Monday, December 15, 2025

 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

சம்பாதியின் வருகை

பதிவு எண் 387

நேற்றைய தொடர்ச்சி

சீதையைப் பற்றி தகவல் அறிந்து கொண்ட வானரர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருந்த சாகும் வரை உண்ணாவிரதத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு மகிழ்ந்தனர். அவர்கள் சம்பாதியைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். மறுபடியும் திரும்பும்பொழுது ஜாம்பவான் “இராவணன்தான் சீதையைக் கடத்தினான் என்பதை எவ்வாறு கேட்டு அறிந்தாய்” என்று கேட்டான்.

அதற்கு சம்பாதி “என் இறகுகள் எரிந்த பிறகு என் மகன் ‘சுபாஷ்வன்’ என்னைக் காப்பாற்றி வந்தான். எனக்குத் தினம் உணவு கொண்டு வருவான். ஒரு நாள் நான் பசியோடு இருந்தேன். சுபாஷ்வன் உணவு கொண்டுவராமல் திரும்பினான்.நான் அவனைக் கடிந்து கொண்டேன். அப்போது அவன் அதற்கான காரணத்தைக் கூறினான் “ இன்று நான் உணவைத் தேடிக் கொண்டிருந்த பொழுது ஆற்றல் மிகுந்த ஒரு பெரிய இராக்ஷசன் ஒரு பெண்ணை ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்வதைக் கண்டேன். அவர்கள் இவர்களையும் பிடித்து உனக்குத் தீனியாக கொண்டு வர விரும்பினேன். ஆனால் அந்த இராக்ஷசன் மிகவும் நட்புடன் தன்னைப் போகவிடும்படி கேட்டுக் கொண்டான். என்னால் அவன் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. அவன் சென்ற பிறகு சித்தர்கள் வந்து அவன் இராக்ஷஸ அரசன் இராவணன் என்று தெரிவித்தனர். இராக்ஷஸ அரசன் என்னைக் கொல்லாது விட்டது எனது அதிர்ஷ்டம் என்று தெரிவித்தனர்”


தனது நட்பினால் வானரங்களுக்கு தன்பால் ஏற்பட்டுள்ள நம்பிக்கையைக் கண்ட சம்பாதி தனது சரித்திரத்தைத் தொடர்ந்தது.”நான் விந்திய மலையில் விழுந்த பிறகு ஆறு நாட்கள் நினைவில்லாமல் கிடந்தேன். நினைவு வந்ததும் நிசாகரன் ’ என்னும் முனிவரின் அருகில் இருப்பதைக் கண்டேன். அவர் எனது இறகுகள் எரிந்த காரணத்தைக் கேட்டார். அவரிடம் முழு விவரத்தையும் தெரிவித்தேன்.

நிசாகர மகரிஷி ஸம்பாதியின்‌ வரலாற்றைக்‌ கேட்டார். ‌. அவன்‌ புலம்பி அழுது உயிர்‌ மாய்க்க எண்ணியதையும்‌ பார்த்துக்‌ கொஞ்சநேரம்‌ சிந்தனையில்‌ ஆழ்ந்தார். தவத்தால் சித்திபெற்ற அவர் அகக் கண்ணில் என்ன கண்டனரோ? ஸம்பாதியை நோக்கிப் ‌ புன்முறுவல் செய்து முகக்காந்தியால் புத்துயிர்‌ அளித்தும்‌ பின்வருமாறு இனிது மொழிந்தார்.


“அப்பனே! சம்பாதி! அழாதே! கண்ணீரைத் துடைத்துக் கொள். யாவருக்கும் உண்டு இறைவனருள் என்று உணர்வாயாக. என் தவ மகிமையால் அகக்கண்ணால் எல்லாம் புலனாகிறது. ஆகையால் கவலை வேண்டாம். நன்றாகக் கவனி. இக்ஷ்வாகு குலத்தில் கீர்த்திமானான தசரத சக்ரவர்த்திக்கு மகா தேஜஸ் பொருந்திய புதல்வன் ஒருவர் பிறக்கப் போகிறார். அவர் சத்தியத்தில் ஊன்றியவர் . அதுவே அவருடைய ஜீவசக்தி. தந்தையின் கட்டளைப்படி தம்பி இலக்ஷ்மணனுடன் கானகமேகுவார். அம்மகானின் பத்னியாகிய சீதை என்ற உத்தமி. அவருடன் கூடவே வருவாள். அப்போது தேவர்களாலும் அசுரர்களாலும் கொல்ல முடியாதவனான இராட்சதன் இராவணன் அவளை ஜனஸ்தானத்திலிருந்து திருடிக் கொண்டு போவான், உண்மைப் பதிவிரதை அவ்வம்மையார் கொடிய அரக்கன் என்ன முயற்சி செய்த போதிலும் அவனுக்கு இசையாமலும் அவனை கண்ணெடுத்தும் பாராமலும் துக்கத்தில் மூழ்கியவளாய் கணவனின் நினைவிலேயே உயிர் வைத்திருப்பாள்.


அவள் நிலையைக் கண்டு பசி, தாகம், களைப்பு மேலிடாதபடி அவளை இரட்சிக்கும்பொருட்டு இந்திரன் தேவர்க்கும் கிடைப்பதற்கரிய தேவ அமுதத்தை வைதேகியிடம் அனுப்புவான். அதை அவள் பெற்று இது இந்திரனிடமிருந்து வந்ததாகையால் உத்தமமானததென்று அறிந்து அது தன் கணவருக்கு சேரவேண்டியதென்று தீர்மானித்து அதைத் தன் முன்வைத்து “இது ஸ்ரீ இராகவனுக்குச் சமர்ப்பணம். எனது தலைவனும் கணவனுமான ஸ்ரீ இராமச்சந்திரன் தம்பி இலக்ஷ்மணனுடன் இப்போது உயிருடன் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் அமரர்களாகி விட்டிருப்பினும் சரி. இது அவர்களுக்கே உணவாகட்டும் என்று சொல்லி அதைத் தரையில் வைத்து நிவேதனம் செய்துவிடுவாள்.

தொடரும்

No comments: