வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் அறிவுரை
பதிவு எண் 384
நேற்றைய தொடர்ச்சி
மேலும் அரசன் கட்டளையை நிறைவேற்ற உறுதியும் ஆற்றலும் கொண்டு வெளிக்கிளம்பினேன். அதைச் செய்து முடிக்காது சக்தியற்றவனாய் மனந்தளர்ந்து தோல்வியுடன் கிஷ்கிந்தைக்குச் சென்று மானமிழந்து உயிர்வாழ்வது எனக்குப் பெருமையாகுமோ? எம் போன்ற குற்றவாளிகளுக்குச் சிறைவாசம் ஏற்ற தண்டனைதான் என்பது தெளிவு. ஆயுள் வரை கைதியாய் வாழ விரும்புகிறவன் எவன்? ஆகையால் நான் இங்கேயே உண்ணாவிரதம் கொண்டு உயிரைவிடத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் எனக்கு விடையளித்துவிட்டு ஹனுமன் சொல்லியபடி கிஷ்கிந்தைக்கு திரும்பிப் போகலாம். நீங்கள் போய் ஸ்ரீ இராமலக்ஷ்மணர்களுக்கு எனது நமஸ்காரத்தைத் தெரிவியுங்கள். எம் அரசனுக்கு என் வணக்கத்தைச் சமர்ப்பியுங்கள்.. என் அன்னைகளான ருமைக்கும் தாரைக்கும் என் வந்தனத்தைச் செலுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு மனம் வெறுத்து தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பி வடக்கில் தலைவைத்து படுத்துவிட்டான்.
அங்கதனின் இந்த விபரீதமான முடிவைக் கண்ட மற்ற வானரங்களின் மனம் கலங்கியது. அவர்களும் தனித்திருக்க விரும்பவில்லை. அங்கதன் சொன்ன காரணங்கள் அவர்களுக்கு ஏற்புடையதாகத் தெரிந்தன. தங்களுக்குத் தலைவனைப் பின் பற்றுவதைவிட வேறு வழியில்லை என்று உணர்ந்தனர். அவர்கள் எல்லோரும் அங்கதனனைச் சுற்றி அமர்ந்தனர்..
உட்கார்ந்தவண்ணம் அவர்கள் இதுவரை நடந்தவற்றைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.
==========================================
रामस्य वन वासम् च क्षयम् दशरथस्य च || ४-५५-२१
जनस्थान वधम् चैव वधम् चैव जटायुषः |
हरणम् चैव वैदेह्या वालिनः च वधम् तथा |
राम कोपम् च वदताम् हरीणाम् भयम् आगतः || ४-५५-२२
========================================
ஒருவன் தசரதனின் முடிவையும், இராமனின் வனவாசத்தைப் பற்றியும் சொல்லி முடித்தான். இன்னொருவன் ஜனஸ்தான சம்பவத்தையும் வைதேகி அபஹரிக்கபட்டதையும் சொன்னான்.
==========================================
स सुखी गृध्र राजः तु रावणेन हतो रणे |
मुक्तः च सुग्रीव भयात् गतः च परमाम् गतिम् || ४-५६-१३
जटायुषो विनाशेन राज्ञो दशरथस्य च |
हरणेन च वैदेह्याः संशयम् हरयो गताः || ४-५६-१४
=========================================
மற்றொருவன் இராவணனை எதிர்த்து ஜடாயு வீரத்துடன் போராடியதையும் இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும் பற்றி எடுத்துரைத்தான். மற்றொருவன் இராம சுக்ரீவன் இவர்களுக்கிடையே ஏற்பட்ட உடன்பாடு பற்றியும் அதனால் தென் திசை வந்த வானரர்களின் கதியைப் பற்றியும் கூறினான். இதைக் கேட்கக்கேட்க அவர்களின் ஆர்வமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன.
தொடரும்..................
No comments:
Post a Comment