துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 24
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமனின் பலம்
ஹனுமனுக்கு அபரிமிதமான மன மற்றும் உடல் சுறுசுறுப்பு, வலிமை, சக்தி மற்றும் அவரது குணம் மாசற்றதாகவும், அவரது அறிவுத்திறன் உயர்ந்த நுட்பம் கொண்டதாகவும் இருந்தது. அவர் வேதங்களைப் பற்றிய முழுமையான, இணையற்ற அறிவைக் கொண்டிருந்தார். காரணம், அவருக்கு எல்லா வேதங்களையும் கற்பித்த சூரிய பகவானே அவருக்கு ஆசிரியர். அவரது பேச்சு நேர்த்தியாகவும், அறிவார்ந்ததாகவும் இருந்தது. எட்டு சித்திகளின் (மாய சக்திகள்) மற்றும் ஒன்பது நிதிகளின் (ஆன்மீக சொத்துக்கள்) கருவூலமாகக் கருதப்பட்டார்.அவர் பிறந்ததிலிருந்தே துறவியாகவும் பிரம்மச்சாரியாகவும் இருந்தார்.
அன்னை சீதையின் அருளால் இந்த சித்திகள் ஹனுமனுக்கு கிடைத்ததாகவும், ஹனுமான் அந்த சித்திகளை தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இராம காரியத்திற்காகத்தன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும், அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது
============
அணுமாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
=============
இந்த எட்டு விதமான சித்திகளில் முதல் மூன்று உடலாலும், அடுத்த ஐந்து மனதாலும் பயிற்சி செய்து பெறக் கூடியதாகும். இந்த எட்டு சித்திகளும் எவர் ஒருவருக்கு கைகூடுகிறதோ அவர் தெய்வத்திற்கு இணையாக இருப்பார்கள் என திருமந்திரம் என்ற நூல் குறிப்பிடுகிறது.. பல புராணங்கள் அனுமனைக் கண்டு வியக்கின்றது. ஏனெனில், எல்லா சித்தர்களுக்கும் மகாசித்தராக விளங்கும் யோகேஸ்வரரான, அஷ்டமா சித்திகளை பெற்றவருமான, சூரியனையே குருவாகக் கொண்ட ஆஞ்சநேயரை பார்த்து வியக்கிறது.
இப்போது ஹனுமனுக்கு கிடைத்த சித்திகளைப் பற்றி தனித்தனியாக தெரிந்து கொள்வோமா?
தொடரும்
No comments:
Post a Comment