Sunday, December 14, 2025

 



பழங்கணக்கு 


கணக்கு பழையது: பதிவு புதியது

 

 

ஒருவர் படுக்கலாம்,

 இருவர் இருக்கலாம்,

 மூவர் நிற்கலாம்

 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு: பணி நிமித்தம் எனக்குத் திருச்சியிலிருந்து எர்ணாகுளத்திற்கு அவசரமாகச் செல்ல வேண்டியதிருந்தது. டிசம்பர் கடைசி வாரம். கிறிஸ்தமஸ் பண்டிகை பள்ளி கல்லூரிகள் விடுமுறை. ரயில், பேருந்து எதிலும் டிக்கட் கிடைக்கவில்லை.திருச்சியிலிருந்து இரவு ஒரு ரயில் புறப்படும். அங்கிருந்த ஒருவர் முன்னதாகவே சென்றால் பதிவு செய்யப்படாத கோச்சில் இடம் பிடித்துவிடலாம் என்று சொல்ல நானும் விரைந்தேன். நடைமேடையில் இரயிலைக் கண்டவுடன் மகிழ்ச்சி. ஆனால் முன்பதிவில்லாத கோச் அருகில் சென்றவுடன் அதிர்ச்சி. உள்ளே கூட்டம் அலை மோதியது. நானும் அவர்களுடன் ஐக்கியமானேன். மேலும் மேலும் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. மூச்சுத் திணறியது. விழி பிதுங்கியது. நின்று கொண்டே முழுப் பயணமும் கழிந்தது.

 

சமீபத்தில் ஆழ்வார்கள் பற்றி படித்துக் கொண்டிருந்தபோது "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம்" என்ற சொற்றொடரைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பயணம் நினைவில் வந்தது.

 

 ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின் எல்லா குணங்களையும் அவனருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம். மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள். அதில் முதாலாழ்வார்கள் மூவர். பொய்கை ஆழ்வார்: பூதத்தாழ்வார்; பேயாழ்வார்.  திருக்கோவிலூரில் விண்ணகரத்தில் பெருமாளைத் தரிசிக்கப் பொய்கை ஆழ்வார் வந்தார், இரவு நேரம் கொட்டும் மழை, கடுங்குளிர் அங்கிருந்த யாருமில்லாத குடிசைக்குள் சென்று கதவைத் தாழிட்டுப்  படுத்துக்கொண்டார்.. யாரோ கதவைதட்டி உள்ளே மழைக்கொதுங்க இடம் கேட்டார்.  ஒருவர் படுக்கலாம்,” என்று பொய்கை பதில்சொன்னார். ஒருவர் படுக்கலாம் எனில் இருவர் இருக்கலாம்,” என்று மீண்டும் வேண்டுகோள் வந்தது. கதவைத் திறந்து அவரை பொய்கையார் அனுமதிக்க, இருவரும் இருளில் அமர்ந்தனர். வந்தவர் பூதத்தாழ்வார் என்பது பொய்கையாருக்கோ இருந்தவர் பொய்கையார் என்று பூதத்தாருக்கோ தெரியாது. அப்போழுது மூன்றாம் ஒருவர் கதவை தட்டி இடமுள்ளதா? என்று வினவினார். இருவர் இருக்கலாம்,” என்று இவர்கள் பதில் சொல்ல, “இருவர் இருக்கலாம் எனில் மூவர் நிற்கலாம்,” என்று அவர் கேட்க, கதவைத் திறந்து உள்ளே அழைத்தனர். இந்த மூன்றாம் மனிதர் பேயாழ்வார். மூன்று ஆழ்வாரும் மற்றொருவரை யாரென்று தெரியாமல் இருளில் நிற்க திடீரென்று, கதவு திறக்காமலே யாரோ உள்ளே வந்ததுபோலும் மூவர் நிற்கும்மிடல் நால்வர் திணிந்து திகைப்பது போல் ஒரு நெரிசலை உணர்ந்தனர்.

 

பொய்கையாழ்வார் தொடங்குகின்றார் அந்தாதியை.

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

 

அதைத் தொடர்ந்து பூதத்தாழ்வார் பாடுகின்றார்

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

 

இவர்கள் ஏற்றிய விளக்கொளியில் பெருமானைக் கண்டார் பேயாழ்வார்.

 

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு

மருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கி ளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கங் கைக் கண்டேன்

என்னாழி வண்ணன் பாலின்று” 

என்று பேயாழ்வார் பாடினார்.

 

மூவரும் திருமாலைக் கண்டனர். மூவரும் இறைஅருள் பெற்றவர்கள் ,உடனே பாடல் பிறந்தது.

 

இட நெருக்கடியால் விழிபிதுங்க, மூச்சுத் திணற நின்ற நான் என்ன பாட்டு பாடியிருப்பேன்?

 

மற்றொரு பழங்கணக்குடன் மீண்டும் சந்திக்கிறேன்...............


No comments: