துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 41
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமனுக்கு ஒரு சந்தேகம். இராமாவதார நோக்கத்திற்காக பிரம்மா, தேவர்களில் ஒரு பகுதியினரை குரங்குகளாகவும் கரடிகளாகவும் பிறப்பெடுத்து பூமியில் அந்த முழுமுதற் கடவுளுக்காகக் காத்திருங்கள் அன்று சொன்னாரே அந்த மழுமுதற்கடவுள் இவர்கள்தானா? என்று வியந்து நோக்கிக் கொண்டிருந்தார்.
இராமனிடம் கேள்வி
இராம இலக்ஷ்மணர்களை வணங்கிவிட்டு ஹனுமன் “சுவாமி! மகாவீரர்களான நரநாராயணர்களே! அழகில் அஸ்வினி குமாரர் போலிருப்பவர்களே! தாங்கள் யார்? கருமேகம் போல நிறமுடைய தாங்கள் யார்? அதில் பொலிந்திருக்கும் (லக்ஷ்மி தத்வமாகிற) மின்னல் போல நிறமுள்ள தாங்கள் யார்? ஆயுதங்களைத் தரித்த க்ஷத்ரிய வீரர்களைப் போலவும், ராஜகுமாரர்கள் போலவும், ஜடாதரர்களாவும் வனத்தில் சஞ்சாரம் செய்கின்றீர்களே! உங்களுடைய பாதங்கள் மெல்லிய மலராலான பூமியைச் ஸ்பர்சித்ததும் சிவந்து போய் விடுமே? அப்பேர்பட்ட மேன்மையுள்ள மலர்ப் பாதங்கள் கடினமான மலைப்ரதேசங்களில் ஸ்பரிசம் செய்வதைப் பொறுக்க மாட்டாதவையன்றோ? (தாங்கள் அரண்மனையின் சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவிக்கத்தகுந்த இராஜகுமாரர்களாக இருந்தும்) வனத்தில் எதையோ தேடிக்கொண்டு அலைந்து போகிறீர்களோ? தாங்கள் எதை என்ன காரணத்தினால் தேடி அலைகிறீர்கள்? உங்களுக்கு சம்மதமிருப்பின் சுவாமி தயவு செய்து எனக்கு விளக்க வேண்டும். என்றான்.
வால்மீகியும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார்.
==========
ममैवाभिमुखं स्थित्वा पृच्छ त्वं हरिपुङ्गव।
प्रयोजनं प्रवेशस्य वनस्यास्य धनुर्धरौ॥ २६॥
==========
அதாவது சுக்ரீவன் ஹனுமனிடம் வீரர்கள் இருவரும் எந்தக் காரணத்திற்க்காக இந்த வனத்தில் நுழைந்திருக்கின்றனர் என்று கேட்டுத் தெரிந்துகொள் என்று சொல்கிறான். அங்கு தான் ஒரு தூதன் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடந்து கொள்கிறான் ஹனுமன். சந்தித்த உடனேயே நேரடியாக இந்த விஷயத்தைக் கேட்காமல் அவர்களைப் புகழ்ந்து பேசிவிட்டு தங்களுடைய மென்மையான பாதங்கள் இந்தக் கடின மலைப் பிரதேசங்களில் நடப்பதற்கு ஏற்றவை அல்லவே. அதையும் மீறி நீங்கள் இங்கு நுழைந்துள்ளதால் தங்களுக்கு என்ன பயன்? என்று நளினமாகப் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறான் ஹனுமன்..
தேவர்க் கொருதலைவர் தேவர் முதற்றேவர்
மூவருக் கிவருவர் மூரிவில்லார் தேவரினும்
யாரொப்பா ரின்னவர்க்கி யாதரிது தேர்வரிது
சீரொப்பார் சிந்தை தெரிந்து
---------
(சுப்ரமணிய ஐயரின்
இராமாயண வெண்பா)
தொடரும்
No comments:
Post a Comment