துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 30
நேற்றைய தொடர்ச்சி
அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டார் ஹனுமான் . மயில்ராவணனும் மஹி ராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம- லட்சுமணரை அழைத்து வந்தனர். அப்போது, ‘‘மயில்ராவணா... உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வர வேண்டாம்!’’ என்று காளி போலவே குரல் கொடுத்தார் அனுமன்.
அதன்படி ராம- லட்சுமணருடன் மஹி ராவணன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்ச நேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார். பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம- லட்சுமணர்களிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி வேண்டினார்.
நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந்தேகம் கொண்ட மயில்ராவணன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ராம- லட்சுமணர்களை தன் தோள்களில் அமரச் செய்து மயில்ராவணன் மீது அம்புகளைத் தொடுக்கச் செய்தார் அனுமன். மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான். போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன், ராம- லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார். அவர்களிடம் போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுகளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன். விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார். அங்கு தன்னை எதிர்த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாமரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பினார்.
‘ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!’ என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன். அப்படி முடியாவிட்டால், கொல்ல முயல்பவரே மடிய நேரிடும்! அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்க ளோடு விசித்திர உருவெடுத்தார்.
இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான். அனுமன் அந்தப் பெட்டியைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்களின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன. மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான்.
பிறகு ராம- லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந்தார். வானர சேனைகள் மகிழ்ந்தன! பஞ்சமுக அனுமனை வழிபடுவதால், சிறப்பான பலன்கள் உண்டாகும். இவரின் ஒவ்வொரு திருமுகமும் திவ்ய பலன்களை அளிக்கவல்லது.
தொடரும்
No comments:
Post a Comment