Tuesday, February 3, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

==================

 

ஏழாவது நாள்

சாவகச்சேரி சங்கத்தானை  வைரவசாமி கந்தசாமி கோவில்


தென்மராட்சிப் பிரதேசத்தின் முக்கிய நகரான சாவகச்சேரியின் மத்தியில் அமைந்துள்ள சங்கத்தானையில் எழுந்தருளியிருக்கும் கந்தப் பெருமானின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தாகவும் சிறப்புடையதாகவும் காணப்படுகின்றது.. இது இலங்கையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது ஆகும்.. சோலைகளும் நீர்வளமும் சோடையிலாக் கானவளமும், சீரிய கால் நடையோடுசிறந்த புல்வெளி அழகும் சில்லென்று வீசும் குளிர்ந்த காற்றும்! வாழ்வாங்கு மக்களை வாழவைக்கும் பெருமானே! வடிவேலா! செவ்வேலா! ‘இன்புறு  எந்தை இணையடி யேத்துவார் துன்புறு வாரல்லா தொண்டு செய்வாரே! என்ற சம்பந்தர் பாடல்களுக்கேற்ப சோதனைகள் பலவந்தாலும் இப் பிரதேச மக்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டு துன்பத்தை அனுபவித்தாலும் தமது கலியுக வரதனாகிய முருகப் பெருமானுக்குத் தொடர்ந்து தொண்டு செய்து இக் கோவிலைக் கட்டி பாதுகாத்து வணங்கி வருகின்றனர்.


இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாரி உடையார் சுப்பிரமணியம் மணியகாரராக இருந்து வந்த காலத்தில்தான் இக்கோவில் உருவானதாக தெரிகிறது. வாரியுடையார்க்கு கெருடாவிலில் இருந்து சங்கத்தானை வரை பல காணிகள் இருந்தன. இவற்றுடன் பிற இடங்களிலும் பல வயல்களை சேர்த்து காலி இடங்களில் விளைபொருட்களை உற்பத்தி செய்து வந்தார். ''யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்" என்ற அப்பர் பாடல் அடிகளுக்கேற்ப வைரவசுவாமிகளுக்கு பல பூசைகள் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இத்தகைய விழாக்காலங்களில் ‘கந்தையா நாகமுத்து” என்பவருக்கு அருள் வந்து ஆடுதல் வழக்கம். பக்தர்கள் தங்கள் குறைகளைக் கூறி நிறைவு பெற்று வந்தனர். இந்த சூழ்நிலையில் தான் தமது வயலில் “ஞானவைரவர்” வலது பக்கத்தில் முருகனை வைக்கும்படி கூறி அது அமைவதற்கான இடத்தினையும் சுட்டிக்காட்டினார். இவ்வாலயத்திற்காக பல அன்பர்கள் நிலபுலன்களையும், வயல்களையும் ஆலயத்திற்கு வழங்கியதாக வாய்மூலமான தகவல்களூடாக அறியமுடிகிறது.


80ற்கு பிற்பட்ட காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களாலும் போரினாலும் கோயில் வேலைகள் தடைப்பட்டிருந்தன. பல கஸ்டங்கள் அக் காலத்தில் தொடர்ந்தாலும் 1989ம் ஆண்டளவில் பணிகள் ஓரளவு முடிக்கப்பெற்று ஆறுமுகசாமியையும் பாலஸ்தாபனம் செய்து 1990இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது, 1990 வரை மூலஸ்தானத்தில் வேலாயுதமாக காட்சியளித்த முருகன் 1990ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தில் பேரம்பலம் அமிர்தலிங்கத்தின் உபயத்தின் மூலம் கம்பீரமான முருகன் வள்ளி தெய்வானை விக்கிரமமாக பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதே கும்பாபிஷேகத்தில் ஏனைய பரிவார மூர்த்திகளான வைரவர், சந்தானகோபாலர், எழுந்தருளி சண்டேஸ்வரர் ஆகியோரும், பேரம்பலம் அமிர்தலிங்கத்தின் உபயத்தின் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து முருக பக்தர்கள் ஒருமித்து கொடிக்கம்பத்தினை நாட்டுவதற்கு ஒன்றுபட்டு 1991ம் ஆண்டு ஆனி மாதத்தில் ஆறுமுகசுவாமியும் மணவாளக் கோலத்தில் வைக்கப்பட்டார்.


அமைப்பில் நல்லூர் கந்தசாமி கோவிலைப் போன்ற தோற்றத்துடன் காணப்படும் இக்கோவில் அழகாகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் ஒரு கோவிலாகும்.

இந்தக் கோவில் தரிசனம் முடித்து மானாவாரி சிவன் கோவிலைத் தரிசிக்க கிளம்பினோம்.

 


பயணம் தொடரும்
















No comments: