Tuesday, June 30, 2026

  

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 143   

 

நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவனிடம் போருக்குச் செல்லும் வாலியிடம் தாரை சொல்கிறாள்..

 

 “நீங்கள் எனது கணவர். என்னையும் இந்த நாட்டு மக்களையும் பாதுகாப்பவர், நீங்கள் மாயாவி, துந்துபி இவர்களுடன் சண்டையிடச் சென்றபோது நான் உங்களைத் தடுக்கவில்லை. அப்போது உங்கள் பலத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. உங்கள் நலன் கருதி  நான் கூறுவதைச் சற்றுக் கேளுங்கள்” என்று தாரை கூறினாள்

 

 

सुनु पति जिन्हहि मिलेउ सुग्रीवा। ते द्वौ बंधु तेज बल सींवा॥14

कोसलेस सुत लछिमन रामा। कालहु जीति सकहिं संग्रामा॥15

 

இதையே கம்பர் சொல்கிறார்

 

“கொற்றவரே!உங்கள் தம்பி உங்களுடைய தோளாற்றலுக்கு அஞ்சியே போர் செய்யாமல் குழைந்து கொண்டே இத்தனை காலம் பேசாமலிருந்தார். ஆனால் அவர் இப்பொழுது போரிட வந்துள்ளார். அவர் புதிய வலிமையினையும் பெறவில்லை. வேறொரு பிறவியும் எடுத்தாரிலர். அப்படியிருந்தும் அவர் தங்களுடன் போரிட வந்துள்ளாரென்றால் ஏதோ பெருந்துணை கிடைத்திருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன்” என்றாள்  தாரை.

 

அன்னது கேட்டவள்,

      'அரச!' ''ஆயவற்கு

இன் உயிர் நட்பு

     அமைந்து இராமன் என்பவன்,

உன் உயிர் கோடலுக்கு

      உடன் வந்தான்'' எனத்

துன்னிய அன்பினர்

      சொல்லினார்' என்றாள்.

 

இது துளசிதாசர்  .....

 

கோசல மன்னரின் புதல்வர்கள் இராமனும் இலக்ஷ்மணனும் சுக்ரீவனுக்கு உதவி செய்ய வந்துள்ளனர். அங்கதனுக்கு இது தெரிய வந்துள்ளது. அவன்தான் என்னிடம் சொன்னான். அவர்களைக் காலனும் வெற்றி கொள்ள முடியாது. ஆகையால் போர் வேண்டாம். நீங்கள் எங்கள் இரட்சகர். பகையை மறந்து சுக்ரீவனை அழைத்துவந்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்குங்கள். நீங்கள் இராமனிடம் சரண் அடையுங்கள் अतस्त्वं सर्वथा वैरं त्यक्त्वा सुग्रीवमानय। यौवराज्येडभिषिज्चाशु राम॑ त्वं शरणं व्रज॥  என்று வேண்டினாள்” இங்கு துளசிதாசர் कालहु जीति என்று சொல்கிறார். அதாவது தாரை யமனைப் பெருமைபடுத்துகிறாள். அதாவது காலன் எல்லோரையும் வெற்றி கொள்கிறான். ஆனால் இராம இலக்ஷ்மணன் இருவரும் அந்தக் காலனையும் வெற்றி கொள்வர். அவர்களுக்கு முன்னால் நீங்கள் எம்மாத்திரம்? என்று சொல்லவருகிறாள்.

 

தொடரும்..............

No comments: