துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 142
நேற்றைய
தொடர்ச்சி
சுக்ரீவனை வாலியுடன் போர் புரிய அனுப்பினான். இராமனின் வலிமையைத் துணையாகக் கொண்டு சுக்ரீவன் வாலியின்
இருப்பிடம் சென்று கர்ஜித்தான்.
துளசிதாசர் 'गहि कर चरन' என்று சொல்கிறார். அதாவது
வாலி சுக்ரீவனின் கர்ஜனை கேட்டு வெகுண்டெழுந்து வெளியே ஓடினான் என்று
சொல்கிறார். அப்போது தாரை வந்து அவனது கால்களைப் பிடித்தாள் என்று சொல்கிறார்.
பொதுவாக பெண்கள் கணவனின் கைகளைத் தான் பிடிப்பது வழக்கம். அப்படிப் பிடித்துதான்
தான் சொல்லவேண்டியதைச் சொல்வர். ஆனால் இங்கு வாலி கோபத்துடன் வெளியே விரைவதால்
கைகளைப் பிடித்து நிறுத்துவது என்பது சாத்தியமில்லை. மேலும் வாலி தாரையிடமிருந்து
எதுவும் கேட்கும் மன நிலையில் இல்லை. ஆதலால் அவனது வேகத்தைக் கட்டுப்படுத்த அவனது
கால்களில் விழுகிறாள். காலில் விழுவது என்பது கடைசி ஆயுதம். காலில் விழுந்து
சொல்லவேண்டியதைச் சொன்னால் கண்டிப்பாக பலன் இருக்கும் என்பது பெண்களுக்குத்
தெரியும்.
துளசிதாசர் “तब रघुपति सुग्रीव पठावा। என்று சொல்கிறார். அதாவது இராமன் சுக்ரீவனை வாலியிடம் அனுப்பினார்
என்று சொல்கிறார். இராமன் ஏன்
சுக்ரீவனுடன் செல்லவில்லை. இராமன் உடன் சென்றால் வாலி இன்னும் நிறைய வீரர்களுடன்
போருக்கு வருவான். இராமனுக்கு அது ஒரு கஷ்டமில்லை என்றாலும் யுத்தத்தை முன்னின்று
நடத்துபவன் சுக்ரீவன் என்ற இடம் கிடைக்காது. இராமன் சுக்ரீவனுக்கு அந்தப் பெயர்
கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறான்..
சுக்ரீவனின் கர்ஜனையைக் கேட்ட வாலிக்கு
கடுமையான கோபம் வந்தது. சுக்ரீவனின் குரலை அடையாளம் கண்டுகொண்டான். ரிஷ்யமுக
மலையில் ஒளிந்து இருந்தவன் இப்பொழுது இங்கு வந்துள்ளான். இந்த சந்தர்பத்தை நழுவ
விடக்கூடாது என்று எண்ணினான். கோபத்துடன் அரண்மனையை விட்டு வெளியே ஓடக்
கிளம்பினான். அப்போது அவனது மனைவி தாரை அவனது கால்களில் விழுந்து பேச
ஆரம்பித்தாள். வால்மீகி இராமாயணத்தில் வாலி இரண்டாவது முறை சுக்ரீவனுடன் மோதும்
போதுதான் தாரை அவனைத் தடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது, இங்கு முதலாவது மோதலின்போதே
தாரை தடுப்பதாக துளசிதாசர் எழுதியுள்ளார்.
தொடரும்..............
No comments:
Post a Comment