துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 66
நேற்றைய தொடர்ச்சி..
ஹனுமன் இவ்வளவு பேசியும் இராமனிடமிருந்து எந்த பதிலும் வராதது கண்டு மீண்டும்
ஸ்ரீ இராமனின் திருவடிகளில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டார். ஹனுமனுக்குச்
சந்தேகம் வந்து விட்டது , நாம் சுக்ரீவனுக்காக அந்தணர் வேடம் பூண்டு வந்துள்ளோம்..
ஒரு வேளை இராமன் இதைத் தவறாக நினைத்துவிட்டால் சுக்ரீவனுக்கான வேலையும் நடக்காது.
ஆக தாமும் சுக்ரீவனும் அநாதைகளாகி விடுவோம் என்று நினைத்தவன் பிரபுவிடம் ஒளிவு
மறைவா? அதனால் அவருடைய பிரம்மச்சாரி வேடம் அகன்று விட்டடது. தனது சுய ரூபம்
பெற்றுப் பெருமாளின் திருவடிகளில்
விழுந்து கிடந்தார்.
तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि
जुड़ावा॥
* सुनु कपि जियँ मानसि जनि ऊना। तैं मम प्रिय लछिमन ते दूना॥
இராமன் மனம் நெகிழ்ந்து போனான். அவன் கண்களில் நீர் மல்கியது. ஹனுமனைத் தூக்கி
மார்புறத் தழுவித் தனது கண்ணீரால் அவரைக்
குளிரச் செய்து “புத்திர! கவலைப் பாடாதே! என் வார்த்தையைக் கேள். உன் மனத்தில்
கலக்கம் ஏற்படுத்திக் கொள்ளாதே. நீ இலக்ஷ்மணனுக்குச் சமமாக இந்த அவதாரத்தில்
மகாபிரியன்”. இங்கு तब என்பதற்கு எப்பொழுது மனம் வாக்கு காயம் இவை ஒன்று பட்டு தன்னைச் சரணடைந்தாரோ
என்ற பொருள்.
ஹனுமன் இராமனை முதலில் பார்த்ததும் அவரது பாதங்களில்
விழுந்தான். அப்பொழுது இராமன் அவனை ஆரத் தழுவவில்லை. ஹனுமன் அந்தண வேடத்தில் இருந்த போது இராமன் அவனுக்குப் பதில்
சொல்லவில்லை. அவன் அந்தண வேடத்தைக் களைந்து மீண்டும் வானர வடிவத்திற்கு மாறிய
பிறகு அவனைக் கண்ணீருடன் தழுவிக் கொண்டார் . இது எல்லோருக்கும் ஒரு பாடம்.
அறிவுரை. அந்தப் பரமனின் அருள் வேண்டும் என்றால் கபட வேடம் போடாமல் உள்ளன்புடன்
அவனைத் துதிக்கவேண்டும் என்று சொல்கிறார் துளசிதாசர்.
பிஹாரி சத்சாயி என்ற நூலில் கவிஞர் பீகாரிலால் இந்தக கருத்தைத்தான்
சொல்கிறார்.
तौ लगु या मन-सदन मैं, हरि आर्दै किहिं बाट ।
विकट जटे जौ लगु निपट, खुटै न कपट-कपाट ॥
எவனொருவன் கபடங்கள் என்னும் கதவால் தனது
இதயக் கதவை மூடி வைக்கிறானோ, அவனது இதயத்திற்குள் இறைவன் பிரவேசிப்பதில்லை என்று
சொல்கிறார்.
ஒரு தாய்க்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும் இரண்டுமே அவளது குழந்தைகளாக இருந்தாலும்
முதற்குழந்தையை விட இரண்டாவது குழந்தையின் மீது அன்பு அதிகமாக இருக்கும். அதுபோல ஹனுமனின்
முதல் சரணாகதியை விட இராமனுக்கு இரண்டாவது சரணாகதி ஏற்புடையதாக இருந்தது.,
மேலும் இலக்ஷ்மணனைவிட நீ அதிகப் பிரியமானவன் என்று ஹனுமனுக்கு ஒரு உயர்ந்த இடத்தை
அளிக்கிறான்..
தொடரும்
No comments:
Post a Comment