வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 394
நேற்றைய தொடர்ச்சி
திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். முந்தைய பதிவில் சிலவற்றைப் பார்த்தோம். இப்பதிவில் சில பாடல்களைப் பார்ப்போம்.
=========================================
அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே
===================================
யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.
=========================================
பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
===========================
பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.
=======================================
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.
=================================
தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.
===========================================
கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே
=================================
சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.
இது மட்டுமல்ல ஐந்தாம் நூற்றாண்டில் சாத்தானார் இயற்றிய மணிமேகலை என்ற நூலிலும் சம்பாதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
=============================
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
===============================
மணிமேகலை கதைப் பொருள் புகார் நகரைச் சுற்றி நடக்கிறபடியால் அந்தப் புகாரின் அருகே சம்பாதி தங்கி இருந்த சம்பாதி வனமும் இருந்துள்ளது என்று தெரிகிறது. அது தற்போது பெருந்தோட்டம் என வழங்கும் ஊராகும்.
தொடரும்
No comments:
Post a Comment