துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 82
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமன் இராமனிடம் அனைத்து விவரங்களையும்
தெரிவித்து விட்டான் என்பதை துளசிதாசர் 'एहि बिधि सकल कथा समुझाई- என்று சொல்லுகிறார். அதாவது ஹனுமனின்
நோக்கம் இராமனுக்கும் சுக்ரீவனுக்கும்
இடையே நட்புறவை ஏற்படுத்தவேண்டும். அந்த முயற்சியில் ஏதாவது விவரங்கள் விடுபட்டு,
மறைக்கப்பட்டு பிற்காலத்தில் அவர்களது உறவில் ஏதாவது விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது
என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து விவரங்களையும் ஹனுமன் தெரிவித்துவிட்டான்
என்று சொல்கிறார் துளசி தாசர்.
இதுவரை வனங்களில் இராமனும் இலக்ஷ்மணனும் நடக்கத் தகுதியல்லாத கரடு
முரடான பாதைகளில் நடந்தே வந்துள்ளனர். இதை மனதில் கொண்டே இருவரையும் தனது முதுகில்
சுமந்து சென்றான் पीठि चढ़ाई ஹனுமன் என்று சொல்லுகிறார் துளசிதாசர்.
சிலர் ஹனுமன் இருவரையும் தோளில் சுமந்து
சென்றார் என்கின்றனர். ஆனால் துளசிதாசர் இருவரையும் முதுகில் சுமந்து சென்றான் என்றே
சொல்லுகிறார். காரணம் ஹனுமன் வானரம் வானரங்கள் இரு கைகளையும் கால்களாகப்
பயன்படுத்தக் கூடியவை.. காரணம் மலைகளில் ஏறுவதற்கு அவை வசதியானவை. வால்மீகி இராமாயணத்திலும் இதை வால்மீகி உறுதி
செய்கிறார்.
भिक्षुरूपं परित्यज्य वानरं रूपमास्थित:।
पृष्ठमारोप्य तौ वीरौ जगाम कपिकुञ्जर:॥ ३४॥
அதாவது ஹனுமன் தனது துறவி வேடத்தைத் துறந்து வானர வேடத்தில் இரு
வீரர்களையும் தனது முதுகில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
हनूमान सम नहिं बड़भागी। नहिं कोउ राम चरन
अनुरागी॥4॥
गिरिजा जासु प्रीति सेवकाई। बार बार प्रभु निज
मुख गाई॥5॥
ஹனுமனைப் போல நல்ல அதிர்ஷ்டசாலி யாரும்
இல்லை. அவனைப் போன்ற சிறந்த இராம பக்தனும் இல்லை. அவனது அன்பையையும் சேவையையும்
இராமன் பல முறை புகழ்ந்துள்ளார்.
பாக்கியம் பெரிது! ஹனுமான் வாழ்வு—
பரமன் பாதம் பற்று கொண்டான்!
அன்பின் ஆழம் அளவில்லையாம்—
அருளின் சின்னம் அவனே ஆனான்!
சேவையின் சுடர் சுடர்ந்திடுமே—
சிவகாமி மனம் புகழ்ந்திடுமே!
ராமன் வாயால் பலமுறை சொன்னான்—
"பக்தன் உன்னால் உலகம் தழுவும்!"
தொடரும்
No comments:
Post a Comment