Sunday, February 1, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

===============

 

ஆறாம் நாள்

 

அருணகிரிநாத சிவசுப்பிரமணிய கோயில் – மஞ்சத்தடி, இணுவில்

 

இலங்கையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது

 

இணுவிலில் இருந்து கோண்டாவில் நோக்கிச் செல்லும் பாதையில் 100 மீற்றர் தூரத்தில் இணுவில் கிழக்கின் தெற்கெல்லையில் அமைந்திருப்பது தான் இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயமாகும். 1902 இல் பெரிய சந்நாசியாரால் இணுவில் கந்தனின் பெரிய மஞ்சத்திற்கான அடித்தளம் இவ்விடத்தில் வைத்து  இடப்பட்டதனால் மஞ்சத்தடி என்ற காரணப்பெயர் இவ்விடத்திற்குரித்தானது. ஒரு நாள் பெரிய சந்நாசியாரது கனவில் முருகன் தோன்றி “நான் அருணகிரிக்கு உபதேசித்தவன் என்னை நினைத்து இங்கே எனது வடிவேலை வைத்து வணங்கு” என்று கூறி மறைந்தருளினார். இதனால் மகிழ்வுற்ற சந்நாசியார் அன்றைய தினமே தனது அரசோலை வளவில் வடிவேலை வைத்து சிறு கொட்டிலும் அமைத்து தானே விளக்கேற்றி அபிஷேகம்  செய்து மலர்மாலை சாத்தி, பொங்கல் படைத்து பூசை செய்து வந்தார்.பெரிய சந்நாசியார் சமாதியடைந்து சமாதி வைத்த இடத்தில் பதினாறாம் நாள் பெரிய சந்நாசியாரால் வணங்கப்பட்ட வேலாயுதத்தை சகோதரர் வேலாயுதர் மற்றும் உறவினர்கள், அடியார்கள் உட்பட எல்லோரும் ஒன்றுகூடி பிரதிஸ்டை செய்து அபிஷேகம், பூசைகள் செய்து வழிபட்டனர். இவ்வாறு பெரிய சந்நாசியாரால் உருவாக்கப்பட்ட ஆலயம் ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைத் திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பன்னிரன்டு நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.

 

ஆகம விதிகளின் படி அமைந்த இக்கோவில் சிற்பங்கள் சிறப்புற அமைந்துள்ளன. கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. கருவறையில் ஆற்றல் மிக்க வேல் மூலவராக அருணகிரிநாதர் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வள்ளி, தெய்வானை ஆறுமுகசுவாமி உற்சவ மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 

  

இங்கு கோவிலின் வாசலில் ஒரு பெண் படுத்திருப்பது போல ஒரு சிலை இருக்கிறது. நாங்கள் கோவிலுக்குச் சென்று வழிபாட்டு திரும்பும் சமயம் கோவில் மூடப்பட்டபடியல் இது சம்பந்தமாக விவரங்கள் கேட்க முடியவில்லை. ஆனால் ஒரு சில தரவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது அது கண்ணகியின் சிலை என்று தெரிய வந்தது. அங்கு பல ஆண்டுகளாகக் கண்ணகி வழிபாடு நடந்து கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

 

பயணம் தொடரும்






No comments: