Tuesday, April 21, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 84

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமன் சுக்ரீவன் உங்களின் அடியார்களில் ஒருவன் என்று சொல்லியுள்ளான். அதை நிரூபிக்கும் விதமாக  சுக்ரீவன் தலையை மட்டும் குனிந்து இராமனுக்கு வணக்கம் செலுத்தவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் என்று சொல்லுகிறார்.

  

कपि कर मन बिचार एहि रीती। करिहहिं बिधि मो सन ए प्रीती॥4॥

 

ஆனால் சுக்ரீவனின் மனதில் ஒரு சந்தேகம் தோன்றியது “வானரமாகிய தன்னுடன் இராமன் நட்புக் கொள்வானோ மாட்டானோ என எண்ணினான்”. இராமனுக்கு அவன் மனதில் உள்ள சந்தேகம் புரிந்தது.. துளசிதாசர் இங்கு येहि रीती என்று சொல்கிறார். அதாவது மேற்கண்ட முறைப்படி.  அதாவது இராமன் சுக்ரீவன் இருப்பிடம் வந்தவுடன் தனது தம்பியையையும் சேர்த்து சுக்ரீவனைத் தழுவிக் கொண்டான். சுக்ரீவன் நினைத்தான் நான் அவரது கால்களில் விழுந்து வணங்கினேன். ஆனால் அவரோ என்னை ஆரத் தழுவிக் கொண்டார். ஆக இராமன் தன்னை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டான் என்று தெரிந்துவிட்டது.

 

ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டான். ஆனால் அதற்கு முன்பே சுக்ரீவனைப் பற்றிய முழு விவரங்களும் இராமனுக்குச் சொல்லப்பட்டுவிட்டன. யார் சொல்லி இருக்கக்கூடும். வேறு யார்? அன்னை சபரிதான்.

 

पंपा सरहि जाहु रघुराई। तहँ होइहि सुग्रीव मिताई॥

सो सब कहिहि देव रघुबीरा। जानतहूँ पूछहु मतिधीरा॥6॥

 

“இராமா! நீ பம்பா தீரத்திற்குச் செல். அங்கு சுக்ரீவனுடன் உனக்கு நட்பு உண்டாகும். அவன் எல்லா விவரங்களையும் உனக்குச் சொல்லுவான். உனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடம் ஏன் கேட்கிறாய்” என்று சபரி சொல்கிறாள். சபரி சொன்னதை ஹனுமன் இராமனுக்கு நினைவூட்டுகிறான்.

 


தொடரும்

No comments: