Monday, February 2, 2026

 


இலங்கையில்

 ஏழு நாட்கள்

================

இன்று ஏழாவது நாள்

 

 அடுத்து நாம் பார்த்த இடம் திருவாசக அரண்மணை

 

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் பக்திச் சுவை நனி சொட்டும் வகையில் மாணிக்கவாசக சுவாமிகளால் இயற்றப்பட்டது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு.

 

இவ்வாறான பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்கள் திருவாசகத்திற்கு வழங்கிவரும் உயர் கெளரவத்திற்குத் தக்க சான்று என்றால் அது மிகையில்லை

  

யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலாக அமைந்திருக்கின்ற கிராமமான நாவற்குழியில் இந்த திருவாசக அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கிறது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.அறுநூற்று ஐம்பத்தெட்டுத் திருவாசகப் பாடல்கள் கருங்கற்களில் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இந்த அழகான அரண்மனை வடிவிலமைந்த கட்டடத் தொகுதியின் மத்தியில் தெட்சணாமூர்த்திக்கான ஆலயமொன்றும் இருக்கிறது. இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் கவின் மிளிரக் காட்சி தருகின்றன. ஈழத்தில் ஆன்மீக மற்றும் சமூகத் தொண்டுகளைச் செய்துவரும் 'சிவபூமி அறக்கட்டளை' அமைப்பு இந்த திருவாசக அரண்மனைப் பணியை அழகுறச் செய்து முடித்திருக்கிறது.

 

இலங்கையில் முதன் முதலாக தெட்சணாமூர்த்தியை மூல மூர்த்தியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆலயம் இதுவென்பது தனிச்சிறப்பானதாகும். இங்கே கருங்கல்லினால் உருவாக்கப்பட்டுள்ள நூற்று எட்டுச் சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் இரண்டரையடி உயரமான இந்தச் சிவலிங்கங்களுக்கு பக்தர்கள் நேரடியாகத் தாங்களே அபிஷேகம் செய்து பிரார்த்திக்க இயலும்.

 

இந்த அரண்மனையின் நுழைவாயிலுக்கு அருகாக கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இரதத்தில் சிவபிரானும் மாணிக்கவாசகரும் எழுந்தருளியிருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரான புருசோத்தமனும் அவரது குழுவினரும் திருவாசக அரண்மனை வளாகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள 21 அடி உயரத்திலான கருங்கற் தேர், சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் சிற்பங்களையும் நிறுவியுள்ளார். திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிபெயர்ப்புக்கள் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. திருவாசகம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களும் மாணவர்களும் சிறப்பு அனுமதி பெற்றுத் தங்கியிருப்பதற்கான இருப்பிட வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.  அந்த இடத்தைவிட்டு கிளம்பவே மனதில்லை. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

 

பயணம் தொடரும்











No comments: