Sunday, July 12, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 154

 

நேற்றைய தொடர்ச்சி

 

யுத்தத்தில் வாலியிடம் அடிபட்டு இராமனிடம் ஓடி வந்த சுக்ரீவன் “இராமா! சகோதரனாகிய எதிரியால் நான் கொல்லப்படவேண்டும் என்று விரும்புகிறாயா? அதற்கு நீயே என்னைக் கொன்றுவிடு” இராமா நீ சரணாகத வத்சலன். எனக்கு நம்பிக்கை கொடுத்து நீ என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்.” என்றான். உடனே இராமன்  சுக்ரீவனிடம் “நீங்கள் இருவரும் ஒரேமாதிரியான உருவம் கொண்டவர்கள். இந்த மயக்கத்தினால் அவனை நான் கொல்லவில்லை” என்று கூறிவிட்டு சுக்ரீவன் உடலைத் தடவிக் கொடுத்தான். சுக்ரீவனை அடையாளம் தெரிந்து கொள்ள சுக்ரீவனுக்கு கஜபுஷ்பி மாலையை இலக்குவனை விட்டு அணியவைக்கிறான் இராமன்.

  

 

இந்த மாலையை சுக்ரீவன் கழுத்தில் அணிவித்ததன் மூலம் வாலிக்கு ஒரு செய்தி சொல்கிறான் இராமன்.  அது என்ன செய்தி? ”நீ என்னை சமநோக்கு உடையவன் என்றாய். ஆனால் சுக்ரீவன் என்னைச் சரணடைந்து விட்டான். ஆதலால் நீ அவனுடன் உள்ள விரோதத்தை விட்டு விடு இல்லை என்றால் நான் உன்னைக் கொல்வேன்.”

  

जो अपराधु भगत कर करई। राम रोष पावक सो जरई 

 

எவன் ஒருவன் இராம பக்தனுக்குத் தவறு இழைக்கிறானோ, அவன் இராமனின் கோபத்தில் எரிந்து சாம்பலாகிவிடுவான்” என்று துளசிதாசர் சொல்கிறார். ஒரு சில உரையாசிரியர்கள் மாலை அணிவித்து சுக்ரீவனை வைஷ்ணவ சம்ஸ்காரத்தில் இராமன் இணைத்துவிட்டதாகச் சொல்கின்றனர், ஒரு சிலர் ஒரு பயணத்தின் முன் பூமாலை அணிவித்துக் பயணத்தைத் துவக்கினால் அது வெற்றிகரமாக அமையும் என்பதால் இராமன் அணிவித்தான் என்று சொல்கின்றனர்..ஆனால் வால்மீகி இராமாயணத்தில் அவனை அடையாளப்படுத்த அந்த மாலை  அணிவிக்கப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

लक्ष्मणेमां कुरु शुभां गजपुष्पीं महाबलाम् ।

ग्रीवायां गजसौण्डस्य सुग्रीवस्य विमुञ्च ह ॥

 

ஒருசில உரையாசிரியர்கள் இராமன் அந்த மாலையை அடையாளத்திற்கு மட்டுமல்ல வாலியிடமிருந்து சுக்ரீவனைப் பாதுகாக்க அணிவித்தான் என்று சொல்கின்றனர்.

 

தொடரும்..............

 


No comments: