பழங்கணக்கு#
கணக்கு பழையது:
பதிவு புதியது
கண்டுமுட்டு
கேட்டுமுட்டு.
பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி
செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும் ஒருவனாவான். இவனது இயற்பெயர்
நெடுஞ்செழியன் . அவனுடைய முதுகு கூன்
விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப்
பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான். இவனுடைய காலம் கி.பி. 640 முதல் 670 வரை, சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரை
முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான்.
வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் மங்கையர்க்கரசியினை மனைவியாகப் பெற்றான்.
சோழ மன்னன் ஏராளமான சீர்வரிசைகளோடு குலச்சிறை என்ற பெயருடைய சகல
சாஸ்திரங்களையும் பழுதறக் கற்றுணர்ந்த அறிஞரையும் அமைச்சராக விளங்கும்படி அனுப்பி
வைத்தான்.
பல சமயத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுபவர்களும் மதுரை நகரில் நிரம்பினர். அவர்களுள்,
அருகனைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமண
சமயத்தினர் மிகுதியாக மதுரையில் குடியேறினர். சிறிது சிறிதாகச் சமணர்கள் அரசனிடம்
செல்வாக்குத் தேடிக் கொண்டனர். கூன் பாண்டியன் எம்மதமும் சம்மதம் என்ற
கொள்கையுடையவன். அதனால், சமணர்களையும் பிற சமயத்தவர்களையும்
ஆதரித்தான். ஆனால், அவ்வாறு ஆதரித்தது அவனுக்கே தீங்காக
முடிந்தது. சமண சமயத்தைப் பற்றிய செய்திகளைச் சமண முனிவர்கள் வாயிலாகக்
கேட்டுணர்ந்தான். சமணர்களும் அதுதான் சமயமென்று, சைவ சமயத்தைவிடச் சமண சமயம் மேலானது என்று அரசன் நம்புமாறு செய்தனர்.
உண்மை யுணராத அரசன், மனம் மாறத் தொடங்கினான். வாழையடி
வாழையாகச் சைவ சமயத்திலே வளர்ந்து வந்த பாண்டியர் குலத்திலே பிறந்த கூன் பாண்டியன்,
சமணரது வலையில் வீழ்ந்து விட்டான்; சைவ சமயத்தை விட்டு சமணனாக மாறினான்.
தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும் அமண்
வலையில் அகப்பட்டு
கூன் பாண்டியன் தனது உடலைப் போலவே
உள்ளமும் இருள் மண்டிக் கிடந்தான் என்று பாடுகிறார் சேக்கிழார், மக்கள் சமண
மதத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற உத்தரவையும் அவன் பிறப்பித்தான்.
நாளாக நாளாக அந்தச் சமண மதத்தினர் தங்கள்
மதத்தை பரப்பத் தொடங்கியதோடல்லாமல் சைவ
சமயத்தை கேலி செய்யத் தொடங்கினர். திருநீர் அணிந்த சிவனடியார்களைக் கண்டால்
கண்டுமுட்டு என்று சொல்லி நீராடுவர். அதாவது அவர்களைக் கண்டால் தீட்டாகிவிட்டதாகக்
கருதினர். சிவனடியாரைக் கண்டேன் என்று அடுத்தவரிடம் சொன்னாலே போதும் கேட்டவருக்கு
அது தீட்டாம். அதாவது கேட்டுமுட்டு. உடனே கேட்டவரும் நீராடுவர். உடல் முழுவதும்
திருநீறு அணிந்து உருத்திராட்ச மாலை அணிந்து வருவரைக் கண்டால் அவர்களைக் காட்டி “பூச்சாண்டி (விபூதி பூசும்
ஆண்டி பூச்சு + ஆண்டி) “பூச்சுக்காரன்” வருகிறான் என்று தங்கள் குழந்தைகளைப்
பயமுறுத்துவர்.
மன்னன் கூன் பாண்டியன் சமணர்களின்
தூண்டுதலால் சைவ மதத்தை விட்டு சமண மதத்திற்கு மாறினான். மக்கள் சமண மதத்தைப்
பின்பற்ற வேண்டுமென்ற உத்தரவையும் அவன் பிறப்பித்தான். யாரும் திருநீறு அணியக்கூடாது என்று கட்டளை
இட்டான்.இது மங்கையர்க்கரசியாருக்கும், குலச்சிறையாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால்,
மன்னனிடம் பேசும் துணிச்சல் அவர்களுக்கேது! அவர்களே
திருநீறு அணிந்து மன்னனுக்கு முன் வர பயந்தனர். கோயிலுக்கு வரவே மக்கள் பயந்தனர்.
கோயில் காலியாகக் கிடந்தது. இந்த அவலநிலை பற்றி, சுந்தரேஸ்வரப் பெருமானிடமே சென்று பிரார்த்திக்க இராணி
முடிவெடுத்தாள்.
குலச்சிறையாரையும் அழைத்துக் கொண்டு
கோயிலுக்குச் சென்று, இருவருமாய் பிரார்த்தித்தனர். அப்போது
அந்தணர் ஒருவர் சன்னதிக்கு வந்தார். கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாருமே
இல்லாத நிலையில், இவர் மட்டும் மன்னன் கட்டளையை மீறி
எப்படி துணிச்சலாக உள்ளே வந்தார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்தவர் அரசியை
வணங்கி, அரசியாரே! நான் சோழநாட்டில்
வசிக்கிறேன். பல திருத்தலங்களுக்கும் சென்று வருகிறேன். மதுரையில் எம்பெருமானையும்
தரிசிக்க எண்ணியே இங்கு வந்தேன். இங்கே யாருமே இல்லாததைக் கண்டு விசாரித்தேன்.
சமணத்தை மக்கள் பின்பற்றுவதால் யாருமே வருவதில்லை என அறிந்து வருத்தமடைந்தேன்.
இருப்பினும், மீண்டும் சைவத்தைக் கொண்டு வர ஒரு
மார்க்கம் உள்ளது. சொல்லட்டுமா, என்றார்.கரும்பு
தின்னக் கூலியா? சொல்லுங்கள் அந்தணரே! என்றாள் அரசி.
சீர்காழியில் ஞானசம்பந்தன் என்னும்
தெய்வமகன் இருக்கிறார். மூன்று வயதில் உமையம்மையிடமே பால் குடித்த குழந்தை அவர்.
அவரை இங்கு வரவழைத்தால் சைவம் தழைக்க வகை செய்வார், என்றார். உடனே ஓலை எழுதிய ராணி, அந்தணரே! தாங்கள் இதை ஞானசம்பந்தரிடம் எப்படியாவது சேர்த்து
விடுங்கள். அவரை மதுரைக்கு வரச்சொல்லுங்கள், என்றாள். திருமறைக்காடு என்னும் வேத
ஆரண்யத்தில் (வேதாரண்யம்) அவர் இருப்பதைக் கேள்விப்பட்ட அந்தணர் அங்கு சென்றார்.
அங்கே திருநாவுக்கரசரும் தங்கியிருந்தார். இருபெரும் சைவப்பழங்களைக் கண்ட அந்தணர்
ஓலையைச் சம்பந்தரிடம் ஒப்படைத்து மதுரையின் நிலையை விளக்கினார். அதைப் படித்ததுமே
அங்கு செல்ல முடிவெடுத்து விட்டார் சம்பந்தர்.
மதுரையில் அவரை அன்புடன் அரசியாரும்
குலச்சிறையாரும் வரவேற்றனர். சம்பந்தர் மதுரை எல்லையை அடைந்ததுமே எண்ணாயிரம் சமய
குருமார்களுக்கும் அவர்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான சமணர்களுக்கும் பற்பல
துர்ச்சகுனங்கள் தோன்றின. சம்பந்தர் சோமசுந்தரக் கடவுளின் ஆலயத்திற்குச் சென்று
சூதுவாது நிரம்பிய சமணர்களை எதிர்த்து வாதம் செய்து வெல்லும் வல்லமையை வேண்டி
இறைவன்பால் திருப்பதிகம் ஒன்று பாடினார். சம்பந்தரைக்
கண்டதும் முடங்கிக் கிடந்த சைவர்களும்
எழுந்தனர். மன்னனின் தடையை மீறி சம்பந்தர் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்.
முடங்கிக்கிடந்த சைவர்களுக்கு இந்தச் செயல் புத்துணர்வை அளித்தது. மதுரையில்
வாகீசமுனிவர் என்பவர் தங்கியிருந்தார். அவர் சம்பந்தரை தனது திருமாளிகைக்கு
அழைத்துச் சென்று தங்க வைத்தார்
இதைக் கண்ட சமணர்கள் கொதித்தெழுந்தனர். இதற்கிடையே மதுரை வந்த சம்பந்தரைப்பற்றி பல இல்லாதது பொல்லாதது கூறி கண்டு
முட்டு கேட்டு முட்டு என்று பாண்டியனிடம் முறையிட்டனர்
வெண்பொடி பூசுந் தொண்டர்
விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள்
கேட்டுமுட் டியானுங்
காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும்
பரிசுவே றில்லை என்றான்
சமணர்களின் கலக்கத்தைச் சேக்கிழார்
இவ்வாறு காட்டியுள்ளார்.
கோபப்பட்ட சமணர்கள் மன்னன் அநுமதி பெற்றுத்
திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரம் ஜெபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு
தீங்கிழைக்கும் ஆற்றல் அற்றுப் போனது. அதில் எந்தப் பயனும் இல்லாது போகவே தாங்களே இரவில் மடத்திற்குத் தீ
வைத்தனர்.திருமடம் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட சம்பந்தர் கொதித்து விட்டார்.
மாளிகைக்குள் சிக்கிக் கொண்ட அவரை வெப்பம் வாட்டியது. இளம் தளிராயிற்றே அவர்! அந்த
வேதனையைப் பொறுத்துக் கொண்டு
“செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல் என்று அருள் செய் எனை,
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே
என்று பாடலின் கடைசி வரியாக, இந்த துன்பம் தனக்கு ஏற்பட காரணமானவன் பாண்டியன் என்பதால், இந்தத் தீ அவனையே சாரட்டும் என்ற ரீதியில் கடைசி வரியை முடித்தார்.
அவர் பாடி முடித்தாரோ இல்லையோ... பஞ்சணையில் சந்தனம் பூசி குளுகுளுவென்ற தென்றலில்
படுத்திருந்த பாண்டியன் உடலில் வெப்பம் பற்றிக் கொண்டது. அவன் அலறினான். கடும்
ஜுரம் அடித்தது. வைத்தியர்கள் வந்தார்கள். பல மருந்துககைளக் கொடுத்தார்கள். அவனது
வெப்பத்தைத் தணிக்க மயில்தோகையால் வருடினார்கள். எதற்கும் பலனில்லை. சமணர்களோ
தங்களது மந்திரங்களை எல்லாம் பிரயோகித்துப் பார்த்தார்கள். அந்த மயிற்பீலிகைகள் யாவும் வெப்பத்தால் வெந்து நீறாயின! திருஞான
சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர்கள் செய்த தீங்கினால்தான் இந்தச் சுரம் வந்துள்ளது, அவர் வந்தாலொழிய இது தீராதென்று என்று அரசியார் உறுதியாகக் கூற
மன்னன், "அவர் என் சூலை நோயைப் போக்கிவிட்டால் சமணத்தை விட்டொழிப்பேன். அவரை
அழைத்து வருவீர்'' எனக் கட்டளையிட்டான். அதனால், உடனே சம்பந்தரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். சம்பந்தர்
அரண்மனைக்கு எழுந்தருளினார்;
சமணர்கள் அவரது வருகையை விரும்பவில்லை.
அதனால், அரசனிடம் சென்று சம்பந்தர் வந்தால் சமண சமயம் அழிந்துவிடுமென்றும், அவரை வராமல் தடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஆனால், அரசன் அவர்கள் சொல்லுக்கு உடன்படவில்லை. சம்பந்தரையும் சமணர்களையும்
தன்னெதிரில் ஒன்று கூடுமாறு சொல்லினன். இருவரில் எவர் தங்கள் தெய்வத் தன்மையால்
தன்னுடைய நோயைத் தீர்த்தாலும், அவர்கள் சொல்வது போல் கேட்பதாகப்
பாண்டியன் கூறினான். ஞானசம்பந்தரும் சமணர்களும் அதற்கு உடன்பட்டனர். சமணர்கள்
தங்கள் மந்திர வித்தையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்பதென்றும், சம்பந்தர் தமது வன்மையால் வலப் பாகத்து நோயைத் தீர்ப்பதென்றும், முடிவாயிற்று.
முதலில், சமணர்கள் தங்கள் மந்திரத்தை ஓதி, மயில் தோகையால் அரசனது இடப் பக்கத்தைத் தடவினர். தடவியவுடன், நோய் குறைவதற்கு மாறாகப் பன்மடங்கு பெருகியது. ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, அரசனது வலப்பாகத்தில் திருநீற்றினைத் தடவ முயன்றார். உடனே
சமணர்கள் “அரசே! இந்தச் சிறுவன் உங்களை மயக்கப்
பார்க்கிறான். இந்த திருநீறைக் கையில் எடுக்க விடாதீர்கள்”, என்றனர். மன்னன் என்ன செய்வதென தெரியாமல் விழிக்க, சம்பந்தர் வேறு ஏதும் வேண்டாம். கோயில் மடைப்பள்ளி சாம்பலைக் கொண்டு
வாருங்கள், என்றார். சாம்பல் வந்தது. தடவியவுடனேயே வலப்பக்க நோய் இருந்தவிடம்
தெரியவில்லை. அரசன் சம்பந்தரது பெருமையை உணர்ந்தான்; சமணர்களையெல்லாம் அவ்விடத்தைவிட்டு உடனே அகன்று விடுமாறு
கட்டளையிட்டான். அவர்கள் அரசனது கட்டளைக்கு அஞ்சி உடனே சென்றுவிட்டனர். அரசன்
சம்பந்தரை வணங்கித் தன்னுடைய இடப்பாகத்து நோயையும் தீர்க்குமாறு வேண்டிக்
கொண்டான். சம்பந்தரும் இடப் பக்கத்தில் திருநீறு தடவ , அந்நோய் மறைந்தது; நோயோடு அவனது கூனும் மறைந்தது.
நெடுநாளாக இருந்த கூனும் சுரநோயும் நீங்கப் பெற்ற பாண்டியன், சம்பந்தருக்கு நன்றி தெரிவித்தான். அப்படியும் சமணர்கள் அடங்கவில்லை
சமணர்கள் சம்பந்தரை வெல்லத் தங்கள்
அனல் வாதம், புனல் வாதம் என்ற இரு வாதங்களுக்கு அவரை அழைத்தனர்.சமணர்கள் பெரு
நெருப்பை மூட்டினர். சம்பந்தர் தான் பாடிய தோவாரத் திருமுறையில் கயிறு சாத்தி, "போகமார்த்த'
என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து "தளரிள வளரொளி' என்ற பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அது வேகாமல் விளங்கியது!
சமணர்கள் தங்கள் ஏடுகளை நெருப்பில் இட, அவை வெந்து சாம்பலாயின! அனல் வாதத்தில்
தோற்ற சமணர்கள் உடனே புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவது என்றும்
முடிவெடுத்தனர். சம்பந்தர் அதற்கும் உடன்பட்டார்.
வைகை ஆற்றின் நீரில் சமணர்கள் தங்கள்
ஏடுகளை இட, அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன! பின்பு சம்பந்தர் தன் ஏட்டை
இட, அது நீரை எதிர்த்து வந்தது! குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம்
திருவேடகம் என்று அழைக்கப்பட்ட இடம். மும்முறையும் தோற்ற சமணர்கள் தங்கள்
பந்தயப்படி கழுவேறி மாய்ந்தனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்கியதுமல்லாமல்
அவன் கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறன் ஆயினன்! பின்பு சைவத்தை ஏற்று ஆட்சி
புரியலானான்
இப்படி சைவம் மீண்டும் தழைத்தோங்க
அயராது பாடுபட்ட மங்கையர்கரசியார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக்
கருதப்படுகிறார். திருஞான சம்பந்தர் இவரைப் பற்றி பதினோரு பாடல்கள் பாடியுள்ளார்.
அவரை
மங்கையருக்கு தனி அரசி
எங்கள் தெய்வம்
என்று சேக்கிழார் பாடியுள்ளார்.
மற்றொரு பழங்கணக்குடன் மீண்டும்
சந்திக்கிறேன்...............
No comments:
Post a Comment