Monday, February 2, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் பதினொன்று

நேற்றைய தொடர்ச்சி


சிவஸ்துதி


அடுத்து சிவபெருமானைத் துதிக்கிறார் துளசிதாசர்.

मुक्ति जन्म महि जानि ग्यान खान अघ हानि कर।

जहँ बस संभु भवानि सो कासी सेइअ कस न ॥

எங்கு சிவபெருமானும், பார்வதியும் வசிக்கின்றனரோ, அந்தக் காசி என்ற க்ஷேத்ரம் முக்தியின் பிறப்பிடம். ஞானத்தின் சுரங்கம். பாபங்களை அழிப்பது. அதில் ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடாது?. இங்கு காசியின் மகத்துவத்தைச் சொல்கிறார்.

जरत सकल सुर बृंद बिषम गरल जेहिं पान किय।

तेहि न भजसि मन मंद को कृपाल संकर सरिस॥

“எந்த ஆலகால விஷம் கண்டு தேவர்கள் கூட்டம் பொசுங்கிக் கொண்டிருந்ததோ, அதை எவர் அருந்தி விட்டாரோ, ஏ அசட்டு மனமே! அந்தச் சங்கர பகவானை ஏன் பற்ற மாட்டேன் என்கிறாய்? அவர் போல் கிருபை செய்பவர் யார்?” என்கிறார் துளசிதாசர்.

பாற்கடலைக் கடைந்தபோது கொடிய ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தின் சக்தியை தேவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். அந்த விஷத்தைச் சிவனே அருந்தினார் என்பது வரலாறு. ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது ஸ்கந்தம் ஏழாவது அத்யாயத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சிவனே சொல்வது போல வருகின்றன .


आसां प्राणपरीप्सूनां विधेयमभयं हि मे ।

एतावान् हि प्रभोरर्थो यद्दीनपरिपालनम् ॥ ३८॥

तस्मादिदं गरं भुञ्जे प्रजानां स्वस्तिरस्तु मे

तद्विषं जग्धुमारेभे प्रभावज्ञान्वमोदत ॥ ४१

“இவர்கள் உயிர் பிழைக்க விரும்புகிறார்கள்; எனவே, அவர்களுக்கு அபயத்தை அளிப்பது என் கடமை. எனவே, இந்த விஷத்தை நான் குடிக்கிறேன். என் குடிமக்களுக்கு நன்மை உண்டாகட்டும்.அந்த விஷத்தைக் குடிக்க நான் முனைந்தேன்; என் சக்தியும் ஞானமும் அதில் மகிழ்ந்தன." ஈசனின் (பரமாத்மாவின்) உண்மையான நோக்கம் இதுவே — துன்பத்தில் உள்ளவர்களை பாதுகாப்பது.



பக்தர்களுக்காக விஷத்தையே அருந்த முன்வந்த அந்த சிவபெருமானின் மீது ஏன் பற்று வைப்பதில்லை? என்று தன்னையே நொந்து கொள்கிறார் துளசிதாசர்.

சிவ பெருமான் தேவர்களுக்காக நஞ்சுண்ட விஷயம் மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் திருவுச் சாத்தனம் என்ற திருப்பதிகத்தில் வருகிறது. மேலும் இதில் இராமாயணம் பற்றிய செய்தியும் இடம் பெறுகிறது..


நீரிடைத் துயின்றவன்

தம்பிநீள் சாம்புவான்

போருடைச் சுக்கிரீ

வன்னநு மான்றொழக்

காருடை நஞ்சுண்டு

காத்தருள் செய்தஎம்

சீருடைச் சேடர்வாழ்

திருவுசாத் தானமே.


பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும் இலக்ஷ்மணனும் ஜாம்பவான், சுக்ரீவன் ஹனுமான் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிறம் நஞ்சை உண்டி காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல் கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

தொடரும்

No comments: