழிப்பதை நான் விரும்பமாட்டேன். நாளாவட்டத்தில் அதுவே பழக்கமாகிப்போகும். தர்மத்தை விட்டு விலங்குகளை கொன்று குவிப்பதிலே இன்பம் காணத்தோன்றும். முனிவர்களுக்கு தீங்கிழைக்கும் அரக்கர்களை கொல்லவேண்டும் என்ற எண்ணம் ராஜ்ஜியத்தை ஆளும் அரசர்களுக்கு மட்டும்  வரத் தகுந்தது.”

 

“ஆயுதமெங்கே? ஆரண்யமெங்கே? க்ஷத்ரிய தர்மமெங்கே? தவமெங்கே? இவையெல்லாம் ஒன்றுக்கொன்று பொருந்தாதிருப்பவை. நாம் இருக்கும் இடத்தில் உள்ள தர்மத்தின்படி நடக்கவேண்டும். தண்டகாரண்யத்திற்குத் தவமே சிறந்தது. ஆகையால் அதைச் செய்யவேண்டுமே அன்றி ஆயுதங்களைத் தரித்தல், க்ஷத்ரிய தர்மம் இந்த ஆரண்யத்திற்கு உகந்ததல்ல. தவத்தில் விருப்பமுடைய நீங்கள் தவ ஒழுக்கத்தை மேற்கொள்வதே நலம். மூன்று லோகத்தில் உள்ள அனைத்தும் தங்களுக்குத் தெரியும். ஒரு பெண்ணுக்குரிய சாபல்யத்தினாலும் உங்கள் மேல் உள்ள பிரியத்தினாலும் இவற்றை உங்களுக்கு எடுத்துச் சொன்னேனேதவிர, உங்களுக்கு உபதேசம் செய்யவல்லவன் யார்? தாங்கள் இளவல் லக்ஷ்மணனுடன்  ஆலோசித்து  எது சரியோ அதைச் செய்யுங்கள்” என்று கூறினாள்.

 

ஆக ஏறக்குறைய ஒரே விஷயத்தை குந்தி கையாள்வதிலும் சீதை பார்ப்பதிலும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். குந்தியின் பார்வை ஒரு அரசியின் பார்வை போன்றது சீதா பிராட்டியின் பார்வை ஒரு குடும்ப பெண்ணின் பார்வை  போன்றது. இந்த நிகழ்வு சீதா பிராட்டியின் மென்மையான குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

 

படித்தோருக்கு நன்றி

 


No comments: