வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 388
நேற்றைய தொடர்ச்சி
முனிவர் மேலும் சொல்லிக்கொண்டே போகிறார் “ஆகையால் கேள்! கழுகரசே! கவலையுற வேண்டாம். இத்தகைய உத்தமியான ஜானகியைத் தேடிக் கொண்டு இங்கு வருவார்கள் ஸ்ரீ இராம தூதர்களான வானரர்கள். அவர்களுக்கு நான் சொன்னதையும் ஸ்ரீ இராஜ மகிஷியைப்பற்றியும் நீ தெரிவிப்பாயாக. இதைச் செய்ததும் நீ உன் வலிவையும் இறக்கைகளையும் திரும்பப் பெறுவாய். அதை எதிர்பார்த்து இங்கேயே தங்கியிரு. இப்பொழுதே உனக்குச் சிறகுகள் உண்டாக்க என்னால் முடியாது.
“இது முக்கியமான தேவ காரியம். அந்த அரச குமாரர்களுக்காகவும், பிரம்மம் உணர்ந்தவர்களுக்காகவும், தருமத்திற்காகவும், தேவர்களுக்காகவும், முனிவர்களுக்காகவும், இந்திரனுக்காகவும் நீ இந்த சேவையைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். நானும் அம்மானிட திலகங்களான மகான்கள் ஸ்ரீ இராம இலக்ஷ்மணர்களைத் தரிசிக்க ஆவல் உள்ளவன். ஆனால் எனது உடல் அவ்வளவு காலம் உயிரை வைத்துக் கொள்ள சக்தியற்றது. ஆகவே நீ இந்த சேவையைச் செய்து முடிப்பாயாக. உன் சிறகுக்கும், வலிவும் மீண்டு வருமளவும் காலம் காத்திரு என்று ஆறுதல் சொல்லிப் போனார். நான் உங்கள் வருகைக்காக காத்து நிற்கிறேன்,”
இவ்வாறு சம்பாதி சொல்லிகொண்டிருக்கும் பொழுதே தனது உடலில் புதிய இறக்கைகள் தோன்றுவதை உணர்ந்தது. ஸ்ரீ இராம காரியத்தில் ஈடுபடுவர்களுக்கு எதுதான் கைகூடாது என்ற நம்பிக்கை ஒருபுறம். எண்ணாயிரம் வருடங்கள் இதற்காகக் காத்திருந்து இது உண்மையே என்று தனக்கும் உலகத்தொருக்கும் என்றென்றும் எடுத்துக் காட்டவே வாய்ப்புக் கிடைத்ததைப் பற்றியும் மா முனியின் வாக்கு ஒரு நாளும் பொய்த்துப் போகாது என்ற நம்பிக்கையும் செயலில் முடிவு பெறுவதைப் பற்றியும் அவன் மனம் பூரித்தது.
அவன் வானரர்களின் புது உணர்ச்சியைச் சிறப்புறச் செய்ய மேலும் சொல்லிக்கொண்டே போகிறான் “இராம தூதர்களே! இராம காரிய வீரர்களே! மகத்தான இயக்கத்தின் பெரு வீரர்களே! உங்கள் வரவை எதிர்பார்த்து நூறு வருடங்கள் காத்திருந்தேன். இன்றுதான் என் எண்ணம் நிறைவேறிற்று. நல்லவேளையாக அந்த சுபார்சுவன் இராவணனையும் வைதேகியையும் எதிர்த்து ஒழிக்கவில்லை.அவன் ஏதாவது செய்திருந்தால் உங்கள் முயற்சி வீணாகியிருக்கும். எனது விருப்பமும் நிறைவேறி இருக்காது. இதுதான் தெய்வ சங்கல்பம் போலும். இதை உணராது நான் அவனைக் கடிந்து பேசினேன். அபகரிக்கப்பட்டு கதறிக்கொண்டு செல்லும் மைதிலியைக் காக்காமலும் கொடிய அரக்கனை மாய்க்காமலும் விட்டுவிட்டது உனக்கு அழகாவென்று கோபித்தேன். நீசனானாலும் அவன் சரணடைந்த பின் அவனை வதைப்பது நீதியாகுமோவென்றான் மைந்தன். அந்த உண்மை இப்பொழுது நன்கு பலனளிக்கிறது. ஆகவே இராவணனைத் தேடுவது உங்கள் பொறுப்பாகிறது. உங்கள் ஆற்றல் வெற்றி அளிக்குமென்று உறுதி கூறுவேன்” என்று அவன் சொல்லிகொண்டிருக்கையில், சம்பாதியின் உடலிலிருந்து இரு சிறகுகள் முளைத்து வெளிவர ஆரம்பித்தன. புளகாங்கிதமடைந்தான் சம்பாதி. மயிர்கூச்சலுடன் பிரமித்து நின்றனர் வானரர்கள்.கழுகரசனின் வாய் எதேச்சையாக ‘இராமா ‘இராமா’ என்று உச்சரிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்தவர்கள் எல்லோர் மனத்திலும் அத்தாரக மந்திரம் எதிரொலி எழுப்பி அவர்கள் அறியாமலே ‘இராம ‘இராம’ வென்று ஆவலுடன் உச்சரிக்க ஆரம்பித்தன. புதிய வடிவம் பெற்றான் சம்பாதி. எங்கும் ஆரவாரம்.
தொடரும்
No comments:
Post a Comment