Thursday, June 11, 2026

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 123


நேற்றைய தொடர்ச்சி

 

சுக்ரீவன் எழுப்பிய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க இராமன் எந்தவித சிரமுமின்றித்  தனது கால் கட்டை விரலால் மலைபோல் கிடந்த  துந்துபியின்  எலும்பு உடலைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே பாணத்தால் ஏழு மராமரங்களையும் துளைத்தெடுத்தான். அந்த பாணம் மரங்களைத் துளைத்து எல்லா உலகங்களுக்கும் சென்று மீண்டும் இராமனின் அம்புறாத் துணிக்கு வந்து சேர்ந்தது. இங்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

 

 

வாலி ஒரு முறை வனத்திற்குச் சென்றபோது அங்கு சால மரத்தில் பழுத்திருந்த ஏழு பழங்களைப் பறித்துக்  குளத்தின் கரையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். குளித்து விட்டு வெளி வந்தபோது அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிடச் செய்தது. ஒரு கொடிய பாம்பு அந்த பழங்களின் மீது அமர்ந்து அவற்றைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வாலி கோபம் கொண்டு நீ மரங்களாகக் கடவாய் என்று சாபமிட்டான். .. பாம்பின் தந்தையான தக்ஷன் சீற்றம் கொண்டு எவன் ஒரே பாணத்தால் அந்த மரத்தைச்  சிதைக்கிறானோ அந்த பாணத்தாலாயே நீ மரிப்பாய் என்று வாலியைச்  சபித்தது.

 

மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.. அதாவது சால மரங்களுக்குப் பதில் ஏழு தென்னை மரங்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது வாலி சந்தோஷப்படும் சமயம் தென்னை மரங்களை உலுக்குவது வழக்கமாம். அப்போது அந்த மரத்து  காய்கள் கீழே இறந்து  கிடக்கும் துந்துபியின் உடல் மீது வேகமாக வந்து விழுமாம். அப்படி விழுவதால் துந்துபியின் ஆன்மாவுக்கு கோபம் வந்தது, இதைக் கண்ட வனதேவதை எவனொருவன் தனது ஒரே பாணத்தால் இந்த ஏழு மரங்களைத் துளைக்கிறானோ அவனது ஒரே பாணத்தால் வாலி கொல்லப்படுவான் என்று சபித்தது.

 

தொடரும் 

 


No comments: