Thursday, March 19, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு


பதிவு எண் 50


நேற்றைய தொடர்ச்சி...............


..ஹனுமனிடம் இராமன் சொல்வதாவது “இராமன், இலக்ஷ்மணன் என்பது எங்கள் பெயர். நாங்கள் இருவரும் சகோதரர்கள். எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். இங்கு வனத்தில் ஒரு அரக்கன் எனது மனைவி வைதேஹியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆஞ்சநேயரே! நாங்கள் அவளைத்தான் தேடிக் கொண்டு அலைகிறோம். நாங்கள் எங்களைப் பற்றிய வரலாற்றைக் கூறிவிட்டோம். அந்தணரே! உங்களைப் பற்றிய கதையைத் தெளிவாகச் சொல்வீராக.” என்றான்.


இதையே ஆத்யாத்ம இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?


अहं दाशरथी रामस्त्वयं मे लक्ष्मणोऽनुजः ।

सीतया भार्यया सार्धं पितुर्वचनगौरवात् ॥ १९


॥आगतस्तत्र विपिने स्थितोऽहं दण्डके द्विज ।

तत्र भार्या हृता सीता रक्षसा केनचिन्मम ।

तामन्वेष्टुमिहायातौ त्वं को वा कस्य वा वद ॥“


நான் தசரத புத்திரன் ராம். இவன் எனது தம்பி இலக்ஷ்மணன். தந்தையின் உத்திரவுப்படி நான் எனது மனைவி சீதையுடன் வனம் வந்தேன். தண்டகாரண்யத்தில் என் மனைவி சீதையை ஒரு இராட்சஸன் அபகரித்துச் சென்று விட்டான். அதனால் எனது மனைவி சீதையைத் தேடி இங்கு வந்தோம்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்கிறான்


இராமன்.இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். ஆத்யாத்மா இராமாயணத்தில் இராமன் தனது மனைவியின் பெயர் சீதை என்று குறிப்பிடுவதோடு சீதையை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான்; சீதையைத் தேடி நாங்கள் இங்கு வந்தோம் என்று மூன்று முறை குறிப்பிடுகிறான். ஆனால் துளசி இராமாயணத்தில் இராமன் ஹனுமனிடம் ஒரு அரக்கன் கடத்திச் சென்ற தனது மனைவியான வைதேஹியைத் தேடி அலைவதாகக் குறிப்பிடுகிறான். மனைவியின் பெயரை ஜானகி என்றோ சீதை என்றோ குறிப்பிடவில்லை.


விதேஹம் என்றால் தேகமற்ற உடல் என்று பொருள். அப்படியானால் வைதேஹி என்றால் தேகமற்றவள் என்று பொருள். இது எவ்வாறு சாத்தியமாகும்.? ராம சரித மானஸ் ஆரண்ய காண்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதை முன்னமே நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாள் இராமன், இலக்ஷ்மணன் வனத்தில் பழங்கள் பூக்களைச் சேமிக்கச் சென்றபோது சீதையிடம், ‘ஒரு காரணமாக நீ இந்த அக்னி குண்டத்தில் இறங்கி அக்னி பகவானிடம் அடைக்கலமாக இரு” என்று சொன்னதும் எந்த வித மறுப்பும் சொல்லாமலும், காரணம் கேட்காமலும் சீதை நெருப்பில் இறங்கி அக்னி பகவனை அடைந்தாள்.


நெருப்பில் இருந்து மாயா சீதை வெளி வந்தாள் மாயா சீதை என்றால் பார்பவர்கள் கண்களுக்கு சீதையின் உருவம் தெரியும். ஆனால் உண்மையில் உடலற்றவள். இது இலக்ஷ்மணனுக்கும் தெரியாது. அதைத்தான் அரக்கன் தூக்கிச் சென்றது மாயா சீதையைத் தான் உண்மை சீதையை அல்ல என்று உணர்த்தத்தான் தேகமற்ற சீதையை தூக்கிச் சென்றான் (வைதேஹி) என்று இராமன் சொன்னான் என்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடரும்

No comments: